அத்தியாயம்– ௨௨
பாலாக் பிலேயாமை அழைத்தல்
௧ பின்பு இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்து, எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டார்கள். ௨ இஸ்ரவேலர்கள் எமோரியர்களுக்குச் செய்த யாவையும் சிப்போரின் மகனாகிய பாலாக் கண்டான். ௩ மக்கள் ஏராளமாக இருந்தபடியால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் மக்களினால் கலக்கமடைந்து, ௪ மீதியானியர்களின் மூப்பர்களை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின் மகனாகிய பாலாக் மோவாபியர்களுக்கு ராஜாவாக இருந்தான். ௫ அவன் பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன்னுடைய சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு தூதுவர்களை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள். ௬ அவர்கள் என்னைவிட பலவான்கள்; இருந்தாலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால் நீர் வந்து, எனக்காக அந்த மக்களை சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறியடித்து, அவர்களை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான். ௭ அப்படியே மோவாபின் மூப்பர்களும் மீதியானின் மூப்பர்களும் குறிசொல்லுதலுக்கு உரிய கூலியைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள். ௮ அவன் அவர்களை நோக்கி: இரவு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்திரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள். ௯ தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர்கள் யார் என்றார். ௧௦ பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்திற்கு அனுப்பி: ௧௧ பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு மக்கள்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடு யுத்தம்செய்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான். ௧௨ அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடு போகவேண்டாம்; அந்த மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். ௧௩ பிலேயாம் காலையில் எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடு வருவதற்குக் கர்த்தர் எனக்கு உத்திரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான். ௧௪ அப்படியே மோவாபியர்களுடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகிடம் போய்: பிலேயாம் எங்களோடு வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள். ௧௫ பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான். ௧௬ அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்; ௧௭ உம்மை மிகவும் மரியாதைசெய்வேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த மக்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள். ௧௮ பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது. ௧௯ ஆனாலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படி, நீங்களும் இந்த இரவு இங்கே தங்கியிருங்கள் என்றான். ௨௦ இரவிலே தேவன் பிலேயாமிடம் வந்து; அந்த மனிதர்கள் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமட்டும் நீ செய்யவேண்டும் என்றார்.
பிலேயாமின் கழுதை
௨௧ பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடு கூடப் போனான். ௨௨ அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள். ௨௩ கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போனது; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான். ௨௪ கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சைத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார். ௨௫ கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாக ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடு நெருக்கியது; திரும்பவும் அதை அடித்தான். ௨௬ அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார். ௨௭ கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் வந்தவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான். ௨௮ உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது. ௨௯ அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னை கேலி செய்துகொண்டு வருகிறாய்; என்னுடைய கையில் ஒரு பட்டயம்மட்டும் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான். ௩௦ கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாவது நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான். ௩௧ அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். ௩௨ கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன்னுடைய கழுதையை இதோடு மூன்றுமுறை அடித்தது ஏன்? உன்னுடைய வழி எனக்கு மாறுபாடாக இருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். ௩௩ கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுமுறை எனக்கு விலகியது; எனக்கு விலகாமல் இருந்திருந்தால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடு வைப்பேன் என்றார். ௩௪ அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவம்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாமலிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது பிரியமில்லாமல் இருந்தால், நான் திரும்பிப்போய்விடுகிறேன் என்றான். ௩௫ கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதர்களோடு கூடப்போ; நான் உன்னோடு சொல்லும் வார்த்தையை மட்டும் நீ சொல்லவேண்டும் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடு கூடப்போனான். ௩௬ பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டவுடன், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணம்வரை அவனுக்கு எதிர்கொண்டு போனான். ௩௭ பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடு உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்தது ஏன்? ஏற்றபடி உமக்கு நான் மரியாதை செலுத்தமாட்டேனா என்றான். ௩௮ அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாவது சொல்வதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என்னுடைய வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான். ௩௯ பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள். ௪௦ அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான். ௪௧ மறுநாள் காலையில் பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறச்செய்தான்; அந்த இடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசி முகாமைப் பார்த்தான்.