௪
அவன் அவளோடு பேசுகிறான்
௧ என் அன்பே! நீ அழகானவள்.
ஓ நீ அழகானவள்.
உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள்
புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன.
உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில்
நடன மாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தை போல அசைந்துகொண்டிருக்கிறது.
௨ உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன.
அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன.
௩ உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன.
உனது வாய் அழகானது.
உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே
வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன.
௪ உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது.
அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
௫ உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும்
வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன.
௬ பகலின் கடைசி மூச்சு இருக்கும்போதும் நிழல் சாயும்போதும்,
நான் வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி மலைக்கும் போவேன்.
௭ என் அன்பே, முழுவதும் நீ அழகானவள்
உனக்கு எதிலும் குறைவில்லை.
௮ என்னோடு வா, என் மணமகளே
லீபனோனிலிருந்து என்னோடு வா.
அமனா மலையின் உச்சியிலிருந்து வா.
சேனீர் எர்மோனின் சிகரங்களிலிருந்தும்,
சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளினுடைய மலைகளிலிருந்தும் வா.
௯ என் அன்பே! என் மணமகளே!
என்னைக் கவர்ந்தவள் நீ உன் ஒரு கண்ணால்,
உன் கழுத்திலுள்ள ஒரு நகையால் என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாய்.
௧௦ என் அன்பே, என் மணமகளே,
உன் அன்பு மிக அழகானது.
உன் அன்பு திராட்சை ரசத்தைவிடச் சிறந்தது.
உன் பரிமள தைலங்களின் மணம் சகல சுகந்தவர்க்கங்களின் மணத்தைவிடச் சிறந்தது.
௧௧ என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது.
உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது.
உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது.
௧௨ என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள்.
நீ பூட்டப்பட்ட தோட்டத்தைப் போன்றும்,
பூட்டிவைக்கப்பட்ட குளத்தைப் போன்றும்,
அடைக்கப்பட்ட நீரூற்றைப்போன்றும் இருக்கிறாய்.
௧௩ உன் பக்க உறுப்புகள் ஒரு தோட்டம் மாதளஞ் செடிகளாலும்
மற்ற பழமரங்களாலும் நிறைந்துள்ளதுபோல் உள்ளன, நளதம்.
௧௪ குங்குமம், வசம்பு, லவங்கம்,
தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச் செடிகளும் சந்தன
மரங்களும் சகலவித மணப்பொருள் செடிகளும் உள்ள தோட்டம் போலுள்ளன.
௧௫ நீ தோட்டத்து நீரூற்று போன்றவள்
சுத்தமான தண்ணீருள்ள கிணறும்,
லீபனோன் மலையிலிருந்து ஓடிவரும் ஓடைகளும் அதிலே உள்ளன.
அவள் பேசுகிறாள்
௧௬ வாடைக் காற்றே எழும்பு.
தென்றலே வா.
என் தோட்டத்தில் வீசு.
உன் இனிய மணத்தைப் பரப்பு.
என் அன்பரைத் தன் தோட்டத்திற்குள் நுழையவிடு.
அவர் இனிய பழங்களைச் சாப்பிடட்டும்.