அத்தியாயம் 32
பார்வோனுக்கான புலம்பல்
1 பாபிலோனின் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: தேசங்களுக்குள்ளே நீ பாலசிங்கத்திற்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன்னுடைய நதிகளில் எழும்பி, உன்னுடைய கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
3 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
4 உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கச்செய்து, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
5 உன்னுடைய சதையை மலைகளின்மேல் போட்டு, உன்னுடைய உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
6 நீ நீந்தின தேசத்தின்மேல் உன்னுடைய இரத்தத்தை மலைகள்வரைப் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
7 உன்னை நான் அணைத்துப்போடும்போது, வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகச்செய்வேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்காமல் இருக்கும்.
8 நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகச்செய்து, உன்னுடைய தேசத்தின்மேல் இருளை வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 உன்னுடைய அழிவை தேசங்கள் வரை, நீ அறியாத தேசங்கள்வரை நான் எட்டச்செய்யும்போது, அநேகம் மக்களின் இருதயத்தை கலக்கமடையச் செய்வேன்.
10 அநேகம் மக்களை உனக்காக திகைக்கச்செய்வேன்; அவர்களின் ராஜாக்கள், தங்களுடைய முகங்களுக்கு முன்பாக என்னுடைய வாளை நான் வீசும்போது மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் உயிருக்காக ஒவ்வொரு நிமிடமும் தத்தளிப்பார்கள்.
11 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் வாள் உன்மேல் வரும்.
12 பராக்கிரமசாலிகளின் வாள்களால் உன்னுடைய மக்கள்கூட்டத்தை விழச்செய்வேன்; அவர்கள் எல்லோரும் தேசங்களில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.
13 திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகங்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனிதனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.
14 அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியச்செய்து, அவர்களுடைய ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன்னுடைய நிறைவை இழந்து வெறுமையாகக் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் அழிக்கும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
16 இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி தேசத்தின் மகள்கள் புலம்புவார்கள்; இப்படி எகிப்திற்காகவும், அதினுடைய எல்லாத் திரளான மக்களுக்காகவும் புலம்புவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
17 பின்னும் பன்னிரண்டாம் வருடம் அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18 மனிதகுமாரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான மக்களுக்காக புலம்பி, அவர்களையும் பிரபலமான தேசத்தின் மகள்களையும் குழியில் இறங்கினவர்கள் அருகிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
19 மற்றவர்களைவிட நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்தில் இரு.
20 அவர்களுடைய வாளால் வெட்டுப்பட்டவர்களின் நடுவிலே விழுவார்கள், வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய மக்கள்கூட்டம் யாவையும் பிடித்திழுங்கள்.
21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள்.
22 அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
23 பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, வாழ்வோரின் தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
24 அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
25 வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான மக்களுக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டப்பட்ட விருத்தசேதனம் இல்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டப்பட்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.
26 அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய உயிருள்ளோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்களெல்லோரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள்; வாளால் வெட்ட்டப்பட்டு விழுவார்கள்.
27 உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும்.
28 நீயும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் இருப்பாய்.
29 அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; வாளால் வெட்டப்பட்டவர்களிடத்தில் இவர்கள் தங்களுடைய வல்லமையுடன் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் இருக்கிறார்கள்.
30 அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தாலும் தங்களுடைய பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டப்பட்டவர்களிடத்தில் இறங்கி, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்களுடைய அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
31 பார்வோன் அவர்களைப் பார்த்து தன்னுடைய ஏராளமான மக்களின்பேரிலும் ஆறுதலடைவான்; வாளால் வெட்டப்பட்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32 என்னைப்பற்றிய பயத்தை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டாக்குகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான மக்களும் வாளால் வெட்டுபட்டவர்களிடத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.