அத்தியாயம் 5
பறக்கிற புத்தகச்சுருள்
1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.
2 தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
3 அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அந்த புத்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அந்த புத்தகச்சுருளின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
5 பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.
6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
7 இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகளைப்போன்ற இறக்கைகள் இருந்தது; அவர்கள் இறக்கைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்திற்கும் நடுவாகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
10 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
11 அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.