அத்தியாயம்– ௨௦
சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை
௧ கர்த்தர் மோசேயை நோக்கி: ௨ பின்னும் நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்; இஸ்ரவேல் மக்களிலும் இஸ்ரவேலில் குடியிருக்கிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகு தெய்வத்திற்கென்று கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் மக்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும். ௩ அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படி, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போகச் செய்வேன். ௪ அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் மக்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்டுகொள்ளாமல் இருந்தால், ௫ நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பின்னே மோளேகை விபசாரமார்க்கமாகப் பின்பற்றின அனைவரையும், தங்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோகச் செய்வேன். ௬ ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன். ௭ ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராக இருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். ௮ என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். ௯ தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தாயையும் சபித்தான், அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக. ௧௦ ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். ௧௧ தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. ௧௨ ஒருவன் தன் மருமகளோடே உறவுகொண்டால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு செய்தார்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. ௧௩ ஒருவன் பெண்ணோடே உடலுறவு கொள்கிறதுபோல ஆணோடே உடலுறவுகொண்டால், அருவருப்பான காரியம் செய்த அந்த இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. ௧௪ ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் திருமணம் செய்தால், அது முறைகேடு; இந்தவித முறைகேடு உங்களுக்குள் இல்லாதபடி, அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்கவேண்டும். ௧௫ ஒருவன் மிருகத்தோடே உடலுறவுகொண்டால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள். ௧௬ ஒரு பெண் யாதொரு மிருகத்தோடே சேர்ந்து உடலுறவுகொண்டால், அந்த பெண்ணையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக. ௧௭ ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது மகளாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். ௧௮ ஒருவன் மாதவிடாய் உள்ள பெண்ணுடன் உடலுறவுகொண்டு, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய இரத்தப்போக்கைத் திறந்து, அவளும் தன் இரத்தப்போக்கை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகவேண்டும். ௧௯ உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காதே, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள். ௨௦ ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், வாரிசு இல்லாமல் சாவார்கள். ௨௧ ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்தால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் வாரிசு இல்லாமலிருப்பார்கள். ௨௨ ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களை வாந்திபண்ணாதபடி, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடங்கள். ௨௩ நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்காதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன். ௨௪ நீங்கள் அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள் என்று உங்களுடன் சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே. ௨௫ ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்செய்து, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காமல் இருப்பீர்களாக. ௨௬ கர்த்தராகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாக இருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படிக்கு, உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். ௨௭ ஜோதிடம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாக இருக்கிற ஆணாகிலும் பெண்ணாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக என்று சொல் என்றார்.