மத்தேயு
ஆசிரியர்
இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான மத்தேயு, இயேசுவைப் பின்பற்றுவதற்காக தனது வரி வசூலிக்கும் பணியைக் கைவிட்டார் (9:9; 13). மாற்குவும் லூக்காவும் தங்களது புத்தகங்களில் இவரை லேவி என்று குறிப்பிடுகின்றனர். இவருடைய பெயரின் அர்த்தம் ஆண்டவருடைய “வெகுமதி” என்பதாகும். பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான மத்தேயு தான், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் என்று ஆதி சபை பிதாக்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். மத்தேயு, இயேசுவின் ஊழியத்தின் நிகழ்வுகளை கண்ணாரக் கண்ட சாட்சியாவார். மற்ற சுவிசேஷங்களுடன் மத்தேயு சுவிசேஷத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வானது, கிறிஸ்துவின் அப்போஸ்தல சாட்சியானது பிரிக்கப்படவில்லை என்று நிரூபிக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 70 காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்கலாம். மத்தேயு சுவிசேஷத்தின் யூத தன்மையை கவனிக்கும்போது, இது பாலஸ்தீனம் அல்லது சீரியாவில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனாலும் இது அந்தியோகியாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று அநேகர் கருதுகின்றனர்.
யாருக்காக எழுதப்பட்டது
இந்த சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருப்பதால், மத்தேயு, கிரேக்க மொழி பேசும் யூத சமுதாயத்தை சேர்ந்த வாசகர்களை குறிக்கோளாகக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. அநேகக் கூறுகள் யூத வாசகர்களைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலை மத்தேயு முக்கியத்துவப்படுத்துகிறார்; ஆபிரகாமிலிருந்து இயேசுவின் சந்ததியை வரிசைப்படுத்துதல் (1:1; 17); அவர் யூத மொழிநடையைப் பயன்படுத்துகிறார், எ. கா, “பரலோக ராஜ்யம்”, தேவனுடைய பெயரை பயன்படுத்துவதற்கு யூதர்கள் தயக்கம் காட்டுவதை பரலோகம் என்ற வார்த்தை வெளிப்படுத்துகிறது, “தாவீதின் குமாரனாகிய” இயேசுவை மையமாகக் கொண்டிருப்பது (1:1; 9:27; 12:23; 15:22; 20:30; 31; 21:9, 15; 22:41; 45). மத்தேயு யூத சமுதாயத்தை மையமாகக் காட்டுதல்.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த சுவிசேஷத்தை எழுதும்போது, யூத வாசகர்கள் மேசியாவாக இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மத்தேயுவின் நோக்கமாக இருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், தேவனுடைய ராஜ்யத்தை மனிதகுலத்திற்கு கொண்டுவருவதை வலியுறுத்துவதாகும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் ராஜாவாக இயேசுவை வலியுறுத்துகிறார் (மத்தேயு 1:1; 16:16; 20:28).
மையக் கருத்து
இயேசு-யூதர்களின் இராஜா
பொருளடக்கம்
1. இயேசுவின் பிறப்பு — 1:1-2:23
2. இயேசுவின் கலிலேய ஊழியம் — 3:1-18:35
3 இயேசுவின் யூதேயா ஊழியம் — 19:1-20:34
4. யூதேயாவில் கடைசி நாட்கள் — 21:1-27:66
5. இறுதிக்கட்ட நிகழ்வுகள் — 28:1-20
அத்தியாயம் 1
இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு
1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
13 செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
17 இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு
18 இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19 அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
20 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
21 அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
22 தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23 அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
24 யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25 அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.