அத்தியாயம் 2
செல்வந்தனையும், ஏழைகளையும் சமமாக நடத்துதல்
1 என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள்.
2 ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது,
3 அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,
4 உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா?
5 என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?
6 நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்?
7 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்?
8 உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
9 நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.
10 எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்.
11 ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
12 சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
13 ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
விசுவாசம் இல்லாத செயல்கள்
14 என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
16 உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன?
17 அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.
18 ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
20 வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா?
21 நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
22 விசுவாசம் அவனுடைய செயல்களோடுகூட முயற்சிசெய்து, செயல்களினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று பார்க்கிறாயே.
23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான்.
24 ஆதலால், மனிதன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, செயல்களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று நீங்கள் பார்க்கிறீர்களே.
25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாக அனுப்பிவிட்டபோது, செயல்களினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் உயிரில்லாததாக இருக்கிறதுபோல, செயல்களில்லாத விசுவாசமும் உயிரில்லாததாக இருக்கிறது.