௨௪
ஈசாக்குக்கு ஒரு மனைவி
௧ ஆபிரகாம் மிகவும் வயோதிபனாக இருந்தான். அவனையும், அவன் செய்த காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
௨ ஆபிரகாமுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனே ஆபிரகாமுக்குச் சொந்தமான எல்லாவற்றுக்கும் பொறுப்பானவனாக இருந்தான். ஒரு நாள் ஆபிரகாம் அவனை அழைத்து, “எனது தொடையின் கீழ் உன் கைகளை வை.
௩ நான் உன்னிடமிருந்து ஒரு வாக்குறுதியை வாங்க விரும்புகிறேன், வானத்திற்கும் பூமிக்கும் அதிபதியான தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் எனக்கு வாக்குறுதிக் கொடு. கானானியர்களிடமிருந்து ஒரு பெண்ணை என் மகன் மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் இவர்கள் மத்தியில் வாழ்கிறோம். எனினும் ஒரு கானான் தேசத்துப் பெண்ணை, அவன் மணந்துகொள்ளக் கூடாது.
௪ எனது சொந்த ஜனங்கள் இருக்கிற என் நாட்டிற்குத் திரும்பிப்போ. அங்கு என் மகன் ஈசாக்குக்கு மணமுடிக்க ஒரு பெண்ணைப் பார்த்து அவளை இங்கு அழைத்துக்கொண்டு வா” என்றான்.
௫ அதற்கு அந்த வேலைக்காரன், “ஒருவேளை அந்தப் பெண் இந்த நாட்டிற்கு என்னோடு வர மறுக்கலாம். எனவே உங்கள் மகனையும் என்னோடு நான் அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டான்.
௬ ஆபிரகாம் அவனிடம், “இல்லை என் மகனை அந்த இடத்திற்கு உன்னோடு அழைத்துச் செல்லக் கூடாது.
௭ வானத்திற்கு தேவனாகிய கர்த்தர் என்னை என் தாய் நாட்டிலிருந்து இங்கு அழைத்து வந்துள்ளார். அது என் தந்தைக்கும் என் குடும்பத்திற்கும் தாய்நாடு. ஆனால் கர்த்தர் இந்தப் புதிய நாடே எனது குடும்பத்தின் தாய்நாடு என்று வாக்குறுதிச் செய்திருக்கிறார். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன் அனுப்புவாராக. பெண்ணைத் தேர்ந்தெடுக்க உனக்கு உதவுவார்.
௮ ஆனால் அந்தப் பெண் உன்னோடு இங்கு வர சம்மதிக்காவிட்டால் உனது வாக்குறுதியிலிருந்து நீ விடுதலை பெறுகிறாய். ஆனால் என் மகனை மட்டும் அங்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாது” என்று கூறினான்.
௯ அதன்படி, அந்த வேலைக்காரன் தன் எஜமானனின் காலடியில் தன் கையை வைத்து வாக்குறுதி செய்தான்.
பெண்ணைத் தேடுதல்
௧௦ ஆபிரகாமின் வேலைக்காரன் பத்து ஒட்டகங்களோடு அங்கிருந்து புறப்பட்டான். அவன் தன்னோடு பலவித அழகான பரிசுப்பொருட்களையும் எடுத்து சென்றான். அவன் நாகோரின் நகரமான மெசொப் பொத்தாமியாவிற்குச் சென்றான்.
௧௧ அவன் ஊருக்கு வெளியே இருந்த கிணற்றினருகே வந்தடைந்தான். அது பெண்கள் தண்ணீர் எடுக்க வரும் மாலை நேரம். அங்கே ஒட்டகங்களைத் தங்கச் செய்தான்.
௧௨ அவன், “என் எஜமானனின் தேவனாகிய கர்த்தாவே இன்று அவரது மகனுக்குப் பெண் தேட உதவி செய்யும். என் எஜமானரான ஆபிரகாம் மீது கருணை காட்டும்.
௧௩ நான் இந்தக் கிணற்றருகில் நின்றுகொண்டிருக்கிறேன். நகருக்குள் இருந்து ஏராளமான இளம் பெண்கள் தண்ணீரெடுக்க வருகின்றனர்.
