௧௦
௧ பிறகு நான் கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த கிண்ணம் போன்ற வட்டத்தைப் பார்த்தேன். அது இந்திர நீல ரத்தினம் போன்று காணப்பட்டது. அதற்குமேல் ஒரு சிங்காசனம் இருப்பது போலவும் தோன்றியது.
௨ பிறகு சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் சணல் நூலாடை அணிந்த மனிதனிடம் சொன்னார்; “சக்கரங்களுக்கு இடையில் வா, கேருபீனின் கீழ் உள்ள பகுதிக்கு வா, கேருபீன்களின் நடுவிலே எரிந்துகொண்டிருந்த நெருப்புத் தழலைக் கை நிறைய எடு. அவற்றை எருசலேம் நகரத்தின் மேல் ஏறி.”
அந்த மனிதன் என்னைக் கடந்து போனான்.
௩ அந்த மனிதன் மேகங்களுக்குள் நடந்துப் போனபோது கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன. அந்த மேகம் உட்பிரகாரத்தை நிரப்பியது.
௪ பிறகு பிரகாரத்திலும் ஆலயத்தின் வாசலிலும் நின்றுகொண்டிருந்த கேருபீன்களின் மேலிருந்து கர்த்தருடைய மகிமை எழும்பியது. பிறகு மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் ஆலயப் பிரகாரம் நிரம்பியது.
௫ பின்னர் நான் கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தத்தைக் கேட்டேன். அச்சத்தமானது, சர்வ வல்லமையுள்ள தேவன் பேசும்போது ஏற்படும் இடியோசை போன்றிருந்தது. சிறகுகளின் சத்தத்தை வெளிப்பிரகாரம்வரை கேட்கமுடிந்தது.
௬ தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான்.
௭ அப்போது ஒரு கேருபீன் தன் கையை கேருபீன்களுக்கிடையில் உள்ள நெருப்புவரை நீட்டி எடுத்தது. அம்மனிதனின் கைகளில் நெருப்புத் துண்டுகளை இட்டது. அம்மனிதன் போனான். (
௮ கேருபீனின் சிறகுகளுக்கடியில் மனித கையைப்போன்று காணப்பட்டது)
௯ பிறகு நான் நான்கு சக்கரங்கள் இருப்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு கேருபீனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒளிமிக்க மஞ்சள் நிற இரத்தினக்கல் போலிருந்தது.
௧௦ அங்கே நான்கு சக்கரங்கள் இருந்தன. அனைத்து சக்கரங்களும் ஒன்றுபோல காணப்பட்டன. ஒரு சக்கரத்திற்குள் இன்னொரு சக்கரம் இருப்பதுபோல் தோன்றியது.
௧௧ அவை நகரும் போதெல்லாம் நான்கும் ஒரே நேரத்தில் நகர்ந்தன. ஆனால் அவை நகரும்போது கேருபீன் திரும்பாது. தலைபார்க்கும் திசையிலேயே அவை சென்றன. அவை நகரும்போது திரும்பவில்லை.
௧௨ அவற்றின் உடலெல்லாம் கண்கள் இருந்தன. அவற்றின் பின்புறத்திலும், கைகளிலும் சிறகுகளிலும் சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. ஆம், நான்கு சக்கரங்களிலும் கண்கள் இருந்தன.
௧௩ சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என்று அழைக்கப்படுவதை நான் கேட்டேன்.
௧௪-௧௫ ஒவ்வொரு கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதல் முகம் கேருபீன் முகமாக இருந்தது. இரண்டாவது முகம் மனிதமுகமாக இருந்தது. மூன்றாவது முகம் சிங்கமுகமாக இருந்தது. நான்காவது முகம் கழுகின் முகமாக இருந்தது. நான் கேபார் ஆற்றருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்கள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
கேருபீன்கள் மேலே எழும்பின.
௧௬ அவற்றோடு சக்கரங்களும் எழும்பின. கேருபீன்கள் மேலே எழும்பிக் காற்றில் பறந்தபோது சக்கரங்கள் திசை மாறவில்லை.
௧௭ கேருபீன்கள் காற்றில் பறக்கும்போது சக்கரங்கள் அவற்றோடு சென்றன. கேருபீன்கள் அசையாமல் நின்றபோது சக்கரங்களும் நின்றன. ஏனென்றால், ஜீவனுடைய ஆவி (வல்லமை) அவற்றில் இருந்தது.
௧௮ பிறகு கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியில் இருந்து கேருபீன்களின் மேலிருந்த இடத்திற்குச் சென்று நின்றது.
௧௯ அப்பொழுது கேருபீன்கள் தம் சிறகுகளை விரித்துக் காற்றில் பறந்தன. அவை ஆலயத்தை விட்டுப் போவதைப் பார்த்தேன். சக்கரங்கள் அவற்றோடு சென்றன. பின்னர் அவை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலில் நின்றன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமையானது அவற்றின்மேல் காற்றில் இருந்தது.
௨௦ பிறகு நான், கேபார் ஆற்றின் அருகில் கண்ட தரிசனத்தில் இஸ்ரவேல் தேவனுடைய மகிமைக்கடியில் தெரிந்த ஜீவன்களை நினைத்துப் பார்த்தேன். நான், அவ்விலங்குகள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
௨௧ ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் சிறகுகளுக்கடியில் மனித கரங்களைப்போன்று மறைந்தும் இருந்தன.
௨௨ கேருபீன்களின் முகங்கள் கேபார் ஆற்றின் அருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்களின் முகங்களைப்போன்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் தமது முகம் இருந்த திசையை நோக்கிச் சென்றன.