சங்கீதம்– ௧௧௯
ஆலெப்.
௧ கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். ௨ அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். ௩ அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். ௪ உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர். ௫ உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். ௬ நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. ௭ உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். ௮ உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும்.
பேத்.
௯ வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. ௧௦ என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும். ௧௧ நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். ௧௨ கர்த்தாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். ௧௩ உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். ௧௪ திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். ௧௫ உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். ௧௬ உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
கிமெல்.
௧௭ உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். ௧௮ உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும். ௧௯ பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். ௨௦ உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. ௨௧ உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர். ௨௨ நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். ௨௩ பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். ௨௪ உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது.
டாலெத்.
௨௫ என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். ௨௬ என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். ௨௭ உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். ௨௮ துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். ௨௯ பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். ௩௦ மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். ௩௧ உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். ௩௨ நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
எ.
௩௩ கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். ௩௪ எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். ௩௫ உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாக இருக்கிறேன். ௩௬ என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும். ௩௭ மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். ௩௮ உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். ௩௯ நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். ௪௦ இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
வௌ.
௪௧ கர்த்தாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. ௪௨ அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். ௪௩ சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். ௪௪ நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். ௪௫ நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன். ௪௬ நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். ௪௭ நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். ௪௮ நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
சாயீன்.
௪௯ நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். ௫௦ அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது. ௫௧ பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. ௫௨ கர்த்தாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். ௫௩ உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது. ௫௪ நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது. ௫௫ கர்த்தாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். ௫௬ நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது.
ஹெத்.
௫௭ கர்த்தாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். ௫௮ முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும். ௫௯ என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். ௬௦ உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன். ௬௧ துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. ௬௨ உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதிஇரவில் எழுந்திருப்பேன். ௬௩ உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன். ௬௪ கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
தேத்.
௬௫ கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர். ௬௬ உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன். ௬௭ நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். ௬௮ தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். ௬௯ பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். ௭௦ அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன். ௭௧ நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். ௭௨ அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம்.
யோட்.
௭௩ உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். ௭௪ நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். ௭௫ கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். ௭௬ நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும். ௭௭ நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. ௭௮ பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். ௭௯ உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும். ௮௦ நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும்.
கப்.
௮௧ உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். ௮௨ எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. ௮௩ புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். ௮௪ உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? ௮௫ உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். ௮௬ உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும். ௮௭ அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. ௮௮ உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
லாமேட்.
௮௯ கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. ௯௦ உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. ௯௧ உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும். ௯௨ உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். ௯௩ நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். ௯௪ நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். ௯௫ துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். ௯௬ நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது.
மேம்.
௯௭ உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். ௯௮ நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. ௯௯ உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். ௧௦௦ உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். ௧௦௧ உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். ௧௦௨ நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். ௧௦௩ உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும். ௧௦௪ உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
நூன்.
௧௦௫ உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. ௧௦௬ உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். ௧௦௭ நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். ௧௦௮ கர்த்தாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். ௧௦௯ என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். ௧௧௦ துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். ௧௧௧ உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. ௧௧௨ முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன்.
சாமெக்.
௧௧௩ வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். ௧௧௪ என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். ௧௧௫ பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். ௧௧௬ நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும். ௧௧௭ என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன். ௧௧௮ உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது. ௧௧௯ பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். ௧௨௦ உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
ஆயின்.
௧௨௧ நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். ௧௨௨ உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். ௧௨௩ உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. ௧௨௪ உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். ௧௨௫ நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். ௧௨௬ நீதியைச்செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். ௧௨௭ ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். ௧௨௮ எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
பே.
௧௨௯ உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். ௧௩௦ உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். ௧௩௧ உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். ௧௩௨ உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். ௧௩௩ உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும். ௧௩௪ மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். ௧௩௫ உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். ௧௩௬ உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
த்சாடே.
௧௩௭ கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். ௧௩௮ நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். ௧௩௯ என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது. ௧௪௦ உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். ௧௪௧ நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். ௧௪௨ உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம். ௧௪௩ துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி. ௧௪௪ உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
கோப்.
௧௪௫ முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். ௧௪௬ உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். ௧௪௭ அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். ௧௪௮ உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும். ௧௪௯ உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும். ௧௫௦ தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள். ௧௫௧ கர்த்தாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. ௧௫௨ நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன்.
ரேஷ்.
௧௫௩ என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன். ௧௫௪ எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். ௧௫௫ இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள். ௧௫௬ கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். ௧௫௭ என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன். ௧௫௮ உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது. ௧௫௯ இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். ௧௬௦ உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
ஷீன்.
௧௬௧ பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. ௧௬௨ மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். ௧௬௩ பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். ௧௬௪ உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். ௧௬௫ உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை. ௧௬௬ கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். ௧௬௭ என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். ௧௬௮ உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
தெள.
௧௬௯ கர்த்தாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். ௧௭௦ என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். ௧௭௧ உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும். ௧௭௨ உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். ௧௭௩ நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும். ௧௭௪ கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. ௧௭௫ என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும். ௧௭௬ காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.