௧௪ ஈசாக்குக்குச் சரியான பெண் யாரென்று அறிந்துகொள்ள நான் ஒரு சிறப்பான அடையாளத்துக்காகக் காத்திருக்கிறேன். அதாவது, நான் ஒரு பெண்ணிடம், ‘குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும்’ என்று சொல்லும்போது எந்தப் பெண், ‘குடி உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன்’ என்று கூறுகிறாளோ அவளையே ஈசாக்கின் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி நடந்தால், அவளே நீர் ஈசாக்கிற்காக தேர்ந்தெடுத்த சரியான பெண் என்றும் அதன்பின் நீர் என் எஜமானன் மீது கருணை காட்டினீர் என்றும் நம்புவேன்” என்றான்.
பெண்ணைக் கண்டுபிடித்தல்
௧௫ அந்த வேலைக்காரன் இவ்வாறு பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள் ஒரு இளம் பெண் தண்ணீரெடுக்க கிணற்றருகே வந்தாள். இவள் பெத்துவேலின் மகளாகிய ரெபெக்காள். பெத்துவேல் நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த மகன். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். அவள் தோளில் குடத்தை வைத்துக்கொண்டு தண்ணீரெடுக்க வந்தாள்.
௧௬ அவள் மிகவும் அழகுள்ளவளும், புருஷனை அறியாத கன்னிகையுமாயிருந்தாள். அவள் கிணற்றருகே சென்று தண்ணீரெடுத்து தன் குடத்தை நிறைத்தாள்.
௧௭ வேலைக்காரன் அவளிடம் போய், “நான் குடிக்கக் கொஞ்சம் தண்ணீரை உன் குடத்திலிருந்து தா” என்று கேட்டான்.
௧௮ உடனே ரெபெக்காள் தோளிலிருந்து குடத்தை இறக்கி, “இதைக் குடியுங்கள் ஐயா” என்றாள்.
௧௯ அவன் குடித்து முடித்ததும் அவள், “உங்கள் ஒட்டகங்கள் குடிக்கவும் நான் தண்ணீர் ஊற்றுவேன்” என்று சொல்லி,
௨௦ குடத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் ஒட்டகம் குடிக்குமாறு ஊற்றினாள். பிறகு கிணற்றுக்குப் போய் மேலும் தண்ணீரெடுத்து வந்து எல்லா ஒட்டகங்களுக்கும் ஊற்றினாள்.
௨௧ வேலைக்காரன் அவளை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கர்த்தர் அவனுக்கு ஒரு பதிலளித்தார் என்பதையும் அவனது பயணத்தை வெற்றிகரமானதாக்கினார் என்பதையும் உறுதிப்படுத்த விரும்பினான்.
௨௨ ஒட்டகங்கள் தண்ணீர் குடித்த பின் வேலைக்காரன் அவளுக்கு அரைச் சேக்கல் எடையுள்ள தங்கக் காதணியும், பத்து சேக்கல் எடையுள்ள இரண்டு பொன் கடகங்களையும் கொடுத்தான்.
௨௩ அவன் அவளிடம், “உனது தந்தை யார்? உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவில் தங்க இடம் உண்டா” என்று கேட்டான்.
௨௪ அதற்கு ரெபக்காள், “என் தந்தை பெத்துவேல். அவர் நாகோர் மில்க்காள் ஆகியோரின் மகன்” என்றாள்.
௨௫ பிறகு அவள், “எங்கள் வீட்டில், உங்கள் ஒட்டகங்களுக்கு உணவும், உங்களுக்குப் படுக்க இடமும் உண்டு” என்றாள்.
௨௬ வேலைக்காரன் பணிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான்.
௨௭ அவன், “எனது எஜமான் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவருக்குக் கர்த்தர் கருணை காட்டி தமது உண்மையை நிரூபித்துள்ளார். என் எஜமானனின் மகனுக்கு ஏற்ற பெண்ணிடம் கர்த்தர் என்னை வழி நடத்திவிட்டார்” என்றான்.
௨௮ பிறகு ரெபெக்காள் ஓடிப்போய் தன் குடும்பத்தாரிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள்.
௨௯-௩௦ அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.
௩௧ அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.
௩௨ ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான். பிறகு ஆபிரகாமின் வேலைக்காரனும் அவனது ஆட்களும் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
௩௩ பிறகு அவனுக்கு உண்ண உணவு கொடுத்தான். ஆனால் வேலையாள் உண்ண மறுத்துவிட்டான், “நான் ஏன் வந்திருக்கிறேன் என்பதைச் சொல்வதற்கு முன் உண்ணமாட்டேன்” என்றான்.
