௧௧
௧ மேதியனாகிய தரியுவின் முதலாம் ஆட்சியாண்டில், மிகாவேல், பெர்சியா அதிபதிக்கு எதிராகப் போர் செய்தபோது நான் அவனுக்கு உதவியாக நின்றேன்.
௨ “இப்பொழுதும், தானியேலே, நான் உண்மையைச் சொல்கிறேன். பெர்சியாவில் மேலும் மூன்று அரசர்கள் ஆளூகைச் செய்வார்கள். பிறகு நாலாவது அரசன் ஒருவன் வருவான். அந்த நாலாவது அரசன் பெர்சியாவை இதற்கு முன் ஆண்ட எல்லா அரசர்களைவிட செல்வந்தனாக இருப்பான். அந்த நாலாவது அரசன் வல்லமையைப் பெறுவதற்கு தனது செல்வத்தைப் பயன்படுத்துவான். அவன், எல்லோரும் கிரேக்க இராஜ்யத்திற்கு எதிராக இருக்கக் காரணமாவான்.
௩ பிறகு மிகவும் பலமும், வல்லமையும் கொண்ட அரசன் வருவான். அவன் பெரும் வல்லமையுடன் ஆள்வான். அவன் விரும்புகிற எதையும் செய்வான்.
௪ அதற்குப் பிறகு அவனது இராஜ்யம் உடைந்துபோகும். உலகின் நான்கு பாகங்களாக அவனது இராஜ்யம் பங்கு வைக்கப்படும். அவனது இராஜ்யம் அவனது பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ பங்கு வைக்கப்படமாட்டாது. அவன் பெற்ற வல்லமையை அவனது இராஜ்யம் பெறாது. ஏனென்றால் அவனது இராஜ்யம் பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
௫ “தெற்கிலுள்ள அரசன் பலமுள்ளவனாவான். ஆனால் அவனது தளபதிகளில் ஒருவன் தெற்கிலுள்ள அரசனைத் தோற்கடிப்பான். அந்தத் தளபதி ஆளத்தொடங்குவான். அவன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான்.
௬ “பிறகு சில ஆண்டுகள் கழிந்ததும் தென் பகுதி அரசனும் அந்தத் தளபதியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். தென் பகுதி அரசனின் மகள், வடபகுதி அரசனை மணந்துகொள்வாள். அவள் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதனைச் செய்வாள். ஆனால் அவளும், தென் பகுதி அரசனும் போதுமான வல்லமையுடைவர்களாக இருக்கமாட்டார்கள். ஜனங்கள் அவளுக்கு எதிராகவும், அவளை அந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். அந்த ஜனங்கள் அவளது குழந்தைக்கு எதிராகவும், அவளுக்கு உதவியவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள்.
௭ “ஆனால் அவளது குடும்பத்திலிருந்து ஒருவன் வந்து தென்பகுதி அரசனின் இடத்தைப் பிடிக்க வருவான். அவன் வடபகுதி அரசனின் படையைத் தாக்கி, அவனது பலம்வாய்ந்த கோட்டைக்குள் நுழைவான். அவன் போர் செய்து வெல்வான்.
௮ அவன் அவர்கள் தெய்வங்களின் விக்கிரகங்களை எடுப்பான். அவன் அவர்களின் உலோக விக்கிரகங்களை எடுப்பான். வெள்ளியாலும், பொன்னாலுமான விலைமதிப்புள்ளவற்றையும் எடுப்பான். அவன் அவற்றை எகிப்துக்கு எடுத்துச்செல்வான். அவன் சில ஆண்டுகள் வடபகுதி அரசனுக்குத் தொல்லை கொடுக்கமாட்டான்.
௯ வடபகுதி அரசன், தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான்.
௧௦ “வடபகுதி அரசனின் மகன்கள் போருக்குத் தயார் செய்வார்கள். அவர்கள் ஒரு பெரும் படையைச் சேர்ப்பார்கள். அந்தப் படை நாட்டை வெள்ளம்போல் வேகமாகக் கடக்கும். அந்தப் படை தெற்கத்தி அரசனின் பலமான கோட்டை வரை தாக்கும்.
௧௧ பிறகு தென்பகுதி அரசன் மிகவும் கோபங்கொள்வான். அவன் வடபகுதி அரசனோடு போரிட படையை நடத்திச் செல்வான். வடபகுதி அரசனுக்குப் பெரும்படை இருக்கும். ஆனால் அவன் போரில் தோல்வியடைவான்.
