அத்தியாயம் 15
வாழ்வின் ஒழுங்குமுறைகள்
1 சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;
கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;
மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
3 யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து,
நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்;
கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு;
துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
7 ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்;
மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
8 துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது;
செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9 துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது;
நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்;
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11 பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க,
மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?
12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்;
ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்;
மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14 புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்;
மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
15 சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்;
மனரம்மியமோ நிரந்தர விருந்து.
16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட,
யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17 பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட,
சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;
நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
19 சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்;
நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
20 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;
மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
21 மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;
புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
22 ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;
ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23 மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;
ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
24 கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி,
விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.
25 அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்;
விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
26 துன்மார்க்கர்களுடைய நினைவுகள்
யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27 பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்;
லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28 நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்;
துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29 துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்;
நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
30 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்;
நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
31 வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது
ஞானிகளிடத்திலே தங்கும்.
32 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்;
கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
33 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;
மேன்மைக்கு முன்னானது தாழ்மை.