ஆகையால் லாபான், “பிறகு எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
ரெபெக்காளைப் பெண் கேட்டுப் பேசுதல்
௩௪ வேலையாள், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.
௩௫ கர்த்தர் எல்லாவகையிலும் என் எஜமானனை சிறப்பாக ஆசீர்வதித்திருக்கிறார். என் எஜமானன் பெரிய மனிதராகிவிட்டார். அவருக்கு ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளன. நிறைய வேலைக்காரர்களும் உள்ளனர். ஒட்டகங்களும் கழுதைகளும் இருக்கின்றன.
௩௬ சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார்.
௩௭ என் எஜமானன் என்னை ஒரு வாக்குறுதி செய்யுமாறு வற்புறுத்தினார். என் எஜமானன் என்னிடம், ‘என் மகன் கானான் நாட்டுப் பெண்ணை மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் கானானியர்களுக்கிடையில் வாழ்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்ணை என் மகன் மணந்துகொள்ளக் கூடாது.
௩௮ அதனால் எனது தந்தையின் நாட்டிலுள்ள எனது குடும்பத்தாரிடம் போய் என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்று சொன்னார்.
௩௯ அதற்கு நான், என் எஜமானிடம் ‘ஒருவேளை அந்தப் பெண் என்னோடு இங்கு வர மறுப்பாள்’ என்றேன்.
௪௦ உடனே அவர், ‘நான் கர்த்தருக்குச் சேவை செய்கிறேன். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன்பாக அனுப்பி உனக்கு உதவுவார். அங்கே எனது குடும்பத்தில் என் மகனுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடிப்பாய்’ என்று கூறினார்.
௪௧ ஆனால் அவர்கள் என் மகனுக்குப் பெண் கொடுக்க மறுத்தால் பிறகு நீ செய்த வாக்குறுதியிலிருந்து விடுதலை பெறுவாய்” என்றார்.
௪௨ “இன்று அந்தக் கிணற்றருகில் வந்து ‘என் எஜமானன் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தாவே! எனது பயணத்தை வெற்றிகரமாக்கும்.
௪௩ நான் இந்தக் கிணற்றருகில் ஒரு இளம் பெண்ணுக்காகக் காத்திருப்பேன். அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்பேன்.
௪௪ பொருத்தமான பெண் எனில் சிறப்பான முறையில் சரியான பதிலைத் தருவாள். அவள், “இந்த தண்ணீரைக் குடியுங்கள். உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்” என்பாள். அதன் மூலம் இந்தப் பெண்ணே என் எஜமானின் மகனுக்குக் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்று அறிவேன்’ ” என்று பிரார்த்தனை செய்தேன்.
௪௫ “நான் வேண்டுதல்களை முடிக்கும் முன்னரே ரெபெக்காள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு வந்தாள். அவள் தோளில் குடத்தோடு வந்து தண்ணீரை நிரப்பினாள். நான் அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன்.
௪௬ அவள் உடனே வேகமாகக் குடத்தை இறக்கி எனக்கு தண்ணீர் ஊற்றினதுடன், ‘இந்த தண்ணீரைக் குடியுங்கள். நான் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்றாள். எனவே நான் தண்ணீரைக் குடித்தேன். பிறகு அவள் என் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள்.
௪௭ பிறகு நான் ‘உனது தந்தை யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘என் தந்தை பெத்துவேல், அவர் நாகோருக்கும் மில்க்காளுக்கும் மகன்’ என்றாள். பிறகு அவளுக்கு நான் காதணிகளும் கடகங்களும் கொடுத்தேன்.
௪௮ பின்னர் நான் குனிந்து கர்த்தருக்கு நன்றி சொன்னேன். என் எஜமானனாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரைப் புகழ்ந்தேன். என்னைச் சரியான வழியில் நடத்தியதற்காக நான் நன்றி சொன்னேன். என் எஜமானனின் சகோதரரது பேத்தியையே தேவன் காட்டிவிட்டார்.
