அத்தியாயம் 26
இயேசுவிற்கு எதிரான சதி
1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
2 இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
3 அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து,
4 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள்.
5 ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
பெத்தானியாவில் இயேசு
6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது,
7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?
9 இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
10 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள்.
11 தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது.
13 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யூதாசின் சதி
14 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்:
15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
கர்த்தருடைய பந்தி
17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
18 அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
19 இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
20 மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார்.
21 அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
22 அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.
23 அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
24 மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார்.
25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
26 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
29 இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
30 அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
பேதுரு மறுதலித்தலின் முன்னறிவிப்பு
31 அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
32 ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
33 பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான்.
34 இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
35 அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
கெத்செமனேவில் இயேசுவின் வியாகுலம்
36 அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
39 சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
40 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?
41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
42 அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
43 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
44 அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார்.
45 பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது.
46 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
இயேசு கைதுசெய்யப்படுதல்
47 அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
48 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
50 இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள்.
51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான்.
52 அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.
53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
54 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
55 அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
56 ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
இயேசு விசாரிக்கப்படுதல்
57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.
58 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.
59 பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
60 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.
66 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.
67 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
68 கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
69 அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.
70 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான்.
71 அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
72 அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான்.
73 சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.
74 அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.
75 அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.