சங்கீதம் 89
எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல்.
யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;
உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.
கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்;
உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன்.
என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து,
என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:
என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி,
தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்,
பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்?
பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்,
தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்?
உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்;
அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.
10 நீர் ராகாபை*
வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்;
உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.
11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது,
பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும்
நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்;
தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
13 உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது;
உம்முடைய கை பராக்கிரமமுள்ளது;
உம்முடைய வலதுகை உன்னதமானது.
14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்;
கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
15 கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;
யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
16 அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு,
உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
17 நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்;
உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
18 யெகோவாவால் எங்களுடைய கேடகமும்,
இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி:
உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து,
மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
20 என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்;
என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்;
என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும்.
22 எதிரி அவனை நெருக்குவதில்லை;
துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23 அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி,
அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
24 என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்;
என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.
25 அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும்,
அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
26 அவன் என்னை நோக்கி:
நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
27 நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும்,
பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
28 என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்;
என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும்,
அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன்.
30 அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல்,
என்னுடைய வேதத்தை விட்டு விலகி;
31 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;
32 அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும்,
அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
33 ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும்,
என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.
34 என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும்,
என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.
35 ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன்,
தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன்.
36 அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்;
அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும்,
வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)
38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்;
நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர்.
39 உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு,
அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
40 அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு,
அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர்.
41 வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்;
தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.
42 அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி,
அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
43 அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து,
அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
44 அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து,
அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
45 அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி,
அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)
46 எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ?
உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
47 என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்;
மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?
48 மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்?
தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
49 ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு
சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே?
50 ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும்,
நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
51 யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும்,
வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும்
என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.
52 யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும்.
ஆமென். ஆமென்.
* சங்கீதம் 89:10 89:10 ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9 87:4. ல் குறிப்பிடப்பட்ட ராகாப் புராணக் கதைகளிகளின் கடல் பாம்பு ஆகும் சங்கீதம் 89:12 89:12 தாபோர் ஒரு மலை. கலேலியா ஏரியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 555 அடிகளாகும் சங்கீதம் 89:12 89:12 எர்மோன் ஒரு மலையின் பெயர். கலேலியா ஏரியின் வடகிழக்கில் 75 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இதின் உயரம் 8,940 அடிகளாகும்