சங்கீதம்– ௨௨
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
௧ என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? ௨ என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், பதில் கொடுக்கவில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. ௩ இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர். ௪ எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். ௫ உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள். ௬ நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். ௭ என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: ௮ கர்த்தர்மேல் நம்பிக்கையாக இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள். ௯ நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர். ௧௦ கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர். ௧௧ என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, உதவி செய்ய யாரும் இல்லை. ௧௨ அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன. ௧௩ பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள். ௧௪ தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. ௧௫ என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூசியிலே போடுகிறீர். ௧௬ நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். ௧௭ என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ௧௮ என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள். ௧௯ ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும். ௨௦ என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும். ௨௧ என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்கு பதில்கொடுத்தீர். ௨௨ உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். ௨௩ கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள். ௨௪ உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார். ௨௫ மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன். ௨௬ ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும். ௨௭ பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். ௨௮ ராஜ்ஜியம் கர்த்தருடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். ௨௯ பூமியின் செல்வந்தர் அனைவரும் சாப்பிட்டு பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. ௩௦ ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். ௩௧ அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.