௨௬
அகிரிப்பா மன்னன் முன் பவுல்
௧ அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான்.
௨ அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
௩ நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
௪ “எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
௫ இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள்.
௬ தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன்.
௭ நமது மக்களில் பன்னிரண்டு குலத்தினரும் பெறவேண்டுமென நம்பும் வாக்குறுதி இதுவே. இந்நம்பிக்கைக்காக யூதர்கள் தேவனுக்கு இரவும் பகலும் சேவை புரிகின்றனர். எனது மன்னரே, நான் இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை வைத்திருப்பதால் யூதர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்!
௮ தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்?
௯ “நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன்.
௧௦ எருசலேமில் விசுவாசிகளுக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன்.
௧௧ ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன்.
இயேசுவைப் பற்றி பவுலின் சாட்சி
௧௨ “ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள்.
௧௩ நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது.
௧௪ நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது.
௧௫ “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே.
௧௬ எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய்.
௧௭ நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன்.
௧௮ உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திரும்புவார்கள். மேலும் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். என்னை நம்புவதால் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதரோடு அவர்களும் பங்குபெற முடியும்’ என்றார்” என்று கூறினான்.
தன் ஊழியம் பற்றி பவுல்
௧௯ பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன்.
௨௦ மக்கள் அவர்களது இருதயங்களையும் வாழ்க்கைகளையும் மாற்றிக்கொண்டு, தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அவர்களுக்குக் கூற ஆரம்பித்தேன். அவர்கள் மனம் மாறினார்கள் என்பதை வெளிக்காட்டும்படியான செயல்களைச் செய்யுமாறு மக்களுக்குக் கூறினேன். தமஸ்குவிலுள்ள மக்களுக்கு முதலில் இதைக் கூற ஆரம்பித்தேன். பின் எருசலேமுக்கும், யூதேயாவின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு இவற்றைக் கூறினேன். மேலும் யூதரல்லாத மக்களிடமும் நான் சென்றேன்.
௨௧ “எனவேதான் யூதர்கள் என்னைப் பிடித்து, தேவாலயத்தில் என்னைக் கொல்ல முயன்றார்கள்.
௨௨ ஆனால் தேவன் எனக்கு உதவினார். இன்னமும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உதவியால் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் கண்ட மகத்தானதும் எளியதுமானவற்றையும் கூறிக்கொண்டுள்ளேன். ஆனால் நான் எதையும் புதிதாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. பின்னர் நிகழுமென்று மோசேயும் தீர்க்கதரிசிகளும் கூறியவற்றை நான் கூறிக்கொண்டிருக்கிறேன்.
௨௩ தொல்லைகளை அனுபவித்தபின் மரணத்தின்று முதன் முதலில் எழுபவர் கிறிஸ்துவே என்று அவர்கள் கூறினர். மோசேயும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்து யூத மக்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் ஒளியைத் தருபவர் என்று கூறினார்கள்” என்றான்.
அகிரிப்பாவை தன் சார்பாக்க முனைவது
௨௪ பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான்.
௨௫ பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும்.
௨௬ அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே.
௨௭ அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான்.
௨௮ அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.
௨௯ பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான்.
௩௦ அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து
௩௧ ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள்.
௩௨ அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.