௧௨ வடபகுதி படை தோற்கடிக்கப்படும். அவ்வீரர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். தென்பகுதி அரசன் மிகவும் பெருமைகொள்வான். அவன் வடபகுதிப் படையில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வான். ஆனால் அவன் தொடர்ந்து வெற்றி பெறமாட்டான்.
௧௩ வடபகுதி அரசன் இன்னொரு படையைப் பெறுவான். அப்படை முந்திய படையைவிட மிகப் பெரியதாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப்பிறகு அவன் தாக்குவான். அப்படைக்கு ஏராளமான ஆயுதங்கள் இருக்கும். அப்படை போரிடத் தயாராக இருக்கும்.
௧௪ “அந்தக் காலங்களில், பல ஜனங்கள் தென்பகுதி அரசனுக்கு எதிராக மாறுவார்கள். உனது சொந்த ஜனங்களில் சிலர் போரை நேசிப்பவர்கள் தென் பகுதி அரசனுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அவர்கள் வெல்லமாட்டார்கள். ஆனால், அவர்கள் இதைச் செய்யும்போது இந்தத் தரிசனத்தை உண்மையாக்குவார்கள்.
௧௫ பிறகு வடபகுதி அரசன் வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள்.
௧௬ “வடபகுதி அரசன் தான் விரும்பியதையெல்லாம் செய்வான். எவரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வல்லைம பெற்று அழகான நாட்டை தன் அதிகாரத்திற்குள் கொண்டுவருவான். அவன் அதை அழிக்கிற வல்லமையையும் பெற்றிருப்பான்.
௧௭ வடபகுதி அரசன் தனது வல்லமை அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி அரசனோடு போரிட முடிவு செய்வான். அவன் தென்பகுதி அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். வடபகுதி அரசன் தனது மகள்களுள் ஒருத்தியைத் தென்பகுதி அரசனை மணந்துகொள்ளச் செய்வான். வடபகுதி அரசன் தென்பகுதி அரசனைத் தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்வான். ஆனால் அத்திட்டங்கள் வெற்றியடையாது, அவன் திட்டங்கள் அவனுக்கு உதவாது.
௧௮ “பிறகு வடபகுதி அரசன் தன் கவனத்தை மத்தியத் தரைக்கடல் கரையோர நாடுகளுக்கு நேராகத் திருப்புவான். அங்குள்ள பல நகரங்களை அவன் தோற்கடிப்பான். ஆனால் பிறகு ஒரு தளபதி அவனது பெருமைக்கும், கலகச் செயல்களுக்கும் ஒரு முடிவு காண்பான். அந்த தளபதி, வடபகுதி அரசன் வெட்கமடையும்படிச் செய்வான்.
௧௯ “அது நடந்தபிறகு, வடபகுதி அரசன் பலமான அரண்களுடைய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான். ஆனால் அவன் பலவீனமுடையவனாக இருப்பான். அவன் விழுவான். அவன் முடிவடைவான்.
௨௦ “அந்த வடபகுதி அரசனுக்குப்பிறகு ஒரு புதிய அரசன் வருவான். அந்த அரசன் ஒரு வரிவசூலிப்பவனை அனுப்புவான். அந்த அரசன் தான் வளமான வழியில் வாழ போதிய செல்வம் உடையவனாக இருக்க இதனைச் செய்வான். ஆனால் சில ஆண்டுகளில் அந்த அரசன் அழிக்கப்படுவான். ஆனால் அவன் போரில் மரிக்கமாட்டான்.
௨௧ “அந்த அரசனைப் பின்தொடர்ந்து ஒரு கொடுமையான வெறுக்கத்தக்க மனிதன் வருவான். அவனுக்கு அரச குடும்பத்தவன் என்ற பெருமை இருக்காது. அவன் தந்திரமான வழியில் அரசன் ஆவான். ஜனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது அவன் இராஜ்யத்தைத் தாக்குவான்.
௨௨ அவன் பெரிய வல்லமை மிக்கப் படைகளைத் தோற்கடிப்பான். அவன் ஒப்பந்தம் உடைய தலைவனையும் தோற்கடிப்பான்.
