அத்தியாயம் 6
ஓய்வுநாளின் ஆண்டவர்
1 பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
2 பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4 தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5 மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.
7 அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு,
10 அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.
11 அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
12 அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
13 பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார்.
14 அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,
16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
ஆசீர்வாதங்கள் மற்றும் ஐயோ
17 பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.
18 அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.
20 அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து:
“தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்;
தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.
21 இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்;
திருப்தியடைவீர்கள்.
இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்;
இனி சிரிப்பீர்கள்.
22 மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து,
உங்களை நிராகரித்து,
உங்களை அவமதித்து,
உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி
உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
23 “அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.
24 செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ;
உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
25 திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ;
நீங்கள் பசியாக இருப்பீர்கள்.
இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ;
இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.
26 எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ;
அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.
பகைவர்களை நேசியுங்கள்
27 “என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.
31 மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
32 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே.
33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34 திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
35 உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36 எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
மற்றவர்களை நியாயந்தீர்த்தல்
37 மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40 சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.
41 நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?
42 அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய்.
மரங்களும் அதின் கனிகளும்
43 நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.
44 ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
45 நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும்.
கற்பாறைமேலும் மணலின்மேலும் கட்டப்பட்ட வீடுகள்
46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?
47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
48 ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49 என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.