அத்தியாயம் 5
விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல்
1 இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2 அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
3 அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,
4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.
5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
6 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.
7 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார்.
9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
10 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
11 அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.
ஆதாமினால் பாவம் நுழைந்தது
12 இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது.
13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன்.
15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது.
16 மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது.
17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே.
18 எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது.
19 அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது.
21 ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது.