27
பவுல் ரோம் பட்டணத்திற்குப் பயணம்
1 நாங்கள் கப்பல் ஏறி இத்தாலியாவுக்குப் போகவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது, பவுலும் வேறுசில கைதிகளும், யூலியு என்னும் நூற்றுக்குத் தலைவனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவன் ரோமப் பேரரசின் படைப்பிரிவைச் சேர்ந்தவன்.
2 நாங்கள் அதிரமித்தியம் ஊரிலிருந்து வந்த கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டோம். அது ஆசியா பகுதியின் கரையோரத்திலுள்ள துறைமுகங்களை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த மக்கெதோனியனான அரிஸ்தர்க்கு என்பவனும், எங்களுடன் இருந்தான்.
3 மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகத்தில் இறங்கினோம். யூலியு, பவுலின்மேல் தயவு காண்பித்தான். அதனால் பவுல் தன் சிநேகிதர்களிடம் போய்ப் பராமரிக்கப்படவும், உதவி பெற்றுக்கொள்ளவும், அவன் அனுமதித்தான்.
4 அங்கிருந்து நாங்கள் மீண்டும் புறப்பட்டு, சீப்புரு தீவின் ஒதுக்குப் புறமாகக் கடந்துசென்றோம். ஏனெனில், காற்று எங்களுக்கு எதிராய் வீசிக்கொண்டிருந்தது.
5 பின்பு சிலிசியா, பம்பிலியா நாடுகளின் பக்கமாயுள்ள நடுக்கடலைக் கடந்துசென்று லிசியா நாட்டிலுள்ள மீறா பட்டணத்தைச் சென்றடைந்தோம்.
6 அங்கே அந்த நூற்றுக்குத் தலைவன், இத்தாலியாவுக்கு வந்த அலெக்சந்திரியா பட்டணத்தைச் சேர்ந்த ஒரு கப்பலைக் கண்டு எங்களை அதில் ஏற்றினான்.
7 பல நாட்களாக நாங்கள் மெதுவாகப் பயணம் செய்து, சிரமத்துடனே கினீது தீவுக்கு அப்பால் வந்து சேர்ந்தோம். காற்று எங்களுக்கு எதிராய் வீசி, எங்கள் பாதையைத் தடைசெய்தபடியால், சல்மோனே முனைக்கு எதிராகப் போய், கிரேத்தாத் தீவின் ஒதுக்குப் புறமாக பயணம் செய்தோம்.
8 சிரமத்துடனே அப்பகுதியைக் கடந்து, பாதுகாப்புத் துறைமுகம் எனப்பட்ட ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். அது லசேய பட்டணத்தின் அருகே இருந்தது.
9 “இந்தப் பயணத்தில் அதிககாலம் சென்றுவிட்டது. பாவநிவாரண தினமும் கடந்துவிட்டது, தொடர்ந்து கடலில் பயணம் செய்வது ஆபத்தானது” என்று பவுல் அவர்களை எச்சரித்து,
10 “நண்பர்களே, நமது கப்பற்பயணம் ஆபத்தானதாய் இருக்கும் என்று எனக்குத் தெரிகிறது. கப்பலுக்கும் பொருட்களுக்கும் மட்டுமல்ல, நம் உயிர்களுக்கும் இழப்பு நேரிடலாம்” என்றான்.
11 ஆனால் நூற்றுக்குத் தலைவன் பவுல் சொன்னதைக் கவனத்தில் கொள்ளாமல், கப்பல் மாலுமியும் கப்பல் சொந்தக்காரனும் சொன்னதையே அவன் கேட்டான்.
12 நாங்கள் தங்கியிருந்த துறைமுகம் குளிர்க்காலத்தைக் கழிப்பதற்கு ஏற்றதாய் இராததினால், கப்பலில் இருந்த பெரும்பாலானோர், அங்கிருந்து போகத் தீர்மானித்தார்கள். எப்படியாவது பேனிக்ஸை சென்றடைந்து, அங்கே குளிர்க்காலத்தைக் கழிக்கத் தீர்மானித்தார்கள். பேனிக்ஸ் கிரேத்தா தீவிலுள்ள ஒரு துறைமுகம். இது தென்மேற்காகவும், வடமேற்காகவும் பார்த்தபடி அமைந்திருந்தது.
