௨௯
ஆசாரியர்களின் நியமன விழா
௧ பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கு ஆசாரியர்களாக விசேஷ பணிவிடையை ஆரோனும் அவன் மகன்களும் செய்யும்பொருட்டு நீ செய்ய வேண்டிய காரியங்களை நான் உனக்குக் கூறுவேன். ஒரு இளங்காளையையும், குறைகள் இல்லாத இரண்டு இளம் வெள்ளாடுகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்.
௨ சுத்தமான கோதுமை மாவை புளிப்பில்லாத ரொட்டியாகச் செய்துகொள். அதே மாவைப் பயன்படுத்தி ஒலிவ எண்ணெயால் வார்ப்பு ரொட்டிகளையும் தயாரித்துக்கொள். சிறிய மெல்லிய அடைகளையும் எண்ணெய் பூசி உண்டாக்கு.
௩ வார்ப்பு ரொட்டிகளையும், அடைகளையும் ஒரு கூடையில் வைத்து அவைகளையும், காளையையும், இரண்டு கடாக்களையும் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடு.
௪ “ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலுக்கு ஆரோனையும், அவனது மகன்களையும் அழைத்துவா. அவர்களை தண்ணீரில் கழுவின பின்பு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை அணிவி.
௫ முழுவதும் நெய்த வெள்ளை அங்கியையும், ஏபோத்தோடு அணிய வேண்டிய நீல அங்கியையும் உடுத்திவிடு. அதன் மேல் ஏபோத்தையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும் அணியச்செய். அழகிய அரைக்கச்சையை கட்டிவிடு.
௬ தலைப்பாகையை அவன் தலையில் வைத்து, அதன்மேல் பரிசுத்த கிரீடத்தை வை.
௭ பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து ஆரோனின் தலையின்மேல் ஊற்று. கர்த்தருக்குரிய ஆசாரியப் பணிவிடைக்கு ஆரோன் பிரித்தெடுக்கப்பட்டதை இது காட்டும்.
௮ “பின்பு ஆரோனின் மகன்களை அந்த இடத்திற்கு அழைத்து வா. முழுவதும் நெய்யப்பட்டவெள்ளை நிற அங்கிகளை அவர்களுக்கு அணிவி.
௯ பின் அரைக்கச்சைகளைக் கட்டிவிடு. அவர்கள் அணிவதற்கான விசேஷ பாகைகளைக் கொடு. அப்போதிலிருந்து அவர்கள் ஆசாரியர்களாகப் பணி செய்ய ஆரம்பிப்பார்கள். என்றென்றைக்குமான விசேஷ சட்டப்படி அவர்கள் ஆசாரியர்களாக இருப்பார்கள். இவ்வாறு ஆரோனையும் அவன் மகன்களையும் நீ ஆசாரியர்களாக்கவேண்டும்.
௧௦ “ஆசாரிப்புக் கூடாரத்திற்கு முன் காளையைக் கொண்டு வா. ஆரோனும், அவனது மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலையில் வைக்கட்டும்.
௧௧ ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் காளையைக் கொல். கர்த்தர் இதைப் பார்ப்பார்.
௧௨ காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீடத்திற்குச் செல். உனது விரல்களை இரத்தத்தில் தோய்த்து பலிபீடத்தின் கொம்புகளில் பூசு. மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடு.
௧௩ காளையின் உட்புறத்திலுள்ள எல்லா கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும், அவைகளை சுற்றிய கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தில் எரித்துவிடு.
௧௪ பின் காளையின் மாமிசம், அதன் தோல், பிற பகுதிகளை எடுத்துவிட்டு பாளையத்துக்கு வெளியே கொண்டுபோய் அவற்றைச் சுட்டெரித்துவிடு. இதுவே ஆசாரியர்களின் பாவத்தைப் போக்குவதற்கான காணிக்கை ஆகும்.
௧௫ “பின் ஆரோனும், அவனது மகன்களும் ஆட்டுக் கடாவின் தலையில் தம் கைகளை வைக்கும்படி சொல்.
௧௬ கடாவைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் அதைத் தெளித்துவிடு.
௧௭ செம்மறி ஆட்டுக் கடாவைப் பல துண்டுகளாக்கு. அதன் எல்லா உட்பாகங்களையும், கால்களையும் கழுவு. அவற்றை செம்மறி ஆட்டுக் கடாவின் தலையோடும், அதன் மற்ற துண்டுகளோடும் வை.
௧௮ எல்லாவற்றையும் பலிபீடத்தில் எரித்துவிடு. இது கர்த்தருக்குத் தரப்படும் தகனபலியாகும். கர்த்தருக்கு சுகந்த வாசனையாக இது இருக்கும்.
௧௯ “ஆரோனும், அவனது மகன்களும் மற்றொரு ஆட்டுக் கடாவின்மேல் தம் கைகளை வைக்கட்டும்.
