அத்தியாயம் 8
பெரு வெள்ளத்தின் முடிவு
1 தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
2 ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.
3 தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
4 ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.
5 பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
6 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
7 ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
8 பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான்.
9 பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
10 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
11 அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.
12 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
13 அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
14 இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
நோவா யெகோவாவை வழிபடுதல்
15 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
16 “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.
17 உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார்.
18 அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.
19 பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.
20 அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
21 சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை.
22 பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.