சங்கீதம் 105
யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள்,
அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்;
அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்;
யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;
அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.
அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே!
அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும்,
அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா,
அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும்,
ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். 10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும்,
இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
11 உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.
13 அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும்,
ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.
14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல்,
அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
15 நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும்,
என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
17 அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்;
யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
18 அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்;
அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.
19 யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை
அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்;
மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.
21 தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும்,
தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
22 அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும்,
தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.
23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்;
யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.
24 அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து,
அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.
25 தம்முடைய மக்களைப் பகைக்கவும்,
தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும்,
அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
26 தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும்,
காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
28 அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்;
அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.
29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி,
அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.
30 அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது;
அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி,
அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.
33 அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து,
அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
35 அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து,
அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
36 அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும்,
அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.
37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்;
அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
38 எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து,
இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.
40 இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்;
வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.
42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும்,
தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
43 தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும்,
தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,
44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும்,
தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
45 அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்;
அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
அல்லேலூயா.