௨௩ பல நாடுகள் இந்தக் கொடூரமான வெறுக்கதக்க அரசனோடு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வார்கள். ஆனால் அவன் அவர்களிடம் பொய் பேசி ஏமாற்றிவிடுவான். அவன் பெரும் பலத்தைப் பெறுவான். ஆனால் வெகு சிலர் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
௨௪ “வளமான நாடுகள் பாதுகாப்பை உணரும் போது கொடூரமும் வெறுக்கத்தக்கக் குணமும் கொண்ட அந்த அரசன் போய் தாக்குவான். அவன் சரியான காலத்தில் தாக்கி அவனது பிதாக்கள் வெற்றிபெறாத இடங்களில் தான் வெற்றிபெறுவான். அவன் தோற்கடித்த நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வான். அவன் அப்பொருட்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுப்பான். அவன் பலமான நகரங்களைத் தோற்கடித்து அழிக்கத் திட்டம் போடுவான். அவன் வெற்றிபெறுவான். ஆனால் அது குறுகிய காலத்திற்குத்தான்.
௨௫ “அந்த கொடூரமான வெறுக்கத்தக்க அரசனுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி அரசனைத் தாக்குவான். தென் பகுதி அரசன் மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவார்கள். தென்பகுதி அரசன் தோற்கடிக்கப்படுவான்.
௨௬ தென்பகுதி அரசனுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனது படை தேற்கடிக்கப்படும். போரில் அவனது படைவீர்களில் பலர் கொல்லப்படுவார்கள்.
௨௭ அந்த இரண்டு அரசர்களும் ஒருவருக்கு ஒருவர் தீமைச் செய்ய நினைப்பார்கள். அவர்கள் ஒரே பந்தியில் உட்கார்ந்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்வார்கள். அதனால் இருவருக்கும் எந்த நன்மையும் விளைவதில்லை. ஏனென்றால் தேவன் அவர்களது முடிவுகாலத்தைக் குறித்திருக்கிறார்.
௨௮ “வடபகுதி அரசன் பெருஞ்செல்வத்தோடு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். பிறகு அவன் பரிசுத்தமான உடன்படிக்கைக்கு எதிராக தீமைகளைச் செய்ய முடிவுச் செய்வான். அவன் தனது திட்டப்படி செய்தபிறகு, தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான்.
௨௯ “ஏற்ற காலத்தில் வடபகுதி அரசன் தென் பகுதி அரசனை மறுபடியும் தாக்குவான். ஆனால் இந்த முறை அவன் முன்புபோல வெற்றிபெறமாட்டான்.
௩௦ கித்தீமிலிருந்து கப்பல்கள் வந்து வட பகுதி அரசனுக்கு எதிராகப் போரிடும். அக்கப்பல்கள் வந்து அவனை அச்சுறுத்துவதை அவன் காண்பான். பிறகு அவன் திரும்பிப் போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபங்கொள்வான். அவன் திரும்பி, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைவிட்டவர்களை ஆதரிப்பான்.
௩௧ வடபகுதி அரசன் தனது படையை எருசலேம் ஆலயத்தில் பயங்கரமான செயல்களைச் செய்ய அனுப்புவான். அவர்கள் ஜனங்களைத் தினபலி கொடுக்காதபடிக்குத் தடுப்பார்கள். பிறகு அவர்கள் உண்மையிலேயே பயங்கரமான செயல்களைச் செய்வார்கள். அழிவுக்குக் காரணமாகும் அந்தப் பயங்கரமான காரியத்தை ஏற்படுத்துவார்கள்.
௩௨ “வடபகுதி அரசன் பொய்களையும் இச்சகப் பேச்சையும் பயன்படுத்தி பரிசுத்த உடன்படிக்கையைப் பின்பற்றுவதை யூதர்கள் கைவிடும்படி செய்வான். அந்த யூதர்கள் மீண்டும் மிக மோசமான பாவங்களைச் செய்வார்கள். ஆனால் தேவனை அறிந்த, அவருக்குக் கீழ்ப்படிகிற யூதர்கள் பலம் பெறுவார்கள். அவர்கள் திரும்பி எதிர்த்து போரிடுவார்கள்.
௩௩ “அந்த யூதர்களில் ஞானமுள்ளவர்கள் பலருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஆனாலும் ஞானிகள் கூட கொடுமைப்படுத்தப்படுவார்கள். சில ஞானமுள்ள யூதர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் எரிக்கப்படுவார்கள், அல்லது சிறைபடுத்தப்படுவார்கள். சில யூதர்களின் சொத்துக்களும் வீடுகளும் கொள்ளையடிக்கப்படும்.
