மல்கியா
ஆசிரியர்
மல்கியா 1:1 ன்படி தீர்க்கதரிசி மல்கியா தான் இதன் ஆசிரியர் என்று உறுதியாகிறது. எபிரேய மொழியில் இதன் அர்த்தம், “தூதன்”, தேவனுடைய செய்தியை தேவஜனங்களுக்கு தரும்படியான ஊழியத்தை செய்கிறான் என்பதை காட்டுகிறது. இரண்டு விதத்தில் “மல்கியா” இந்த புத்தகத்தில் தூது சொல்கிறான், அது என்னவென்றால், வரும் தேவனுடைய நாளில், திரும்ப பெரிய தீர்க்கதரிசியான எலியாவை பூமிக்கு அனுப்புவேன் என்பதாகும்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்.
ஏறக்குறைய கிமு 430 ல் எழுதப்பட்டது.
இது பாபிலோன் சிறையிருப்புக்கு பிறகு எழுதப்பட்ட புத்தகமாகும்.
யாருக்காக எழுதப்பட்டது.
எருசலேமில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களுக்கும் எங்குமுள்ள தேவ ஜனங்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் ஜனங்களுக்கு உதவி செய்கிறார், ஜனங்கள் செய்கிற தீமையானக் காரியங்களுக்கு தாம் நியாயாதிபதியாக வரும்போது கணக்கு தரவேண்டும், என்பதை ஞாபகப்படுத்தவும், உடன்படிக்கையையின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள தீமையானக் காரியங்களை விட்டு மனத்திரும்பவேண்டும் என்று ஞாபகப்படுத்துகிறான். தேவனிடம் திரும்பும்படியாக தேவன் மல்கியா மூலமாக எச்சரிக்கிறார். பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாக, தேவனுடைய நியாயத்தையும், மேசியா வருகையின் மூலம், ஜனங்கள் திரும்ப நாட்டபடுவார்கள் என்ற வாக்குதத்தமும் இஸ்ரவேலர்களின் காதுகளில் தொனித்துக் கொண்டிருந்தது.
மையக் கருத்து
நடைமுறைக் காரியங்கள் கண்டிக்கப்பட்டது.
பொருளடக்கம்
1 ஆசாரியர்கள் தேவனை கனப்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள் — 1:1-2:9
2. யூத ஜனங்கள் உண்மையாயிருக்க அறிவுறுத்தப்பட்டார்கள் — 2:10-3:6
3. யூதர்கள் தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டார்கள் — 3:7-4:6
அத்தியாயம் 1
தேவனால் நேசிக்கப்பட்ட இஸ்ரவேல்
மல்கியாவைக்கொண்டு யெகோவா இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் செய்தி. நான் உங்களைச் சிநேகித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; யெகோவா சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆனாலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்*; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய பங்கை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் இருப்பிடமாக்கினேன். ஏதோமியர்கள்: நாம் ஒடுக்கப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் யெகோவா: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், என்றைக்கும் யெகோவாவுடைய கோபத்திற்குள்ளான மக்களென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார். இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: யெகோவா இஸ்ரவேலுடைய எல்லை தாண்டி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.
கறைபட்ட காணிக்கைகள்
மகன் தன் தகப்பனையும், வேலைக்காரன் தன் எஜமானையும் கனப்படுத்துகிறார்களே; நான் தகப்பனானால் எனக்குரிய கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் யெகோவா தமது நாமத்தை அசட்டைசெய்கிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டை செய்தோம் என்கிறீர்கள். என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே. நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிகாரிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். 10 உங்களில் எவன் கூலிவாங்காமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் நெருப்பைக் கூலிவாங்காமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்மேல் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. 11 சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12 நீங்களோ யெகோவாவுடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறீர்கள். 13 இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு இழிவாகப் பேசி, கிழிக்கப்பட்டதையும் கால் ஊனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று யெகோவா கேட்கிறார். 14 தன் மந்தையில் கடா இருக்கும்போது கெட்டுப்போனதை ஆண்டவருக்கு பொருத்தனை செய்துகொண்டு பலியிடுகிற வஞ்சகன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் தேசங்களுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மிக உயர்ந்த ராஜா என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
* அத்தியாயம் 1:3 தள்ளிவிட்டேன் அத்தியாயம் 1:4 ஏசாவின் சந்ததிகள்