ஆமோஸ்
ஆசிரியர்
ஆமோஸ் 1:1 ன்படி, தீர்க்கதரிசி ஆமோஸ் தான் இதன் ஆசிரியர் என்று கூறுகிறது. தெக்கோவா ஊர் மேய்ப்பர்கள் மத்தியில் வாழ்ந்தான். தான் தீர்க்கதரிசிகள் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று எழுதுகிறான். தேவன் அக்கினியாலும் வெட்டுகிகிகளாலும் இஸ்ரவேலை நியயாம்தீர்க்க இருந்தார், ஆனால் ஆமோசின் ஜெபத்தால் தப்பிவிக்கப்பட்டது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 760 க்கும் 750 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேலின் வடதேசத்தின் உள்ள பெத்தேல், சமாரிய ஊர்களில் பிரசங்கம் செய்தான்.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேலின் வடதேசத்தின் மக்களுக்காகவும், வருங்காலத்தில் வேதம் வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் பெருமையை எதிர்க்கிறார். மக்கள் தன்னிடம் உள்ள ஆசிர்வாதம் போதும் தேவன் அவசியம் இல்லை என்று சொல்லி, ஆசிர்வாதத்தை கொடுத்த தேவனையே மறந்து விட்டார்கள். எல்லாரையும் தேவன் மதிக்கிறார், ஏழைகளை இழிவுப்படுத்துவதைக் குறித்து எச்சரிக்கிறார். தேவனை மகிமைப்படுத்தும் மெய்யான ஆராதனையை விரும்புகிறார். பணக்காரர்கள் சுயநலவாதிகளாக வாழ்ந்தார்கள், தன் பிறனை நேசிக்கவில்லை, சொந்த இலாபத்தில் கவனமாக இருந்தார்கள் ஆகையால் தேவனுடைய வார்த்தை ஆமோஸ் மூலமாக அவர்களுக்கு விரோதமாக வந்தது.
மையக் கருத்து
நியாயத்தீர்ப்பு
பொருளடக்கம்
1. தேசங்களின் அழிவு — 1:1-2:16
2. தீர்க்கதரிசன அழைப்பு — 3:1-8
3. இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பு — 3:9-9:10
4. மீட்டெடுப்பு — 9:11-15
அத்தியாயம் 1
இஸ்ரவேலின் அண்டை தேசத்தார்களுக்கான நியாயத்தீர்ப்பு
1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள்.
2 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பர்களின் பசும்புல்நிலம் துக்கம் கொண்டாடும்; கர்மேலின் உச்சியும் காய்ந்துபோகும்.
3 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே.
4 ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரண்மனைகளை அழித்துவிடும்.
5 நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே.
7 காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரண்மனைகளை அழித்துவிடும்.
8 நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே.
10 தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார்.
11 மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
12 தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
13 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
14 ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும்.
15 அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.