௩௨
ஏசாவோடு திரும்ப சேருதல்
௧ யாக்கோபும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். வழியில் அவன் தேவ தூதர்களைக் கண்டான்.
௨ அவர்களைப் பார்த்ததும், “இதுவே தேவனின் முகாம்” என்று எண்ணினான். அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பேர் வைத்தான்.
௩ யாக்கோபின் சகோதரனான ஏசா, சேயீர் பகுதியில் வாழ்ந்து வந்தான். அது ஏதோம் நாட்டைச் சேர்ந்தது. யாக்கோபு ஏசாவிடம் தூதுவர்களை அனுப்பினான்.
௪ யாக்கோபு அவர்களிடம், “எனது எஜமானனான ஏசாவிடம் இதைச் சொல்லுங்கள்: ‘உங்கள் வேலைக்காரனான யாக்கோபு இந்த நாள்வரை லாபானோடு வாழ்ந்தேன்.
௫ என்னிடம் நிறைய பசுக்களும், கழுதைகளும், ஆடுகளும், ஆண் வேலைக்காரர்களும், பெண் வேலைக்காரர்களும் உள்ளனர். ஐயா நீர் எங்களை ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த தூதுவரை அனுப்பினேன்’ ” என்றான்.
௬ தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உங்கள் சகோதரர் ஏசாவிடம் சொன்னோம். அவர் உங்களைச் சந்திக்க 400 பேரோடே வருகிறார்” என்றனர்.
௭ அதனால் யாக்கோபு பயந்தான். தன்னோடு இருந்தவர்களையும் மிருகங்களையும் இரு பிரிவாகப் பிரித்தான்.
௮ “ஏசா வந்து ஒரு பிரிவை அழித்தால் இன்னொரு பிரிவு தப்பி ஓடிப் பிழைத்துக்கொள்ளும்” என்று நினைத்தான்.
௯ “என் தந்தையாகிய ஆபிரகாமின் தேவனே! என் தந்தையாகிய ஈசாக்கின் தேவனே, கர்த்தாவே, என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகுமாறு சொன்னீர். எனக்கு நன்மை செய்வதாகவும் சொன்னீர்.
௧௦ என் மீது நீர் வைத்த மிகுதியான கருணைக்கும் நன்மைகளுக்கும் நான் தகுதியுடையவனில்லை. நான் யோர்தான் ஆற்றை முதல் முறையாகக் கடந்து சென்றபோது, என்னிடம் எதுவுமில்லை. ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. இப்போது என்னிடம் இரு குழுக்களாகப் பிரிக்கும் அளவிற்கு எல்லாம் உள்ளது.
௧௧ இப்போது என்னை என் சகோதரனாகிய ஏசாவிடமிருந்து காப்பாற்றும். அவனைக் குறித்து நான் அஞ்சுகிறேன். அவன் வந்து அனைவரையும் கொன்றுவிடுவான்.
௧௨ கர்த்தாவே, ‘நான் உனக்கு நன்மை செய்வேன் என்று சொன்னீர். உனது குடும்பத்தையும் ஜனங்களையும் கடற்கரையிலுள்ள மணலைப் போன்று பெருகச் செய்வேன்’ என்று சொன்னீர்” என்று பிரார்த்தித்தான்.
௧௩ யாக்கோபு இரவு முழுவதும் அங்கே தங்கி இருந்தான். ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க சில பொருட்களைத் தயார் செய்து வைத்தான்.
௧௪ 200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும்,
௧௫ பால் கொடுக்கும் 30 ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும், 40 கடாரிகளையும், 10 காளைகளையும் 20 பெண் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தான்.
௧௬ வேலைக்காரனிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்புவித்து, “எனக்கு முன்னால் போங்கள். ஒவ்வொரு மந்தைக்கும் இடைவெளி இருக்கட்டும்” என்றான்.