௨௦ அக்கடாவைக் கொன்று கொஞ்சம் இரத்தத்தை சேகரித்துக்கொள். அந்த இரத்தத்தை ஆரோனின் வலது காது மடலிலும், அவன் மகன்களின் வலது காது மடலிலும், அவர்களின் வலது கைப் பெரு விரல்களிலும், அவர்களின் வலது கால் பெருவிரல்களிலும் தடவு. பின்பு பலிபீடத்தின் 4 பக்கங்களின் எதிரிலும் மீதி இரத்தத்தை தெளி.
௨௧ பிறகு சிறிது இரத்தத்தைப் பலி பீடத்திலிருந்து எடுத்து அதை விசேஷ எண்ணெயுடன் கலந்து ஆரோன் மீதும் அவன் ஆடைகள் மீதும் தெளி. பின்பு அவனது மகன்கள் மற்றும் அவர்களின் ஆடைகள் மீதும் தெளி. ஆரோனும் அவனது மகன்களும் எனக்கு விசேஷ பணிவிடை செய்பவர்கள் என்பதையும், இந்த ஆடைகள் விசேஷ காலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் இது காட்டும்.
௨௨ “பின்பு ஆட்டுக் கடாவிலிருந்து கொழுப்பை அகற்று. (ஆரோனை தலைமை ஆசாரியனாக நியமிக்கும் விழாவில் பயன்படுத்தப்படும் கடா இது.) வாலையும், உட்பாகங்களையும் சூழ்ந்திருக்கும் கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும் அவைகளைச் சுற்றி இருக்கும் கொழுப்பையும் வலது காலையும் எடுத்துக்கொள்.
௨௩ பின் புளிப்பு இல்லாத ரொட்டி இருக்கும் கூடையை எடுத்துக்கொள். கர்த்தரின் முன் வைக்க வேண்டிய கூடை இது. ஒரு வார்ப்பு ரொட்டி, எண்ணெயால் செய்யப்பட்ட அடை, ஒரு சிறிய மெல்லிய அடை ஆகியவற்றைக் கூடையில் இருந்து எடுக்க வேண்டும்.
௨௪ இவற்றை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கையில் கொடு. இவற்றை அவர்கள் ஏந்தி நிற்கும்படி செய். கர்த்தருக்கு உகந்த அசைவாட்டும் காணிக்கையாக அவர்கள் அதை அசைவாட்ட வேண்டும்.
௨௫ பின்பு அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் ஆட்டுக் கடாவோடு பலி பீடத்தில் சுட்டெரி. இது நெருப்பின் மூலமாக தேவனுக்குத் தரப்படும் தகன பலியாகும். அதன் சுகந்த வாசனை கர்த்தருக்கு ஏற்றது.
௨௬ “ஆட்டுக்கடாவின் (இந்தக் கடா ஆரோனை தலைமை ஆசாரியனாக்கும் விழாவில் பயன்படுத்தப்படும்) மார்புப் பகுதியை விசேஷ காணிக்கையாக கர்த்தரின் முன்னிலையில் ஏந்தி நிற்க வேண்டும். பின் அதை எடுத்து வை. மிருகத்தின் இந்தப் பகுதி உனக்குரியது.
௨௭ ஆரோனைத் தலைமை ஆசாரியனாக்குவதற்குப் பயன்படுத்திய கடாவின் மார்புப் பகுதி, கால் ஆகியவற்றை எடுத்து அவற்றை பரிசுத்தப்படுத்து. அந்த விசேஷ பாகங்களை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடு.
௨௮ இஸ்ரவேல் ஜனங்கள் எப்போதும் இப்பாகங்களை ஆசாரியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும் போதெல்லாம் இப்பாகங்கள் ஆசாரியர்களுக்கு உரியவை. இவற்றை அவர்கள் ஆசாரியர்களுக்குக் கொடுக்கும்போது அது கர்த்தருக்கு கொடுப்பதற்குச் சமமாகும்.
௨௯ “ஆரோனுக்காகச் செய்த அந்த விசேஷ ஆடைகளைப் பாதுகாப்பாக வைத்திரு. அவனுக்குப்பின் வரும் மகன்களுக்கும் அந்த ஆடைகள் உரியனவாகும். தலைமை ஆசாரியர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றை அணிவார்கள்.
௩௦ ஆரோனின் மகன் அவனுக்குப்பின் தலைமை ஆசாரியனாவான். பரிசுத்த இடத்தில் பணியாற்றுவதற்காக ஆசாரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது 7 நாளளவும் அவன் அதை உடுத்த வேண்டும்.
௩௧ “ஆரோனை தலைமை ஆசாரியனாக்க பயன்படுத்திய ஆட்டுக்கடாவின் மாம்சத்தை பரிசுத்தமான இடத்தில் சமைக்க வேண்டும்.
