௪
போவாஸும் மற்ற உறவினனும்
௧ நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான்.
௨ பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர்.
௩ பிறகு போவாஸ் நெருங்கிய உறவினனிடம், “மோவாபின் மலை நகரத்திலிருந்து நகோமி வந்திருக்கிறாள். எலிமெலேக்கின் நிலத்தை அவள் விற்கப் போகிறாள்.
௪ நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான்.
௫ பிறகு போவாஸ், “நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்” என்றான்.
௬ அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான்.
௭ (இஸ்ரவேலில் முற்காலத்தில், ஒருவன் ஒரு சொத்தை வாங்கினாலோ மீட்டுக் கொண்டாலோ, ஒருவன் தனது பாதரட்சையை எடுத்து மற்றவனிடம் கொடுக்கவேண்டும். இது வாங்கியதற்கான ஒரு சான்றாக விளங்கும்.)
௮ எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான்.
௯ பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன்.
௧௦ நான் ரூத்தையும் என் மனைவியாகப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு நான் செய்வதால், மரித்துப்போனவனின் சொத்தானது அவனது குடும்பத்துக்கு உரியதாகவே விளங்கும். இதன் மூலம் அவனது பெயரானது அவனது குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு பிரிக்கப்படாமல் இருக்கும். இன்று இதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்றான்.
௧௧ நகரவாசலில் உள்ள ஜனங்களும் மூப்பர்களும், சாட்சிகளாக இருந்தவர்களும், “உனது வீட்டிற்கு வருகிற இந்தப் பெண்ணை இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப் போலவும், லேயாளைப் போலவும் கர்த்தர் ஆக்குவாராக. நீ எப்பிராத்தாவிலே அதிகாரத்தைப் பெறுவாயாக! பெத்லெகேமில் புகழ் பெறுவாயாக!
௧௨ தாமார் யூதாவுக்குப் பேரேசை மகனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்” என்றனர்.
௧௩ எனவே போவாஸ் ரூத்தை மணந்துகொண்டான். அவள் கர்ப்பவதியாக கர்த்தர் கருணை செய்தார். அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
௧௪ நகரத்தில் உள்ள பெண்கள் நகோமியிடம், “உனக்குப் பிள்ளையைக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் இஸ்ரவேலில் மிகுந்த புகழைப் பெறுவான்.
௧௫ அவன் மீண்டும் உன்னை வாழவைப்பான், உனது முதியவயதில் அவன் உன்னைக் கவனித்துக்கொள்வான். இவ்வாறு நடக்குமாறு உனது மருமகள் செய்தாள். அவள் உனக்காகவே இந்தக் குழந்தையைப் பெற்றாள். அவள் உன்மீது அன்புடையவள். அவள் 7 ஆண் மகன்களையும்விட உனக்கு மேலானவள்” என்றனர்.
௧௬ நகோமி பிள்ளையை எடுத்துத் தனது கைகளில் ஏந்தி அவனைக் கவனித்துக் கொண்டாள்.
௧௭ அயல் வீட்டுப் பெண்கள், “இந்த பையன் நகோமிக்காக பிறந்தவன்” என்றனர். அவர்கள் அவனுக்கு ஓபேத் என்று பேரிட்டனர். அவன் ஈசாயின் தந்தையானான். ஈசாய் அரசனான தாவீதின் தந்தையானான்.
ரூத் மற்றும் போவாஸின் குடும்பம்
௧௮ இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு:
பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான்.
௧௯ எஸ்ரோன் ராமின் தந்தையானான்.
ராம் அம்மினதாபின் தந்தையானான்.
௨௦ அம்மினதாப் நகசோனின் தந்தையானான்.
நகசோன் சல்மோனின் தந்தையானான்.
௨௧ சல்மோன் போவாஸின் தந்தையானான்.
போவாஸ் ஓபேதின் தந்தையானான்.
௨௨ ஓபேத் ஈசாயின் தந்தையானான்.
ஈசாய் தாவீதின் தந்தையானான்.