௪௦
புதிய ஆலயம்
௧ நாங்கள் சிறைப்பட்ட 25ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் மாதம் (அக்டோபர்) பத்தாம் நாளன்று கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. பாபிலோனியர்கள் எருசலேமைப் பிடித்து 14 ஆண்டுகளாயிற்று, ஒரு தரிசனத்தில் கர்த்தர் என்னை அங்கே எடுத்துக்கொண்டு போனார்.
௨ தரிசனத்தில், தேவன் என்னை இஸ்ரவேல் நாட்டுக்குக் கொண்டுபோனார். ஒரு உயரமான மலையில் என்னை அவர் வைத்தார். மலையின் மேல் ஒரு கட்டிடம் நகரத்தைப் போன்று காட்சியளித்தது. அந்நகரம் கிழக்கு நோக்கி இருந்தது.
௩ கர்த்தர் என்னை அங்கே கொண்டுபோனார். அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தான். அவன் கையில் சணல்கயிறும, அளவு கோலும் இருந்தன. அவன் வாசலருகில் நின்றுகொண்டிருந்தான்.
௪ அம்மனிதன் என்னிடம் சொன்னான், “மனுபுத்திரனே, உன் கண்களையும், காதுகளையும் பயன்படுத்து. இவற்றைப் பார், என்னைக் கவனி! நான் காட்டுகிற எல்லாவற்றிலும் உன் கவனத்தைச் செலுத்து. ஏனென்றால், நீ கொண்டுவரப்பட்டாய். எனவே நான் உனக்கு இவற்றைக் காட்டுகிறேன். நீ பார்த்தவற்றையெல்லாம் பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறவேண்டும்.”
௫ நான் ஆலயத்தைச் சுற்றிலும் கட்டப்பட்ட ஒரு சுவரைக் கண்டேன். அந்த மனிதனின் கையில் ஒரு அளவுகோல் இருந்தது, அது ஆறு முழ நீளமுள்ளதாக (10’6’) இருந்தது. எனவே அம்மனிதன் அச்சுவரின் கனத்தை அளந்தான். அது ஒரு அளவுகோலின் (10’6”) கனமுள்ளதாக இருந்தது. அம்மனிதன் சுவரின் உயரத்தை அளந்தான். அது ஒரு அளவுகோல் உயரமுடையதாக (10’6”) இருந்தது.
௬ பிறகு அம்மனிதன் கிழக்கு வாசலுக்குச் சென்றான். அம்மனிதன் படிகளில் ஏறிப்போய் வாசலின் இடைவெளியை அளந்தான். அது ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது. மறுவாசற்படியையும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான்.
௭ காவலாளிகளுக்குரிய அறைகள் ஒரு அளவு கோல் (10’6”) நீளமுடையதாகவும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாகவும் இருந்தன. அறைகளுக்கு இடையில் 5 முழ (8’9”) இடமிருந்தது. மண்டபத்தருகேயுள்ள இடைவெளி, ஆலயத்தை எதிர்நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. அங்கும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது.
௮ பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான்.
௯ பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தை அளந்தான். அது எட்டு முழமுடையதாக (14’) இருந்தது. அம்மனிதன் வாசலின் ஒவ்வொரு பக்கத்திலிருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கமும் 2 முழம் (3’6”) கொண்டதாக இருந்தது. வாசலின் மண்டபம் ஆலயத்தை எதிர் நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது.
௧௦ வாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று சிறிய அறைகள் இருந்தன. இம்மூன்று சிறு அறைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் சம அளவுடையதாக இருந்தன. இருபக்கங்களிலும் இருந்த பக்கச்சுவர்கள் சம அளவுடையதாக இருந்தது.
௧௧ அம்மனிதன் வாசல் கதவுகளின் அகலத்தை அளந்தான். அவை 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தன. அந்த முழு வாசலும் 13 முழம் நீளம் உடையதாக இருந்தன.
௧௨ ஒவ்வொரு அறையின் முன்பும் சிறு சுவர் இருந்தது. அச்சுவர் 1 முழம் (1’6”) உயரமும் 1 முழம் (1’6”) கனமும் உடையதாக இருந்தது. அவ்வறைகள் 6 முழம் (10’6”) நீளமுடையதாக ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தன.
௧௩ அம்மனிதன் வாசலில் இருந்து அறையின் மெத்தையினின்றும் மற்ற அறையின் மெத்தை மட்டும் அளந்தார். அது 25 முழமாக (43’9”) இருந்தது. ஒவ்வொரு கதவும் இன்னொரு கதவிற்கு நேர் எதிராக இருந்தது.
௧௪ அம்மனிதன் முற்றத்திலிருந்து மண்டபத்தின் இரு பக்கங்களிலிருந்த பக்கசுவர்கள் உள்பட எல்லா பக்கச்சுவர்களின் முன்புறங்களையும் அளந்தான். அது மொத்தம் 60 முழம்.
௧௫ வெளிவாயிலின் உட்புற முனையிலிருந்து மண்டபத்தின் கடைசி முனைவரை 50 முழங்களாகும்.