௩௨ முன் வாசலில் ஆரோனும் அவன் மகன்களும் அதை உண்ண வேண்டும். ஆசாரிப்புக் கூடாரத்தின் கூடையிலுள்ள ரொட்டியையும் அவர்கள் சாப்பிட வேண்டும்.
௩௩ அவர்கள் ஆசாரியர்களானபோது, அவர்கள் பாவங்களை அகற்ற இந்தக் காணிக்கை பயன்படுத்தப்பட்டது. இப்போது அவர்கள் அவற்றை உண்ண வேண்டும். அவைகள் பரிசுத்தமானதால் அந்நியன் அவைகளை உண்ணக் கூடாது.
௩௪ மறு நாள் காலையில் கடாவின் மாமிசமோ, ரொட்டியோ மீதியிருந்தால் அது முற்றிலும் சுட்டெரிக்கப்பட வேண்டும். அதை விசேஷ காலத்தில் விசேஷ வகையில் சாப்பிட வேண்டுமாதலால் அந்த ரொட்டியையோ, மாமிசத்தையோ நீ சாப்பிடக் கூடாது.
௩௫ “ஆரோனுக்காகவும், அவன் மகன்களுக்காகவும் நீ அவற்றைச் செய்ய வேண்டும். நான் சொன்னபடியே அவற்றைச் செய்ய வேண்டும். ஆசாரியர்களாக அவர்களை நியமிக்கும் விழா 7 நாட்கள் தொடர வேண்டும்.
௩௬ ஏழு நாட்களிலும் தினந்தோறும் ஒவ்வொரு காளையைக் கொல்ல வேண்டும். ஆரோன், அவன் மகன்களின் பாவங்களுக்காக செலுத்தப்பட்ட பலியாக இது அமையும். பலிபீடத்தைப் பரிசுத்தப் படுத்துவதற்கு இப்பலிகளை நீ பயன்படுத்த வேண்டும். அதைப் பரிசுத்தமாக்க ஒலிவ எண்ணெயை ஊற்ற வேண்டும்.
௩௭ அந்த 7 நாட்களில் பலிபீடத்தை சுத்தமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது பலிபீடம் மகா பரிசுத்தமாகும். பலி பீடத்தைத் தொடும் எப்பொருளும் பரிசுத்தம் ஆகும்.
௩௮ “ஒவ்வொரு நாளும் பலிபீடத்தில் ஒரு காணிக்கை செலுத்த வேண்டும். ஒரு வயது நிரம்பிய இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல வேண்டும்.
௩௯ ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும் மற்றொன்றை மாலையிலும் காணிக்கையாய் செலுத்த வேண்டும்.
௪௦-௪௧ முதல் ஆட்டுக்குட்டியைக் கொல்லும்போது, சுத்தமான அரைத்த 8 கிண்ணம் கோதுமை மாவைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அந்த மாவைக் கால்படி திராட்சைரசத்தோடு சேர்த்து காணிக்கையாக அளிக்க வேண்டும். மாலையில் இரண்டாவது ஆட்டுக்குட்டியைக் கொல்லும்போதும் 8 கிண்ணம் மாவையும் கால்படி திராட்சை ரசத்தையும் காலையில் செய்தது போலவே காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அது கர்த்தருக்கு அளிக்கும் சுகந்த வாசனையான தகன காணிக்கையாகும். இதனை எரிக்கும்போது, கர்த்தர் வாசனையை முகருவார், அது அவரை மகிழ்விக்கும்.
௪௨ “ஒவ்வொரு நாளும் இவற்றைச் சர்வாங்க தகனக் காணிக்கையாக எரிக்க வேண்டும். கர்த்தருக்கு முன்பாக ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் இதைச் செய். தொடர்ந்து உனது தலைமுறைகளுக்கும் இவ்வாறே செய். நீ காணிக்கை செலுத்தும்போது கர்த்தராகிய நான் உங்களைச் சந்தித்துப் பேசுவேன்.
௪௩ அங்கு இஸ்ரவேல் ஜனங்களைச் சந்திப்பேன். எனது மகிமை அவ்விடத்தைப் பரிசுத்தப்படுத்தும்.
௪௪ “ஆசாரிப்புக் கூடாரத்தையும் பலி பீடத்தையும் நான் பரிசுத்தப்படுத்துவேன். ஆரோனையும், அவனது மகன்களையும் எனக்கு ஆசாரியராகப் பணியாற்றுவதற்காகப் பரிசுத்தமாக்குவேன்.
௪௫ நான் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.
௪௬ நானே தேவனாகிய கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள். அவர்களோடு வாழும்படியாக அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்திய தேவன் நான் என்பதை அவர்கள் அறிவார்கள். நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்” என்றார்.