சங்கீதம்– ௯௨
ஓய்வுநாளின் பாடல்
௧ கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும், ௨ பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், ௩ காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும். ௪ கர்த்தாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன். ௫ கர்த்தாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். ௬ மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான். ௭ துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். ௮ கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர். ௯ கர்த்தாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள். ௧௦ என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன். ௧௧ என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும். ௧௨ நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். ௧௩ கர்த்தருடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள். ௧௪ கர்த்தர் உத்தமரென்றும், என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி, ௧௫ அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.