கொலோசெயர்
ஆசிரியர்
கொலோசெயர் பவுலின் உண்மையான கடிதம் ஆகும் (1: 1). ஆரம்பகால சபையில், ஆசிரியரின் விஷயத்தில் பேசும் அனைவருமே பவுல் தான் ஆசிரியர் என்று தெரிவிக்கிறார்கள். கொலோசேயிலுள்ள சபை பவுலினால் நிறுவப்படவில்லை. பவுலின் சக ஊழியர்களில் ஒருவரான எப்பாப்பிரா முதலில் கொலோசெயில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருந்தார் (4: 12, 13). கள்ளப் போதகர்கள் கொலோசெக்கு விசித்திரமான, புதிய உபதேசங்களோடு வந்திருந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவத்துடன் புறசாதி தத்துவம் மற்றும் யூத மார்க்கத்தையும் கலந்தார்கள். கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் மேலானவர் என்பதைக் காட்டுவதன் மூலம் இந்தப் பொய் போதனைகளை பவுல் எதிர்த்தார். கொலோசெயர் நிருபமானது, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நிருபம் என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலாக தலைமை வகிக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60 க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
ரோமில் முதலாம் முறையாக சிறைச்சாலையில் இருக்கும்போது பவுல் அதை எழுதியிருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
“கொலோசெயாவில் கிறிஸ்துவில் பரிசுத்தவான்களுக்கும் உண்மையுள்ள சகோதரர்களுக்கும்” (1: 1-2) என்று எழுதப்பட்டபடி பவுல், எபேசுவிலிருந்து நூறு மைல் தூரத்திலிருந்த, லீகஸ் பள்ளத்தாக்கின் முக்கிய இடத்தில் இருந்த கொலோசேயிலுள்ள சபைக்கு எழுதினார். அப்போஸ்தலன் சபையை ஒருபோதும் சந்திக்கவில்லை (1: 4; 2: 1).
எழுதப்பட்ட நோக்கம்
கொலோசெயில் எழுந்திருந்த ஆபத்தான கருத்துக்களுக்கு எதிரான அறிவுரை கொடுப்பதற்காக பவுல் எழுதினார்: “அனைத்து படைப்புகளுக்கும் (1: 15; 3: 4), கிறிஸ்துவின் முழுமையான, நேரடி, தொடர்ந்து மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியதன் மூலம், (3: 5; 4: 6) கிறிஸ்துவின் கண்ணோட்டத்தில் வாழ்வதற்காகவும், ஒழுக்கமான கிறிஸ்தவ வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும், தவறான போதகர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக விசுவாசத்தில் அவர்கள் உறுதியையும் பராமரிக்கவும் சபையை ஊக்குவிக்கவும் (2: 2-5) எழுதினார்.
மையக் கருத்து
கிறிஸ்துவின் மேலாதிக்கம்
பொருளடக்கம்
1. பவுலின் வணக்கவுரையும் ஜெபமும் — 1:1-14
2. கிறிஸ்துவுக்குள் உள்ள நபருக்கு பவுலுடைய உபதேசம் — 1:15-23
3. தேவனின் திட்டத்திலும் நோக்கத்திலும் பவுலின் பங்கு — 1:24-2:5
4. தவறான போதனைக்கு எதிரான எச்சரிக்கை — 2:6-15
5. பவுல் மதவெறி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார் — 2:16-3:4
6. கிறிஸ்துவில் உள்ள புதிய மனிதனின் விளக்கம் — 3:5-25
7. பாராட்டுதல், இறுதி வாழ்த்து — 4:1-18
அத்தியாயம் 1
1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றிசொல்லுதலும் ஜெபமும்
3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
10 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
11 சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
12 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
13 இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
14 குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கிறிஸ்து முதன்மையானவர்
15 அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
16 ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
19 எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
21 முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
22 நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
23 அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
பவுலின் பாடுகள்
24 இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
25 ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு,
26 உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
27 யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
28 எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
29 அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.