௭
௧ அதிகாலையில் யெருபாகாலும் (கிதியோன்) அவனது ஆட்களும் ஆரோத்திலுள்ள நீருற்றினருகில் தம் முகாம்களை ஏற்படுத்திக்கொண்டனர், மோரே என்னும் மலையடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். இப்பகுதி, கிதியோனும் அவனது ஆட்களும் தங்கி இருந்த பகுதிக்கு வடக்கில் இருந்தது.
௨ கர்த்தர் கிதியோனை நோக்கி, “மீதியானியரை வெல்வதற்கு உனது ஜனங்களுக்கு உதவப்போகிறேன். ஆனால் அவ்வேலைக்கு தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான வீரர்கள் உன்னோடிருக்கிறார்கள். இஸ்ரவேலர் என்னை மறந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொண்டதாக எண்ணுவதை நான் விரும்பவில்லை.
௩ எனவே இப்போது உன் வீரர்களுக்கு இதனை அறிவித்துவிடு. அவர்களிடம், ‘பயப்படுகிற எவனும் கீலேயாத் மலையை விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று கூறு” என்றார்.
அப்போது 22,000 பேர் கிதியோனை விட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். ஆனாலும் 10,000 பேர் மீதி இருந்தனர்.
௪ அப்போது கர்த்தர் கிதியோனை நோக்கி, “இப்போதும் ஆட்கள் மிகுதியாக இருக்கிறார்கள், அவர்களை தண்ணீரருகே அழைத்துச் செல். உனக்காக அவர்களை அங்கு பரிசோதிப்பேன். ‘இந்த மனிதன் உன்னோடு செல்வான்’ என்று நான் கூறினால் அவன் போவான். ‘அவன் உன்னோடு செல்லமாட்டான்’ என்று நான் கூறினால் அவன் போகமாட்டான்” என்றார்.
௫ எனவே கிதியோன் அவர்களை தண்ணீரருகே அழைத்துச் சென்றான். அங்கு கர்த்தர் கிதியோனை நோக்கி, “உனது ஆட்களில் நாயைப்போல் தண்ணீரை நக்கிக் குடிப்போரை ஒரு குழுவாகவும், மண்டியிட்டு தண்ணீரை குடிப்போரை மற்றொரு குழுவாகவும் பிரித்து விடு” என்றார்.
௬ கைகளால் தண்ணீரை அள்ளி நாயைப் போல் நக்கிப் பருகியோர் 300 பேர். மற்ற எல்லோரும் மண்டியிட்டுத் தண்ணீரைப் பருகினார்கள்.
௭ கர்த்தர் கிதியோனை நோக்கி, “நாயைப் போல் தண்ணீரை நக்கிய 300 பேரையும் நான் பயன்படுத்துவேன். நீ மீதியானியரை முறியடிக்கும்படி செய்வேன். பிறர் வீடுகளுக்குத் திரும்பட்டும்” என்றார்.
௮ எனவே கிதியோன் பிற இஸ்ரவேலரைத் திருப்பி அனுப்பிவிட்டான். 300 மனிதரை மட்டும் கிதியோன் தன்னோடு இருக்கச் செய்தான். வீட்டிற்குச் சென்றவர்களது பொருட்களையும், எக்காளங்களையும் அந்த 300 பேரும் வைத்துக் கொண்டனர்.
கிதியோனின் முகாமிற்குக் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர்.
௯ இரவில் கர்த்தர் கிதியோனிடம், “எழுந்திரு, நீ மீதியானியரின் சேனையைத் தோற்கடிக்கச் செய்வேன். அவர்களின் முகாமிற்குச் செல்.
௧௦ தனியே செல்ல நீ பயப்பட்டால் உன் வேலைக்காரனாகிய பூராவையும் உன்னோடு அழைத்துச் செல்.
௧௧ மீதியானியரின் முகாமிற்குள் செல். அங்கே ஜனங்கள் பேசும் செய்திகளைக் கவனித்துக்கொள். அதன்பின் அவர்களைத் தாக்குவதற்கு அஞ்சமாட்டாய்” என்றார்.
எனவே கிதியோனும் அவனது வேலையாளாகிய பூராவும் பகைவர் முகாமின் ஓரத்திற்குச் சென்றனர்.
௧௨ அப்பள்ளத்தாக்கில் மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கிலிருந்து வந்த அனைத்து ஜனங்களும் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். வெட்டுக் கிளிகளின் கூட்டத்தைப் போல அவர்கள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தனர். கடற்கரை மணலைப் போன்று அவர்களுக்கு ஒட்டகங்கள் இருந்ததுபோல் தோன்றிற்று.
௧௩ கிதியோன் பகைவரின் முகாமை நெருங்கி ஒரு மனிதன் பேசுவதைக் கேட்டான். அம்மனிதன் அவனது நண்பனுக்குத் தான் கண்ட கனவைக் கூறிக்கொண்டிருந்தான். அம்மனிதன், “மீதியானியரின் முகாமில் ஒரு உருண்டை வடிவமான அப்பமானது உருண்டு வருவதாகக் கனவுக் கண்டேன். அந்த அப்பம் மிக வலிமையாக முகாமைத் தாக்கியதால் கூடாரம் தாக்குண்டு தரைமட்டமாக விழுந்தது” என்றான்.
