அத்தியாயம் 3
ஓசியா தன் மனைவியுடன் செய்த சமரசம்
பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள* பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார். அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி, அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன். இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள். பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.
* அத்தியாயம் 3:1 கிழக்கே வசித்த பண்டைக்காலத்து ஜனங்கள் தங்கள் தெய்வத்திற்கு காய்ந்த திராட்சையை படைப்பதால் பெரிய அறுவடை கிடைக்கும் என்று நம்பினார்கள். அத்தியாயம் 3:2 170 கிராம்ஸ் வெள்ளிக்கும் அத்தியாயம் 3:2 150 கிலோ