௧௦
யூதர்களைப் போல இராதீர்
௧ சகோதர சகோதரிகளே, மோசேயைப் பின்பற்றிய நமது முன்னோர்களுக்கு நேர்ந்தது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: அவர்கள் எல்லாரும் மேகத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல்வழியே கடந்து சென்றார்கள்.
௨ அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள்.
௩ ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள்.
௪ ஒரே வகையான ஆன்மீக பானத்தை அவர்கள் பருகினார்கள். அவர்களோடிருந்த ஆன்மீகப் பாறையில் இருந்து அவர்கள் பருகினர். அந்தப் பாறை கிறிஸ்து.
௫ ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
௬ நடந்தேறிய இக்காரியங்கள் நமக்கு உதாரணங்களாக அமையும். அந்த மக்கள் செய்த தீய காரியத்தைச் செய்ய விரும்புவதினின்று இவை நம்மைத் தடுத்து நிறுத்தும்.
௭ அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள். “மக்கள் உண்பதற்காகவும் பருகுவதற்காகவும் அமர்ந்தனர். மக்கள் நடனமாடுவதற்காக எழுந்து நின்றனர்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
௮ அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர்.
௯ அம்மக்களில் சிலர் செய்தது போல் நாம் கர்த்தரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது. கர்த்தரைச் சோதித்ததால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்கள்.
௧௦ அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள்.
௧௧ அம்மக்களுக்கு நடந்தவை நமக்கு உதாரணங்கள் ஆகும். நமக்கு எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டுள்ளன. அப்பழைய வரலாறுகள் முடிவடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.
௧௨ அதனால், உறுதியாக நிற்பதாக எண்ணும் ஒருவன் விழுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.
௧௩ எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.
௧௪ என் அன்புக்குரிய நண்பர்களே, அதனால் நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகுங்கள்.
௧௫ நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
௧௬ நாம் நன்றியறிதலுடன் பங்குபெறும் ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பங்கிடுவதாகும். நாம் பகிர்ந்துண்ணும் அப்பமோ கிறிஸ்துவின் சரீரத்தைப் பகிர்தலாகும்.
௧௭ ஒரு அப்பம் உள்ளது. நாமோ பலர். ஆனால் அந்த ஒரே அப்பத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். எனவே நாம் உண்மையாகவே ஒரே சரீரமாக இருக்கிறோம்.
௧௮ இஸ்ரவேல் மக்களை நினைத்துப்பாருங்கள். படைக்கப்பட்டவற்றைப் புசிப்பவர்கள் பலிபீடத்துடன் நல்லுறவுகொண்டிருக்கிறார்கள் அல்லவா.
௧௯ விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு முக்கியத்துவம் உடையது என்று சொல்ல நான் முன் வரவில்லை. விக்கிரகம் ஒரு குறிப்பிடத்தக்க பொருள் எனவும் நான் கூறவில்லை.
௨௦ விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பொருள்கள் பிசாசுகளுக்கே கொடுக்கப்படுகின்றன, தேவனுக்கல்ல. நீங்கள் பிசாசுகளோடு எந்தப் பொருளையும் பகிர்ந்துகொள்வதை நான் விரும்பமாட்டேன்.
௨௧ கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும் பிசாசுகளின் பாத்திரத்திலும் நீங்கள் பருக முடியாது. கர்த்தரின் மேசையிலும் பிசாசுகளின் மேசையிலும் உங்களால் உண்ண முடியாது.
௨௨ கர்த்தரை எரிச்சல் கொள்ளச் செய்யலாமா? நாம் அவரைவிட பலசாலிகளா? இல்லை.
உங்கள் சுதந்திரம் எதற்கு?
௨௩ “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை.
௨௪ தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.
௨௫ சந்தையில் விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுங்கள். சரி அல்லது தவறு என்பது பற்றி (அதைச் சாப்பிடுவது தொடர்பாக) எந்தக் கேள்வியையும் கேட்காதீர்கள்.
௨௬ “இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.” ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம்.
௨௭ அவிசுவாசியான ஒரு மனிதன் அவனோடு உண்ணுவதற்கு உங்களை அழைக்கக் கூடும். நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன் வைக்கப்படும் உணவு எதுவாயினும் அதனை உண்ணுங்கள். சாப்பிடத் தகுந்ததா, இல்லையா என அறியும் பொருட்டு வினா எழுப்பாதீர்கள்.
௨௮ ஆனால் ஒருவன் உங்களுக்கு “அது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று கூறினால், பின்னர் அதை உண்ணுவது குற்றமாகும். ஏனெனில் அது குற்றம் என மக்கள் நினைக்கிறார்கள். அதைக் கூறிய மனிதனின் மனச்சாட்சியை நீங்கள் கெடுக்கக் கூடாது.
௨௯ நீங்கள் அது குற்றமென நினைப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மற்ற மனிதன் அதைக் குற்றமென எண்ணுகிறான். அதனால் நான் அந்த இறைச்சியை உண்ணமாட்டேன். மற்றொரு மனிதன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தால் எனது சுதந்திரம் தீர்மானிக்கப்பட நான் அனுமதிக்கமாட்டேன்.
௩௦ நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை.
௩௧ எனவே உண்டாலும், பருகினாலும், வேறு எதைச் செய்தாலும் ஒவ்வொன்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள்.
௩௨ யூதர்கள், கிரேக்கர்கள் அல்லது தேவனுடைய சபையார் தவறிழைக்கும்படிச் செய்யவைக்கிற எந்தச் செயலையும் செய்யாதீர்கள்.
௩௩ நானும் அதனையே செய்கிறேன். எல்லாரையும் எல்லா வகைகளிலும் திருப்திப்படுத்த முனைகிறேன். எனக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றை நான் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அநேக மக்களுக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன். பிறர் இரட்சிக்கப்படுவதற்காக பலருக்குப் பயன்படுவதையே செய்ய முயற்சி செய்கிறேன்.