௪௨
ஆசாரியர்களின் அறை
௧ பிறகு அம்மனிதன் என்னை வட திசையின் வழியாக வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துப் போனான். தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு மேற்கேயிருந்த அறைக்கும் வடக்கே இருந்த கட்டிடத்திற்கும் போனோம்.
௨ வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175’) நீளமும் 50 முழம் (87’6”) அகலமும்கொண்டது.
௩ இக்கட்டத்தில் மூன்று முன்மண்டபங்களுடைய மேல் மாடிகள் இருந்தன. 20 முழம் அளவுள்ள உள்முற்றம், கட்டிடத்திற்கும் ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. இன்னொரு பக்கம், அறைகள் வெளிமுற்றத்தின் நடைபாதையை நோக்கியிருந்தன.
௪ அறைகளுக்கு முன்னால் ஒருவழி இருந்தது. அது உள்ளே சென்றது. இது 10 முழம் (17’6”) அகலமும் 100 முழம் (175’) நீளமும் உடையதாக இருந்தது. அவற்றின் கதவுகள் வடக்கே இருந்தன.
௫-௬ கட்டிடம் 3 மாடி உயரமுள்ளதாகவும், வெளிமுற்றத்தைப்போல தூண்கள் இல்லாததாலும், மேல் அறைகள் நடுமாடியிலும், முதல்தளத்திலும் இருந்த அறைகளைவிட சற்றுப் பின்னால் இருந்தன. மேல்தளம், நடுத்தளத்தையும், அடித்தளத்தையும்விட குறுகலாயிருந்தது. ஏனெனில், மேல்மாடிகள் இவ்விடங்களை பயன்படுத்தியிருந்தன.
௭ வெளியே ஒரு மதில் இருந்தது. அது அறைகளுக்கு இணையாக இருந்தது. அது வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்திருந்தது. அது அறைகளுக்கு எதிரே இருந்தது. அதன் நீளம் 50 முழம் (87’6”) இருந்தது.
௮ வெளிப்பிரகாரத்தில் உள்ள அறைகளும் 50 முழம் (87’6”) நீளமுடையதாக இருந்தன. கட்டிடத்தின் முழு நீளம், ஆலயத்தின் பக்கம் 100 முழம் நீளமாயிருந்தது.
௯ கிழக்கே வெளிப்பிரகாரத்திலிருந்து அந்த அறைகளுக்குள் செல்லுகிற நடை அவற்றின் கீழே இருந்தது.
௧௦ உள்ளே நுழையும் வாசல், முற்றத்தின் பக்கத்திலுள்ள சுவரின் ஆரம்பத்திலிருந்தது.
தடைசெய்யப்பட்ட பரப்பிற்கும் கட்டிடத்திற்கும் தெற்குப் பக்கத்திலும் அறைகள் இருந்தன.
௧௧ அவைகளுக்கு முன்னால் ஒரு பாதை இருந்தது. அவை வடக்கே உள்ள அறைகள் போன்றவை. அவை அதே நீளமும் அகலமும் கொண்டவையாகவும் அதே மாதிரியான கதவுகளைக்கொண்டவையாகவும் இருந்தன.
௧௨ கீழ் அறைகளுக்குப் போகும் நுழை வாசல் கட்டிடத்தின் கிழக்குப்பகுதியின் கடைசியிலிருந்தது. இதனால் ஜனங்கள் சுவரின் பக்கம் இருந்த பாதையின் முடிவில் திறந்தவழியாகப் போக முடியும்.
௧௩ அம்மனிதன் என்னிடம், “தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு முன்னிருக்கிற வடபுறமான அறைகளும் தென்புறமான அறைகளும் பரிசுத்தமான அறைகள். இந்த அறைகள் கர்த்தருக்குப் பலிகள் படைக்கிற ஆசாரியர்களுடையவை. அவ்வாசாரியர்கள் இவ்வறைகளில்தான் மிகப் பரிசுத்தமான உணவை உண்பார்கள். அங்குதான் அவர்கள் மிகப் பரிசுத்தமான பலிகளை எல்லாம் வைக்கிறார்கள். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமானது. தானிய காணிக்கை, பாவப்பரிகாரபலி, குற்ற நிவாரண பலி, ஆகியவை மிகப் பரிசுத்தமான காணிக்கைகளாகும்.
௧௪ பரிசுத்தமான பகுதிக்குள் நுழையும் ஆசாரியர்கள் பரிசுத்த இடத்திலிருந்து வெளிப்பிரகாரத்திற்கு வருவதற்கு முன்பே ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த உடைகளைக் கழற்றி வைப்பார்கள். ஏனென்றால், அந்த உடைகள் பரிசுத்தமானவை. ஆசாரியர் ஜனங்கள் இருக்கும் பிரகாரத்துக்குப் போக விரும்பினால் வேறு உடைகளை அணிந்து கொண்டு போவார்கள்.”
ஆலயத்தின் வெளிமுற்றம்
௧௫ அம்மனிதன் ஆலயத்தின் உள்பக்கத்தை அளந்து முடித்த பிறகு அவன் என்னை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக வெளியே அழைத்துக்கொண்டு போனான். அவன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் சுற்றிலும் அளந்தான்.
௧௬ அவன் அளவு கோலால் கிழக்குப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) நீளமிருந்தது.
௧௭ அவன் வடப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
௧௮ அவன் தெற்குப்பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
௧௯ அவன் சுற்றிக்கொண்டு மேற்குப் பகுதிக்குப் போய் அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
௨௦ அவன் ஆலயத்தின் நான்கு புறங்களையும் அளந்தான். ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர் இருந்தது. அது 500 முழம் நீளமும் 500 முழம் அகலமுமாயிருந்தது. அது பரிசுத்தமற்ற இடத்திலிருந்து அப்பரிசுத்தமான இடத்தைப் பிரித்தது.