௩௪ அறிவுமிக்க யூதர்கள் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கொஞ்சம் உதவியும் பெறுவார்கள். ஆனால் அவர்களோடு சேரும் அநேக யூதர்கள் போலிகளாக இருப்பார்கள்.
௩௫ அறிவுமிக்க யூதர்களில் சிலர் தவறுகள் செய்து விழுவார்கள். ஆனாலும் கொடுமைக் காலம் வர வேண்டும். ஏனென்றால் அப்பொழுது அவர்கள் பலமுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் ஆகமுடியும். இது முடிவுகாலம் வரும்வரை இருக்கும். பிறகு, சரியான நேரத்தில் முடிவு காலம் வரும்.
தன்னையே புகழும் அரசன்
௩௬ “வடபகுதி அரசன் தான் விரும்புகிறதையெல்லாம் செய்வான். அவன் தன்னைப் பற்றியே பேசுவான். அவன் தன்னையே புகழுவான். தன்னைத் தேவனை விட பெரியவனாக நினைப்பான். அவன் இதுவரை எவரும் கேட்காதவற்றையெல்லாம் பேசுவான். அவன் தெய்வங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பவருக்கெதிராக அவ்வாறு பேசுவான். அனைத்து தீமைகளும் ஏற்படும்வரை அவன் வெற்றிபெறுவான். தேவன் என்ன திட்டமிட்டிருக்கிறாரோ அது நடைபெறும்.
௩௭ “அந்த வடபகுதி அரசன் தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகைக் செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான்.
௩௮ வடபகுதி அரசன் எந்தத் தேவனையும் தொழுதுகொள்ளமாட்டான். ஆனால் அவன் அதிகாரத்தைத் தொழுதுகொள்வான். அதிகாரமும் வல்லமையுமே அவனது தெய்வங்கள். அவன் பிதாக்கள் தன்னைப் போல் வல்லமையை நேசிக்கவில்லை. அவன் அதிகாரமாகிய தேவனை பொன்னாலும், வெள்ளியாலும் விலைமதிப்புள்ள நகைகளாலும், அன்பளிப்புகளாலும், பெருமைப்படுத்துவான்.
௩௯ “அந்த வடபகுதி அரசன் பலம் வாய்ந்த கோட்டைகளை அந்நிய தெய்வங்களின் உதவியுடன் தாக்குவான். அவன் தன்னோடு சேர்ந்த அயல்நாட்டு அரசர்களுக்கு மிகுந்த மரியாதையைக் கொடுப்பான். அந்த அரசர்களுக்குக் கீழே அவன் பல ஜனங்களை வைப்பான். அவர்கள் ஆளும் நாடுகளுக்காக வரி வசூலிப்பான்.
௪௦ “முடிவின் காலத்தில் தென்பகுதி அரசன் வடபகுதி அரசனோடு போர் செய்வான். வட பகுதி அரசன் அவனைத் தாக்குவான். இரதங்களோடும், குதிரைப்படை வீரர்களோடும், பல பெரிய கப்பல்களோடும் வந்து தாக்குவான். வடபகுதி அரசன் நாட்டை விட்டு வெள்ளத்தைப் போன்று வேகமாக ஓடுவான்.
௪௧ வடபகுதி அரசன் அழகான தேசத்தைத் தாக்குவான். வடபகுதி அரசனால் பல நாடுகள் தோற்கடிக்கப்படும். ஆனால் ஏதோம், மோவாப், அம்மோன் தலைவர்கள் அவனிடமிருந்து காப்பாற்றப்படுவர்.
௪௨ வடபகுதி அரசன் பல நாடுகளில் தன் வல்லமையைக் காட்டுவான். எகிப்தும் தான் எவ்வளவு வல்லமையானவன் என்பதை தெரிந்துகொள்ளும்.
௪௩ அவன் எகிப்திலுள்ள பொன்னும் வெள்ளியுமான எல்லாச் செல்வங்களையும் பெறுவான். லீபியரும், எத்தியோப்பியரும் அவனுக்கு அடிபணிவார்கள்.
௪௪ ஆனால் வடக்கத்தி அரசன் கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான்.
௪௫ கடல்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையில் தனது இராஜ கூடாரத்தை அமைத்துக்கொள்வான். ஆனால் இறுதியில், அத்தீய அரசன் சாவான். அவனது முடிவுகாலம் வரும்போது அவனுக்கு உதவிச் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.”