அத்தியாயம் 3
கோதுமைக் களத்தில் ரூத்தும் போவாசும்
பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ? நீ போவாசின் வேலைக்காரிகளோடு இருந்தாயே, அவன் நம்முடைய உறவினன் அல்லவா? இதோ, அவன் இன்று இரவு களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். நீ குளித்து, எண்ணெய் பூசி, உன்னுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனிதன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரைக்கும் அவனுடைய கண்களுக்கு எதிர்ப்படாமல் இரு. அவன் படுத்துக்கொண்டபின்பு, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்து போய், அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது என்னவென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள். இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள். அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள். போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள். நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு, நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாளின்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் உறவினன் என்றாள். 10 அதற்கு அவன்: மகளே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ ஏழைகளும் பணக்காரர்களுமான வாலிபர்களின் பின்னே போகாததினால், உன்னுடைய முந்தின நற்குணத்தைவிட உன்னுடைய பிந்தின நற்குணம் உத்தமமாக இருக்கிறது. 11 இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் மக்களாகிய ஊரார் எல்லோரும் அறிவார்கள். 12 நான் உறவினன் என்பது உண்மைதான்; ஆனாலும் என்னைவிட நெருங்கின உறவினன் ஒருவன் இருக்கிறான். 13 இன்று இரவு தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்யச் சம்மதித்தால் நல்லது, அவன் திருமணம் செய்யட்டும்; அவன் உன்னைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால் நான் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலம்வரை படுத்துக்கொண்டிரு என்றான். 14 அவள் விடியற்காலம்வரைக்கும் அவனுடைய பாதத்தின் அருகே படுத்திருந்து, களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்கு முன்னே எழுந்திருந்தாள். 15 அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி* வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான். 16 அவள் தன் மாமியாரிடம் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனிதன் தனக்குச் செய்தவைகளையெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள். 17 மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள். 18 அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னவாக முடியும் என்று நீ அறியும்வரை பொறுமையாக இரு; அந்த மனிதன் இன்றைக்கு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும்முன் ஓயமாட்டான் என்றாள்.
* அத்தியாயம் 3:15 24 கிலோ