௧௬ எல்லா அறைகளிலும், பக்கச்சுவர்களின் மேலும் வாயில் மண்டபங்களின் மேலும் சிறு சிறு ஜன்னல்கள் இருந்தன. ஜன்னல்களின் அகலப்பகுதி நுழை வாயிலை நோக்கியிருந்தது. நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பேரீச்சமரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
வெளிப்பிரகாரம்
௧௭ பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். நான் அறைகளையும் தள வரிசைகளையும் பார்த்தேன். அவை பிரகாரத்தைச் சுற்றிலும் இருந்தன. சுவற்றின் வழியே நடை பாதையை உள்நோக்கி 30 அறைகள் இருந்தன.
௧௮ அத்தள வரிசை வாசலின் பக்கம்வரை சென்றது. தளவரிசை வாசல்களின் நீளத்திற்கு இருந்தது. இது தாழ்ந்த தளவரிசையாக இருந்தது.
௧௯ பிறகு அம்மனிதன் கீழ்வாசலின் உள்பக்கத்திலிருந்து உள்முற்றத்தின் வெளிப்பக்கம் வரையுள்ள அகலத்தை அளந்தான். அது கிழக்குப்பக்கமும் வடக்குப்பக்கமும் 100 முழம் அளவு இருந்தது.
௨௦ வெளிப்பிரகாரத்தைச் சுற்றியுள்ள சுவரில் வடக்கு வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அம்மனிதன் அளந்தான்.
௨௧ அது இரு பக்கங்களிலும் மூன்று அறைகளுடையதாக இருந்தது. அதன் வாசல் தூண்களும் மண்டபமும் முதல் வாசலின் அளவுகளைப் போன்றே இருந்தன. அது 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் உடையதாக இருந்தது.
௨௨ அதன் ஜன்னல்களும் மண்டபமும் பேரிச்ச மரச் செதுக்கல்களும் கிழக்கு நோக்கியிருந்த வாசலை போன்றதாகவே இருந்தது. வாசலை நோக்கி ஏழு படிகள் மேலே போயின. வாசலின் மண்டபம் நுழைவாயிலின் உள்பக்கம் கடைசியில் இருந்தது.
௨௩ வடக்கு நுழைவாயிலிலிருந்து முற்றத்துக்குக் குறுக்கே உள்முற்றத்துக்கு ஒரு நுழைவாயில் இருந்தது. அது கிழக்கில் இருந்த நுழைவாயிலைப் போன்றிருந்தது. ஒரு நுழைவாயிலிலிருந்து இன்னொரு நுழைவாயில்வரை அளந்தான். அது 100 முழம் (175’) அகலம் இருந்தது.
௨௪ பிறகு அம்மனிதன் என்னைத் தெற்கே நடத்திச் சென்றான். நான் தெற்கே ஒரு வாசலைக் கண்டேன். அம்மனிதன் பக்கச் சுவர்களையும் மண்டபத்தையும் அளந்தான். அவை மற்ற வாசல்களைப் போன்றே அளவுடையதாக இருந்தன.
௨௫ வாசலும் அதன் மண்டபமும் மற்ற வாசல்களைப் போன்றே ஜன்னல்கள் உடையதாக இருந்தன. அவை 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தன.
௨௬ வாசலில் ஏழு படிகள் மேல் நோக்கிச் சென்றன. அதன் மண்டபம் நுழைவாயிலின் உட்புறமாக கடைசியில் இருந்தது. சுவர்கள் மேல் இரு பக்கமும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
௨௭ உட்பிரகாரத்தின் தென் பக்கமும் ஒரு வாசல் இருந்தது. அம்மனிதன் தெற்கு நோக்கி உள் வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு அளந்தான். அது 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.
உட்பிரகாரம்
௨௮ பிறகு, அம்மனிதன் என்னைத் தெற்கு வாசல் வழியாக உட்பிரகாரத்திற்கு அழைத்துப் போனான். அவன் இந்த வாசலை அளந்தான். அத்தெற்கு வாசலும் மற்ற வாசல்களைப் போன்று அளவுடையதாக இருந்தது.
௨௯ தெற்கு வாசலில் உள்ள அறைகள், அதன் பக்கச்சுவர்கள், அதன் மண்டபம் ஆகியவை மற்ற வாசல்களில் உள்ள அளவையே கொண்டிருந்தன. வாசலையும் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல் 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் இருந்தது.
௩௦ மண்டபம் 25 முழம் (43’9”) அகலமும் 5 முழம் (8’9”) நீளமும் இருந்தது.
௩௧ தென்பக்க வாசல் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதில் ஏறிட 8 படிகளும் இருந்தன.
௩௨ அம்மனிதன் என்னை கிழக்குப் புறமுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். அவன் வாசலை அளந்தான். அது மற்ற வாசல்களைப் போன்றே அளவுடையதாக இருந்தது.
௩௩ கிழக்கு வாசலின் அறைகளும், பக்கச்சுவர்களும், மண்டபமும் மற்ற வாசல்களைப்போன்றே அளக்கப்பட்டன. வாசலையும் அதன் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. கிழக்கு வாசல் 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் உடையதாக இருந்தது.
