௨௨
எலிப்பாஸ் பதில் கூறுகிறான்
௧ அப்போது தேமானின் எலிப்பாஸ் பதிலாக,
 
௨ “தேவனுக்கு நமது உதவி தேவையா?
இல்லை!
மிகுந்த ஞானவானும் உண்மையாகவே தேவனுக்குப் பயன்படுவதில்லை.
௩ நீ தக்க நெறியில் வாழ்ந்தது தேவனுக்கு உதவுமா?
இல்லை! நீ தேவனைப் பின்பற்றுவதால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஏதேனும் கிடைக்குமா? இல்லை!
௪ யோபுவே, ஏன் தேவன் உன்னைத் தண்டித்து, உன்னில் குறை காண்கிறார்?
நீ அவரை தொழுது கொள்வதாலா?
௫ இல்லை! நீ மிகுதியாகப் பாவம் செய்திருப்பதால்தான்.
யோபுவே, நீ பாவம் செய்வதை நிறுத்துவதில்லை!
௬ நீ உன் சகோதரன் ஒருவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்து,
அவன் உனக்குத் திருப்பித் தருவதற்கு அடையாளமாக எதையேனும் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாம்.
நீ கடனுக்கு ஈடாக ஏதேனும் ஏழை மனிதனின் ஆடைகளை எடுத்திருக்கலாம்.
இல்லையெனில், எக்காரணமுமின்றி அவ்வாறு செய்திருக்கலாம்.
௭ சோர்ந்த, பசித்த ஜனங்களுக்கு நீ தண்ணீரும், உணவும் கொடாது இருந்திருக்கலாம்.
௮ யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு,
ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள்.
௯ விதவைகளுக்கு எதுவும் கொடாது அவர்களை நீ துரத்தியிருக்கலாம்.
யோபுவே, நீ அநாதைகளை ஏமாற்றியிருக்கலாம்.
௧௦ ஆகவே, உன்னைச் சுற்றிலும் கண்ணிகள் அமைந்துள்ளன,
திடீர்பயம் உன்னை அஞ்சவைக்கிறது.
௧௧ ஆகவே, நீ பார்க்க முடியாதபடி மிகுந்த இருள் சூழ்ந்திருக்கிறது,
வெள்ளப்பெருக்கு உன்னை மூடுகிறது.
 
௧௨ “தேவன் பரலேகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வாழ்கிறார்.
விண்மீன்கள் எத்தனை உயரத்தில் உள்ளன எனப்பாருங்கள்.
மிக உயர்ந்த நட்சத்திரத்தை தேவன் கிழே நோக்கிப்பார்க்கிறார்.
௧௩ ஆனால் யோபுவே, நீ சொல்லலாம் ‘தேவன் என்ன அறிவார்?
இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து, தேவன் நம்மை நியாயந்தீர்க்கக் கூடுமா?
௧௪ அடர்த்தியான மேகங்கள் அவரை நம்மிடமிருந்து மறைக்கின்றன,
எனவே, அவர் வானத்தின் விளிம்பைத் தாண்டி நடக்கிறபோது நம்மைப் பார்க்க முடிவதில்லை’ எனக் கூறுவாய்.
 
௧௫ “யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில்
நீ நடந்துக்கொண்டிருக்கிறாய்.
௧௬ அவர்கள் இறக்கவேண்டிய காலத்திற்கு முன்னரே, அத்தீயோர் அழிக்கப்பட்டார்கள்.
அவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
௧௭ அவர்கள் தேவனைப் பார்த்து, ‘எங்களைத் தனித்து விட்டுவிடும்!
சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களை என்னச் செய்யமுடியும்!’ என்பார்கள்.
௧௮ நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே!
இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது.
௧௯ அழிவதை நல்லோர் காண்பார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள்,
௨௦ ‘உண்மையாகவே நம் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
நெருப்பு அவர்களின் செல்வத்தைத் கொளுத்துகிறது!’
 
௨௧ “இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள்.
இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும்.
௨௨ அவரது போதனையை ஏற்றுக்கொள்.
அவர் சொல்வதைக் கவனமாகக் கேள்.
௨௩ யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய்.
ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும்.
௨௪ உனது பொன்னை நீ தூசியாகக் கருதவேண்டும்.
பள்ளத்தாக்கின் பாறைகளைப் போல, உனது உயர்ந்த பொன்னைக் கருதவேண்டும்.
௨௫ சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும்.
அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும்.
௨௬ அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய்.
அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய்.
௨௭ நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார்.
நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.
௨௮ நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும்,
உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.
௨௯ பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார்.
ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார்.
௩௦ அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும்.
நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார்.
ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான்.