௧௦
௧ மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச் செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியான ஞானத்தையும், மரியாதையையும் முட்டாள்தனம் கெடுத்துவிடும்.
௨ ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான வழியில் நடத்திச்செல்லும். முட்டாளின் எண்ணங்கள் அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும்.
௩ ஒரு முட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான். எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்று கண்டுகொள்வான்.
௪ எஜமான் உன்மீது கோபத்தோடு இருக்கிறான் என்பதற்காக உனது வேலையை விட்டுவிடாதே. நீ அமைதியாகவும் உதவியாகவும் இருந்தால் பெரிய தவறுகளைக்கூட நீ திருத்திக்கொள்ளலாம்.
௫ இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள் செய்கின்ற தவறுகள்.
௬ முக்கியமான பொறுப்புகள் முட்டாள்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. செல்வம் உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப் பெறுகின்றனர்.
௭ பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்று பின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள் குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன்.
ஒவ்வொரு வேலையும் அதற்குரிய ஆபத்துகளைக் கொண்டவை
௮ குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன் பாம்பு கடித்து மரிப்பான்.
௯ பெருங்கற்களை நகர்த்திக் கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான். ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம் அவன்மேலேயே விழுந்துவிடலாம்.
௧௦ ஆனால் ஞானம் அந்த வேலையையும் எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால் வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக் கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும். ஞானமும் இதைப் போன்றதுதான்.
௧௧ ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறு எவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமை பயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான்.
௧௨ ஞானமுள்ளவனின் வார்த்தைகள் பாராட்டைப் பெற்றுத்தரும்.
ஆனால் முட்டாளின் வார்த்தைகள் அழிவைக் கொண்டுவரும்.
௧௩ முட்டாள் முட்டாள்தனமானவற்றைக் கூறத் தொடங்குவான். முடிவில் அவன் பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான்.
௧௪ ஒரு முட்டாள் எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும் பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை.
௧௫ முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவு சுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான்.
எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச் செய்வான்.
உழைப்பின் மதிப்பு
௧௬ ஒரு அரசன் குழந்தையைப்போன்று இருந்தால், அது நாட்டிற்குப் பெருங்கேடாகும். அரசன் தன் காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக் கேடுதான்.
௧௭ அரசன் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும் நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டால், நாட்டுக்கு நல்லதுதான். இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம் பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காக அல்ல.
௧௮ ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும்.
வீட்டுக்கூரை விழுந்துவிடும்.
௧௯ ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது.
வீண் பேச்சு
௨௦ அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப் பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.