௩௪ அதன் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்குப் போக எட்டுப்படிகள் இருந்தன.
௩௫ பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அவன் அதை அளந்தான். அது மற்ற வாசல்களைப் போன்று அதே அளவுடையதாக இருந்தது.
௩௬ இதன் அறைகள், இதன் பக்கச் சுவர்களும், வாயில் மண்டபமும் கூட, மற்ற நுழை வாயில்களின் அளவுடையதாக இருந்தன. வாசலைச் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. இது 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தது.
௩௭ இதன் வாயில் மண்டபம், நுழை வாயிலின் கடைசியில் வெளிமுற்றத்திற்குப் பக்கத்தில் இருந்தது. நுழைவாயிலின் இருபக்கச் சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இதில் மேலே போக 8 படிகள் இருந்தன.
பலிகளை ஆயத்தப்படுத்தும் அறைகள்
௩௮ வாயில் மண்டபத்தில் கதவுள்ள ஒரு அறை இருந்தது. இதுதான் ஆசாரியர்கள் தம் தகனபலிக்காக மிருகங்களைக் கழுவும் இடம்.
௩௯ மண்டபத்தின் கதவின் இரண்டு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. தகனபலி, பாவநிவாரண பலி, குற்ற நிவாரணப் பலி ஆகியவற்றின் மிருகங்களை மேசை மேல் வைத்துக் கொல்லுவார்கள்.
௪௦ மண்டபத்துக்கு வெளியே, வடக்கு வாசல் திறந்திருக்கிற இடத்தில், இரண்டு மேசைகள் இருந்தன. இம்மண்டபத்தின் வெளிவாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன.
௪௧ இவ்வாறு உள்ளே நான்கு மேசைகள் இருந்தன. வெளியே நான்கு மேசைகள் இருந்தன. இந்த எட்டு மேசைகளின் மேல் ஆசாரியர்கள் பலிகளுக்கான மிருகங்களைக் கொன்றார்கள்.
௪௨ நான்கு மேசைகள் தகனபலிக்காகக் கல்லால் செய்யப்பட்டிருந்தன. இம்மேசைகள் 1 1/2 முழம் (2’7 1/2”) நீளமும் 1 1/2 முழம் (2’7 1/2”) அகலமும் 1 முழம் (1’6”) உயரமும் உள்ளதாக இருந்தன. மேசைகளின்மேல் ஆசாரியர்கள் தகன பலிகள் மற்றும் இதர பலிகளுக்கான மிருகங்களைக் கொல்வதற்கான கருவிகளை வைத்திருந்தார்கள்.
௪௩ கொக்கிகள் 1 சாண் (3”) நீளமுள்ள இறைச்சிக் கொக்கிகள் இப்பகுதியிலுள்ள எல்லாச் சுவர்களிலும் அடிக்கப்பட்டிருந்தன. காணிக்கைகளின் இறைச்சி மேசைமேல் வைக்கப்பட்டது.
ஆசாரியர்களின் அறைகள்
௪௪ உட்புற முற்றத்தில் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று வடக்கு வாசலில் இருந்தது. அது தெற்கு நோக்கி இருந்தது. இன்னொன்று தெற்கு வாசலில் இருந்தது. அது வடக்கு நோக்கி இருந்தது.
௪௫ அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தெற்கு நோக்கி இருக்கும் இந்த அறை ஆலயத்தில் பணியிலிருந்து சேவை செய்கிற ஆசாரியரின் அறை.
௪௬ ஆனால் வடக்கு நோக்கி இருக்கும் அறை பலிபீடத்தில் பணிசெய்கிற ஆசாரியரின் அறையாகும். இந்த ஆசாரியர்கள் லேவியின் தலைமுறையைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த இரண்டாவது ஆசாரியக் குழு சாதோக்கின் வாரிசுகள். அவர்கள் மாத்திரமே பலிகளை பலிபீடத்திற்குச் சுமந்து சென்று கர்த்தருக்குச் சேவை செய்ய முடியும்.”
௪௭ அம்மனிதன் பிரகாரத்தை அளந்தான். அது சரியான சதுரமாக இருந்தது. இது 100 முழம் (175’) நீளமும் 100 முழம் (175’) அகலமும் உடையதாக இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன்னால் இருந்தது.
ஆலயத்தின் மண்டபம்
௪௮ பிறகு, அம்மனிதன் என்னை ஆலய மண்டபத்துக்குக் கொண்டுபோனான். மண்டபத்தின் இரு பக்கங்களிலும் இருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரின் கனம் 5 முழமாகவும் அகலம் 3 முழமாகவும் இருந்தது. அவைகளுக்குள் இருந்த இடைவெளி 14 முழமாயிருந்தது.
௪௯ மண்டபம் 20 முழம் (35’) நீளமும் 12 முழம் (19’3”) அகலமும் உள்ளது. மண்டபத்தின் மேலே செல்ல 10 படிகள் இருந்தன. தூணாதரங்களிலே இந்தப் புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.