௧௪ அம்மனிதனின் நண்பன் கனவின் பொருளை அறிந்திருந்தான். அம்மனிதனின் நண்பன், “உன் கனவிற்கு ஒரே ஒரு பொருளுண்டு. உனது கனவு இஸ்ரவேலின் மனிதனைப் பற்றியது. அது யோவாஸின் மகனாகிய கிதியோனைக் குறித்து உணர்த்துகிறது. மீதியானியரின் எல்லா சேனைகளையும் கிதியோன் தோற்கடிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் என்று இது பொருள்படுகிறது” என்றான்.
௧௫ அம்மனிதர்கள் கனவையும் அதன் பெருளையும்பற்றிப் போசுவதை அவன் கேட்ட பின்னர், கிதியோன் தேவனை விழுந்து வணங்கினான். பின் அவன் இஸ்ரவேலரின் முகாமிற்குத் திரும்பிப் போனான். கிதியோன் ஜனங்களை அழைத்து, “எழுந்திருங்கள்! மீதியானியரை வெல்வதற்குக் கர்த்தர் உதவி செய்வார்” என்றான்.
௧௬ பின்பு கிதியோன் 300 பேரையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். கிதியோன் ஒவ்வொருவருக்கும் ஒரு எக்காளத்தையும் ஒரு வெறுமையான ஜாடியையும் கொடுத்தான். ஒவ்வொரு ஜாடியினுள்ளும் ஒரு எரியும் தீப்பந்தம் இருந்தது.
௧௭ கிதியோன் அம்மனிதரைப் பார்த்து, “என்னைக் கூர்ந்து கவனித்து நான் செய்வதைச் செய்யுங்கள். பகைவரின் முகாம்வரைக்கும் என்னைத் தொடர்ந்து வாருங்கள். பகைவர்களது முகாமின் ஓரத்தை நான் அடைந்ததும் நான் செய்வதையே நீங்களும் செய்யுங்கள்.
௧௮ நீங்கள் எல்லோரும் பகைவரின் முகாம்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். நானும் என்னோடிருக்கும் ஆட்களும் எக்காளங்களை ஊதுவோம். நாங்கள் எக்காளங்களை ஊதியதும் நீங்களும் உங்கள் எக்காளங்களை ஊதுங்கள். உடனே சத்தமாக இவ்வாறு கூறுங்கள்: ‘கர்த்தருக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூறுங்கள்” என்றான்.
௧௯ கிதியோனும் அவனோடிருந்த 100 மனிதர்களும் பகைவரது முகாமின் ஓரத்தை அடைந்தார்கள். பகைவர்கள் இரவுக் காவலாளரை மாற்றினதும் அவர்கள் அங்கு வந்தடைந்தனர். அது நள்ளிரவு ஜாமக்காவலின்போது நடந்தது. கிதியோனும் அவனது மனிதர்களும் எக்காளங்களை ஊதி, அவர்களுடைய ஜாடிகளை உடைத்தனர்.
௨௦ உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர்.
௨௧ கிதியோனின் மனிதர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டனர். முகாமிற்குள் மீதியானின் மனிதர்கள் கதறிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர்.
௨௨ கிதியோனின் 300 மனிதர்களும் எக்காளங்களை ஊதியபொழுது, மீதியானியர் ஒருவரையொருவர் தங்கள் வாள்களால் கொல்லும்படியாக கர்த்தர் செய்தார். சேரோ நகரத்திற்கு அருகேயுள்ள பெத்சித்தா என்னும் நகரத்திற்கு பகைவரின் படைகள் ஓட்டம் எடுத்தனர். தாபாத் நகரத்தின் அருகேயுள்ள ஆபேல்மேகொலா நகரத்தின் எல்லை வரைக்கும் அவர்கள் ஓடிச் சென்றார்கள்.
௨௩ நப்தலி, ஆசேர், மனாசே கோத்திரத்தினரைச் சேர்ந்த வீரர்கள் மீதியானியரைத் துரத்துமாறு அனுப்பப்பட்டனர்.
௨௪ கிதியோன் எப்பிராயீமின் மலைநாடுகளுக்கெல்லாம் செய்தி அறிவிப்போரை அனுப்பினான். அவர்கள், “கீழிறங்கி வந்து மீதியானியரைத் தாக்குங்கள். பெத்தாபராவரைக்கும் யோர்தான் நதிமட்டும் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வாருங்கள். மீதியானியர் அங்கு வந்து சேரும்முன்னர் இதைச் செய்யுங்கள்” என்றார்கள்.
எனவே அவர்கள் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்களை அழைத்தனர். பெத்தாபரா வரைக்கும் நதிப்பிரதேசத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
௨௫ எப்பிராயீம் மனிதர்கள் மீதியானிய தலைவர்களில் இருவரைப் பிடித்தனர். அவர்களின் பெயர்கள்: ஓரேபும் சேபும் ஆகும். எப்பிராயீம் ஆட்கள் ஓரேப் பாறை என்னுமிடத்தில் ஓரேபைக் கொன்றனர். சேப் ஆலை என்னுமிடத்தில் அவர்கள் சேபைக் கொன்றனர். எப்பிராயீம் மனிதர்கள் மீதியானியரைத் தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் அவர்கள் முதலில் ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை வெட்டி, அத்தலைகளைக் கிதியோனிடம் கொண்டு வந்தனர். அச்சமயம் கிதியோன் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கும் இடத்தில் இருந்தான்.