௧௭ யாக்கோபு அவர்களுக்குச் சில ஆணைகளையும் இட்டான். முதல் குழுவிடம், “என் சகோதரன் வந்து, ‘யாருடைய மிருகங்கள் இவை? எங்கே போகின்றன? யாருடைய வேலைக்காரர்கள் நீங்கள்’ என்று கேட்டால் நீங்கள்,
௧௮ ‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் மிருகங்கள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
௧௯ யாக்கோபு இரண்டாம் வேலைக்காரனுக்கும், மூன்றாம் வேலைக்காரனுக்கும், மற்ற வேலைக்காரர்களுக்கும் இவ்வாறே கட்டளையிட்டான். “நீங்கள் ஏசாவைச் சந்திக்கும்போது.
௨௦ இவ்வாறே சொல்ல வேண்டும். ‘இவை உங்களுக்கான பரிசுகள். உங்கள் அடிமையான யாக்கோபு பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’, என்று சொல்லவேண்டும்” என்றான்.
யாக்கோபு, “இவர்களையும் பரிசுகளையும் முதலில் அனுப்பி வைத்ததால் என் சகோதரன் ஏசா இவற்றை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடலாம்” என்று எண்ணினான்.
௨௧ எனவே, யாக்கோபு பரிசுகளை அனுப்பிவிட்டு அன்று இரவு கூடாரத்திலேயே தங்கிவிட்டான்.
௨௨ பின்னிரவில் எழுந்து அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். அவன் தனது இரண்டு மனைவிகளையும், இரண்டு வேலைக்காரிகளையும், பதினொரு குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்தான்.
௨௩ முதலில் தன் குடும்பத்தை ஆற்றைக் கடக்க அனுப்பினான். பிறகு தனக்குரிய அனைத்தும் கடக்க உதவினான்.
தேவனோடு போராடுதல்
௨௪ யாக்கோபு ஆற்றைக் கடந்தவர்களில் கடைசி நபர். அவன் ஆற்றைக் கடக்குமுன், தனியாக நிற்கும்போது தேவதூதனைப் போன்ற ஒருவர் வந்து அவனோடு போராடினார். சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் போராடியும்,
௨௫ அந்த மனிதரை யாக்கோபு விடுவதாயில்லை. எனவே, அவர் யாக்கோபின் தொடையைத் தொட்டார். அப்போது யாக்கோபின் கால் சுளுக்கிக்கொண்டது.
௨௬ அந்த மனிதர் யாக்கோபிடம், “என்னைப் போக விடுகிறாயா? சூரியன் உதித்துவிட்டது” என்று கேட்டார்.
அதற்கு யாக்கோபு, “நான் உம்மைப் போகவிடமாட்டேன். நீர் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும்” என்றான்.
௨௭ அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான்.
௨௮ பிறகு அந்த மனிதர், “உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. உன் பெயர் இஸ்ரவேல். நீ தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டபடியால் நான் உனக்கு இந்தப் பெயரை வைக்கிறேன். உன்னைத் தோற்கடிக்க மனிதர்களால் முடியாது” என்றார்.
௨௯ யாக்கோபு அவரிடம், “உமது பெயரைத் தயவு செய்து சொல்லும்” என்றான்.
ஆனால் அவர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். அதே சமயத்தில் அவர் யாக்கோபை ஆசீர்வதித்தார்.
௩௦ எனவே, யாக்கோபு அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயர் வைத்தான். “இந்த இடத்தில் நான் தேவனை முகமுகமாய்ப் பார்த்தேன். உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்றான்.
௩௧ அவன் பெனியேலைக் கடந்து போகையில் சூரியன் உதயமாகிவிட்டது. அவனது தொடை சுளுக்கிக்கொண்டதால் நொண்டி நொண்டி நடந்தான்.
௩௨ எனவே, இன்னும் இஸ்ரவேல் ஜனங்கள் தொடைச் சந்து தசையை உண்பதில்லை. ஏனென்றால் அது தேவன் யாக்கோபின் தொடைச் சந்து தசையைத் தொட்ட இடம் ஆகும்.