அத்தியாயம் 31
எகிப்தை நம்புகிறவர்களுக்கு ஐயோ
உதவி பெறுவதற்காக இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவை தேடாமலும், எகிப்திற்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர்கள் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ, அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரச்செய்து, தீமை செய்கிறவர்களின் வீட்டிற்கும், அக்கிரமக்காரருக்கு உதவி செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். எகிப்தியர்கள் தெய்வம் அல்ல, மனிதர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; யெகோவா தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது உதவி செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாக அழிந்துபோவார்கள். யெகோவா என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் யெகோவா சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார். பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் யெகோவா எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். இஸ்ரவேல் மக்களே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள். உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி சிலைகளையும், பொன் சிலைகளையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள். அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; மனிதனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்திற்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள். அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய யெகோவா சொல்கிறார்.