௪௯ இப்போது சொல்லுங்கள். என் எஜமானன் மீது நீங்கள் கருணையும் நேசமும் வைத்து உங்கள் பெண்ணைக் கொடுப்பீர்களா? அல்லது உங்கள் பெண்ணைக் கொடுக்க மறுப்பீர்களா? சொல்லுங்கள். பின்னரே நான் செய்ய வேண்டியதை முடிவு செய்ய வேண்டும்” என்றான்.
௫௦ லாபானும் பெத்துவேலும், “இது கர்த்தரிடமிருந்து வந்த காரியம் என உணர்கிறோம். ஆகையால் சொல்வதற்கு ஏதுமில்லை.
௫௧ இதோ ரெபெக்காள் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டுபோம். அவள் உமது எஜமானனின் மகனை மணந்துகொள்ளட்டும். இதுவே கர்த்தரின் விருப்பம்” என்றனர்.
௫௨ ஆபிரகாமின் வேலையாள் இதனைக் கேட்டு தரையில் விழுந்து கர்த்தரை வணங்கினான்.
௫௩ பின்னர் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களையெல்லாம் ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவன் அழகான ஆடைகளையும், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன நகைகளையும் கொடுத்தான். அவன் ரெபெக்காளின் தாய், சகோதரன் போன்றவர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான்.
௫௪ பிறகு அவனும் அவனோடு வந்தவர்களும் அங்கே உண்டு இரவில் உறங்கினர். மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, “இப்போது நான் என் எஜமானனிடம் போக வேண்டும்” என்றனர்.
௫௫ ரெபக்காளின் தாயும் சகோதரனும், “இவள் இன்னும் பத்து நாட்கள் எங்களோடு இருக்கட்டும். பிறகு அவளை அழைத்துப் போகலாம்” என்றனர்.
௫௬ ஆனால் வேலையாளோ, “என்னைக் காத்திருக்கும்படி செய்யாதீர்கள். கர்த்தர் என் பயணத்தை வெற்றிகரமாக்கியுள்ளார். இப்போது என் எஜமானனிடம் போகவிடுங்கள்” என்றான்.
௫௭ “ரெபெக்காளின் தாயும் சகோதரனும், நாங்கள் ரெபெக்காளை அழைத்து அவளது விருப்பத்தை அறியவேண்டும்” என்றனர்.
௫௮ அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?”
என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள்.
௫௯ எனவே, அவர்கள் அவளை வேலையாளோடும் ஆட்களோடும் அனுப்ப அனுமதி கொடுத்தனர். ரெபெக்காளின் தாதியும் அவளோடு போனாள்.
௬௦ அவள் அவர்களை விட்டுப் போகும்போது அவளை ஆசீர்வதித்து:
“எங்கள் சகோதரியே லட்சக்கணக்கான ஜனங்களுக்கு நீ தாயாவாய்.
உனது சந்ததியார் தங்கள் பகைவரை வெல்லுவார்கள். நகரங்களைக் கைப்பற்றுவார்கள்” என்றனர்.
௬௧ பின் ரெபெக்காளும் அவளது தாதியும் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து வேலையாளைப் பின் தொடர்ந்து போனார்கள். அவன் அவர்களை அழைத்துக் கொண்டு போனான்.
௬௨ ஈசாக்கு, பெயர்லகாய்ரோயியை விட்டு பாலைவனப் பகுதியில் வசித்துக்கொண்டிருந்தான்.
௬௩ ஒரு நாள் மாலை தியானம் செய்ய அவன் வயலுக்குச் சென்றான். அப்போது வெகு தூரத்திலிருந்து ஒட்டகங்கள் வருவதைப் பார்த்தான்.
௬௪ ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள்.
௬௫ அவள் வேலைக்காரனிடம், “வயலில் நம்மை சந்திக்க வருகிறாரே அந்த இளைஞன் யார்?”
என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் மகன்” என்று பதில் சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டாள்.
௬௬ ஈசாக்கிடம் வேலைக்காரன் நடந்ததை எல்லாம் விபரமாகச் சொன்னான்.
௬௭ பின் ஈசாக்கு அவளை அழைத்துக்கொண்டு அவனது தாயான சாராளின் கூடாரத்திற்குப் போனான். அன்று அவள் அவனது மனைவியானாள். ஈசாக்கு ரெபெக்காளைப் பெரிதும் நேசித்தான். அவன் தாயின் மரணத்தினால் அடைந்த துக்கம் குறைந்து அமைதியும் ஆறுதலும் பெற்றான்.