அத்தியாயம் 14
சுத்தமான மற்றும் அசுத்தமான உணவுகள்
“நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக. நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களையே யெகோவா தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார். “அருவருப்பான ஒன்றையும் சாப்பிடவேண்டாம். நீங்கள் சாப்பிடுவதற்கேற்ற மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், மலை ஆடுகளுமே. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்; அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முயலும், குழிமுயலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. பன்றியும் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக. “தண்ணீரிலிருக்கிற எல்லாவற்றிலும் துடுப்பும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம். 10 துடுப்பும் செதிளும் இல்லாத யாதொன்றையும் சாப்பிடக்கூடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. 11 “சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம். 12 நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், 13 பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும், 14 சகலவித காகங்களும், 15 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும், 16 ஆந்தையும், கோட்டானும், நாரையும், 17 கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும், 18 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே. 19 பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் சாப்பிடக்கூடாதவைகள். 20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம். 21 “தானாக இறந்துபோன எதையும் சாப்பிடவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற அந்நியனுக்கு அதை சாப்பிடக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்த மக்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
தசமபாகங்கள்
22 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, 23 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக. 24 உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொண்ட இடம் உனக்கு வெகுதூரமாக இருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகுதொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகமுடியாமல் இருக்குமானால், 25 அதைப் பணமாக மாற்றி, பணமுடிப்பை உன் கையிலே எடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போய், 26 அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக. 27 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால் அவனைக் கைவிடாதே. 28 “மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். 29 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும், திக்கற்றவனும், விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.