1 தெசலோனிக்கேயர்
ஆசிரியர்
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த கடிதத்தின் ஆசிரியர் என்று இருமுறை தன்னை அடையாளம் காட்டினார் (1: 1; 2: 18). பவுலின் மிஷனரி பயணத் தோழர்களான சீலா மற்றும் தீமோத்தேயு (3: 2, 6), இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது (அப்போஸ்தலர் 17: 1-9) சபையை நிறுவியபோது, அவர் அந்த சபையை விட்டுக் கடந்து சென்ற சில மாதங்களுக்குள் அந்த விசுவாசிகளுக்கு இந்த முதல் கடிதத்தை எழுதினார். தெசலோனிக்கேயில் பவுல் செய்த ஊழியம் யூதர்களை மட்டுமல்ல, புறஜாதியரையும் உண்மையாகவே தொட்டது. சபையில் உள்ள பல புறஜாதிகள் விக்கிரகாராதனையை விட்டு வெளியே வந்தார்கள், அது அந்த நேரத்தில் யூதர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையாக இருக்கவில்லை (1 தெசலோனிக்கேயர் 1: 9).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி. 51 க்கு இடையில் எழுதப்பட்டது.
கொரிந்து பட்டணத்திலிருந்து தெசலோனிக்கே சபைக்கு பவுல் முதல் கடிதத்தை எழுதினார்.
யாருக்காக எழுதப்பட்டது
தெசலோனிக்கேயர் 1: 1 ல், தெசலோனிக்கேயர்களின் சபையின் உறுப்பினர்களே தெசலோனிக்கேயர்களுக்கு முதல் கடிதத்தின் உத்தேசிக்கப்பட்ட வாசகர்களாக அடையாளம் காட்டுகிறது, இருந்தாலும் பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அது பொருந்துகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த கடிதத்தை எழுதும்போது பவுலின் நோக்கம் என்னவென்றால், புதிதாக மனந்திரும்பியவர்கள் தங்களின் சோதனைகளில் உற்சாகப்படுத்துவது (3: 3-5), தேவபக்தியான வாழ்க்கையைப் பற்றிய அறிவுரைகளை வழங்குவது (4: 1-12) கிறிஸ்துவின் வருகைக்குமுன் இருக்கும் விசுவாசிகள் எதிர்காலத்தைப் பற்றி உறுதியளிப்பது (4: 13-18), ஒழுக்க மற்றும் நடைமுறை, விஷயங்களை சரி செய்வது போன்றவையாகும்.
மையக் கருத்து
தேவாலயத்தில் அக்கறை
பொருளடக்கம்
1. நன்றிகூறுதல் — 1:1-10
2. அப்போஸ்தல நடவடிக்கைகளின் பாதுகாப்பு — 2:1-3:13
3. தெசலோனிக்கேயர்களுக்கு உற்சாகமூட்டுதல் — 4:1-5:22
4. முடிவான ஜெபமும் ஆசீர்வாதம் கூறுதலும் — 5:23-28
அத்தியாயம் 1
1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
தெசலோனிக்கேயர்களின் விசுவாசத்திற்காக நன்றி சொல்லுதல்
2 தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
5 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
7 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள்.
8 எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது.
9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
10 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.