ஆகாய்
ஆசிரியர்
தீர்க்கதரிசி ஆகாய் இந்த புத்தகத்தின் ஆசிரியர் என்று ஆகாய் 1:1, சொல்லுகிறது. எருசலேமின் யூதர்களுக்கு நான்கு செய்திகளை பதிவிட்டிருக்கிறார். ஆகாய் 2:3 ன்படி தீர்க்கதரிசி, எருசலேமின் அழிவுக்கு முன்பே ஆலயத்தைப் பார்த்திருக்கிறார். இஸ்ரவேல் ஜாதிகளின் வெளிச்சமாக, தன்னுடைய உரிமையான இடத்தை சொந்தமாக்கிக்கொள்ளும்படி அதிக வாஞ்சையாய் இருக்கிறான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 520 ல் எழுதப்பட்டது.
இது பாபிலோனிய சிறையிருப்பிற்கு பின்பு எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
எருசலேமில் வாழ்ந்த மக்களுக்கும், சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த மக்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த யூதர்கள் அந்த நிலைமையில் திருப்தி அடையாமல், விசுவாசத்தோடு எழுந்து ஆலயத்தை கட்ட முயற்சி எடுக்கும்படி உற்சாகப்படுத்துகிறான், அப்படி ஆலயத்தை கட்டுகிறவர்களை, யெகோவா தேவன் ஆசிர்வதிப்பார் என்றும் உற்சாகப்படுத்துகிறான். முரட்டாட்டம் செய்திருந்தாலும் ஆண்டவரின் காரியத்தில் இடம் உண்டு என்றும் உற்சாகப்படுத்துகிறான்.
மையக் கருத்து
தேவாலயத்தை திரும்ப கட்டுதல்
பொருளடக்கம்
1 ஆலயத்தைக் கட்ட அழைப்பு. — 1:1-15
2 தேவனில் தைரியம் கொள்ளுங்கள் — 2:1-9
3 பரிசுத்தமான வாழ்க்கைக்கு அழைப்பு — 2:10-19
4 வருங்காலத்தில் நம்பிக்கை வைக்க அழைப்பு — 2:20-23
அத்தியாயம் 1
தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்குக் கட்டளை
ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் முதலாம்தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: இந்த மக்கள் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மேல்தளமுள்ள உங்கள் வீடுகளில் குடியிருக்கவேண்டிய காலம் இதுவோ? இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் அதிகமாக விதைத்தும் கொஞ்சமாக அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியாகவில்லை; குடித்தும் நிறைவடையவில்லை; நீங்கள் உடை உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாக அதைச் சம்பாதிக்கிறான். உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்மேல் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை வெளிப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 10 ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடுக்காமலும் போனது. 11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சைரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனிதர்களின்மேலும், மிருகங்களின்மேலும், கைவேலை அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
மக்களின் கீழ்ப்படிதல்
12 அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், இஸ்ரவேல் மக்களில் மீதியான* 1:12 பாபிலோனின் சிறையிருப்பில் மீந்தவர்கள் அனைவரும் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கும், தங்கள் தேவனாகிய யெகோவா அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், மக்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள். 13 அப்பொழுது யெகோவாவுடைய தூதனாகிய ஆகாய், யெகோவா தூதனுப்பிய வார்த்தையின்படி மக்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 14 பின்பு யெகோவா செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும் மக்களில் மீதியான எல்லோருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள். 15 தரியு ராஜாவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் தேதியிலே இது நடந்தது.

*அத்தியாயம் 1:12 1:12 பாபிலோனின் சிறையிருப்பில் மீந்தவர்கள்