நாகூம்
ஆசிரியர்
நாகூமின் ஆசிரியர் நாகூம் என்று 1:1 ல் கூறப்பட்டுள்ளது. நாகூம் என்பதற்கு தேற்றரவாளன் என்று அர்த்தம். அசீரியா ராஜ்ஜியத்தின் நினிவே பட்டணத்து மக்கள் மனம்திரும்பும்படி அழைக்கிறான். 150 வருடங்களுக்கு முன்பு யோனாவின் செய்தியினால் நினிவே மக்கள் மனம்திரும்பினார்கள். இப்பொழுதோ மறுபடியும் விக்கிரகராதனைக்கு போய்விட்டார்கள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. 620 க்கும் 612 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இரண்டு சரித்திர நிகழ்ச்சிகள், நினிவேயின் வீழ்ச்சி, மற்றும் தேபெஸின் வீழ்ச்சியின் மத்தியில் நாகூம் புத்தகம் எழுதப்பட்டதால், இதின் காலம் சுலபமாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
அசீரியர், இஸ்ரவேலின் பத்து வடஇராஜ்ஜியங்களில் உள்ள கோத்திரங்களை சிறைப்பிடித்து போய் விட்டவர்களுக்கும், இதே மாதிரி நமக்கும் நடக்கலாம் என்று பயந்திருந்த தென்ராஜ்ஜிய யூதா மக்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவனுடைய நியாயம் சரியானது, நிச்சயமானது. தேவன் தயவு காட்டினாலும் தன்னுடைய நீதி நியாயத்தை புரட்டமாட்டார். இந்த தீய பாதையிலேப் போனால் என்ன அழிவு வரும் என்று 150 வருடங்களுக்கு முன்னரே, யோனா தீர்க்கதரிசி மூலமாக எச்சரிக்கப்பட்டார்கள். யோனாக் காலத்து நினிவே மக்கள் மனம் திரும்பினார்கள், இன்றோ என்னும் அதிகமாக தீமை செய்கிறார்கள். அசீரியர்கள் தாங்கள் அடைந்த வெற்றிகளினிமித்தம் மூர்க்கவெறியர்களாகி விட்டனர். ஆகையால், தேவன் அவர்களை நியாயம் விசாரிக்கபோவதால், யூதா மக்கள் சோர்ந்து போகவேண்டாம் என்று சொல்லுகிறான்.
மையக் கருத்து.
ஆறுதல்.
பொருளடக்கம்
1 தேவனின் மகிமை — 1:1-14
2 நினிவே மேல் வரும் தேவனின் நியாயத்தீர்ப்பு. — 1:15-3:19
அத்தியாயம் 1
தம்முடைய எதிரிகளின்மேல் தேவனுடைய கோபம்
நினிவே பட்டணத்தைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம். யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர். யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது. அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகச்செய்து, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும். அவருடைய கோபத்திற்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய கடுங்கோபத்திலே நிலைநிற்பவன் யார்? அவருடைய எரிச்சல் நெருப்பைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பெயர்க்கப்படும். யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். ஆனாலும் நினிவேயின் நிலையை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் முற்றிலுமாக அழிப்பார்; இருள் அவருடைய எதிரிகளைப் பின்தொடரும். நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் முற்றிலுமாக அழிப்பார்; துன்பம் மறுபடியும் உண்டாகாது. 10 அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள். 11 யெகோவாவுக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற தீய ஆலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான். 12 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அழிந்துபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன். 13 இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் பாரத்தை எடுத்துப்போட்டு, உன் கட்டுகளை அறுப்பேன். 14 உன்னைக்குறித்துக் யெகோவா கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன். 15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.