அத்தியாயம் 6
யெகோவாவின் விடுதலை வாக்குத்தத்தம்
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார்.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: “நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள* தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன். ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார். இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள். 10 பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: 11 “நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனுடன் பேசு” என்றார். 12 மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில் நின்று, “இஸ்ரவேலர்களே நான் சொல்வதைக் கேட்கவில்லை; பார்வோன் எப்படி நான் சொல்வதைக் கேட்பான்? நான் திக்கு வாயுள்ளவன்” என்றான்.
ஆரோன், மோசேயின் வம்சவரலாறு
13 யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.
14 அவர்களுடைய தகப்பன்மார்களுடைய வீட்டார்களின் தலைவர்கள் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்தவனாகிய ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்கள். 15 சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே. 16 வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான். 17 அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள். 18 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருடங்கள் உயிரோடு இருந்தான். 19 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே. 20 அம்ராம் தன்னுடைய அத்தையாகிய யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான். 21 இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள். 22 ஊசியேலின் மகன்கள் மீசாயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள். 23 ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயசரையும், இத்தாமாரையும் பெற்றாள். 24 கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே. 25 ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே. 26 இஸ்ரவேலர்களை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் யெகோவால் கட்டளை” பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே. 27 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
மோசேக்காக ஆரோன் பேசுதல்
28 யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்; 29 யெகோவா மோசேயை நோக்கி: “நானே யெகோவா; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல்” என்று சொன்னபோது, 30 மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில்: “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.
* அத்தியாயம் 6:3 6:3 எல்ஷடாய்