அத்தியாயம் 3
1 இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான்.
2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;
4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.
5 அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.
6 உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள்.
மக்கள்கூட்டம் இயேசுவைப் பின்தொடருதல்
7 இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார்.
8 கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள்.
9 அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள்.
10 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
11 அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
12 தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
பன்னிரண்டு அப்போஸ்தலர்களை நியமித்தல்
13 பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.
14 அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும்,
15 வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
16 அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார்.
17 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
18 அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
இயேசுவும் பெயெல்செபூலும்
20 பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது.
21 அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
22 எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
23 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
24 ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே.
25 ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே.
26 சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே.
27 பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும்.
28 உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
29 ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார்.
30 இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார்.
இயேசுவின் தாயாரும் சகோதரர்களும்
31 அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
32 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
33 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி;
34 தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
35 தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.