அத்தியாயம் 3
யூதரல்லாதவர்களுக்கு இரட்சிப்பு
இதினிமித்தம், பவுலாகிய நான் யூதரல்லாதோர்களாக இருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாக இருக்கிறேன். உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே; அது என்னவென்றால் யூதரல்லாதவர்கள் நற்செய்தியினால் உடன்பங்காளிகளுமாக, ஒரே சரீரத்திற்கு உரியவர்களுமாக, கிறிஸ்துவிற்குள் அவர்பண்ணின வாக்குத்தத்தத்திற்கு உடன்பங்காளிகளுமாக இருக்கிறார்கள் என்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார். இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன். பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, 10 உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி, 11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 12 அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது. 13 ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது.
எபேசியருக்கான பவுலின் ஜெபம்
14 இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய, 15 நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, 16 நீங்கள் அவருடைய ஆவியானவராலே உள்ளானமனிதனில் வல்லமையாகப் பலப்படவும், 17 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி, 18 எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து; 19 அறிவிற்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லாப் பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன். 20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 21 சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.