புயல்காற்று
13 அப்பொழுது தெற்கிலிருந்து காற்று மெதுவாய் வீசத்தொடங்கியபோது, தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை ஏற்றி, கிரேத்தா தீவின் கரையோரமாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.
14 ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே, வடகிழக்கு கொண்டல் என்னும் பெருங்காற்று, தீவுப் பக்கத்திலிருந்து மிகப் பலமாய் வீசிற்று.
15 கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டது. காற்றை எதிர்த்துக் கப்பலைத் திருப்ப முடியவில்லை.
16 எனவே காற்றின் திசையிலேயே, கப்பலைச் செல்லவிட்டோம். நாங்கள் கிலவுதா எனப்பட்ட ஒரு சிறிய தீவின் ஒதுக்குப் புறமாகக் கடந்து போகையில், கப்பலில் இருந்த உயிர்காப்பு படகை சிரமத்துடன் பாதுகாத்துக் கொண்டோம்.
17 கப்பலாட்கள் அதைக் கப்பலுக்குள் தூக்கி எடுத்தார்கள். அதற்குப் பின்பு அவர்கள் கப்பல் உடையாது வைத்திருப்பதற்காகக் கப்பலையும் கயிறுகளால் இணைத்துக் கட்டினார்கள். சிர்த்திஸ் வளைகுடா பகுதியிலுள்ள சொரிமணல் திண்டுகளில் கப்பல் மோதிவிடுமோ என்று அவர்கள் பயந்து, கப்பற்பாயை இறக்கிக் காற்றின் திசையிலேயே கப்பலை அடித்துச்செல்ல போகவிட்டார்கள்.
18 நாங்கள் புயலினால் மிகவும் அடிக்கப்பட்டோம். அதனால் மறுநாளிலே, கப்பலாட்கள் கப்பலிலுள்ள பொருட்களை வெளியே எறியத் தொடங்கினார்கள்.
19 மூன்றாம் நாளிலே, அவர்கள் தங்களுடைய கைகளினாலேயே கப்பல் தளவாடங்களையும் எறிந்தார்கள்.
20 பல நாட்களாக சூரியனோ நட்சத்திரங்களோ காணப்படவில்லை. புயலும் வேகமாய் வீசிக்கொண்டிருந்தது. இதனால் நாங்கள் உயிர் தப்புவோம் என்ற எதிர்பார்ப்பும் அற்றுப்போயிற்று.
21 பல நாட்களாக அந்த மனிதர் சாப்பாடு இல்லாமல் இருந்ததால், பவுல் அவர்கள் நடுவே எழுந்து நின்று, “நண்பர்களே, நீங்கள் எனது புத்திமதியைக் கேட்டு, கிரேத்தா தீவை விட்டுப் புறப்படாதிருந்திருக்க வேண்டும். இந்த சேதத்தையும், இழப்பையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம்.
22 ஆனால் இப்போது நீங்கள் மன உறுதியுடன் இருக்கும்படி நான் உங்களைக் கேட்கிறேன். ஏனெனில், உங்களிடையே ஒருவருக்கும் உயிரிழப்பு ஏற்படாது. கப்பலை மட்டுமே இழக்க நேரிடும்.
23 நேற்று இரவு என்மேல் உரிமையுள்ளவரும், என்னைத் தன் ஊழியத்தில் நியமித்தவருமான இறைவனின் ஒரு தூதன் என் அருகே வந்து நின்றான்.
24 அந்த தூதன் என்னிடம், ‘பவுலே பயப்படாதே, நீ ரோமப் பேரரசன் சீசருக்கு முன்பாக விசாரணைக்கு நிற்கவேண்டும்; உன்னுடன் பயணம் செய்கிற அனைவருடைய உயிரையும் இறைவன் தயவாய் உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றான்.
25 ஆகையால், தைரியமாயிருங்கள். இறைத்தூதன் எனக்குச் சொன்னபடியே நடக்கும் என்று நான் இறைவனிடம் விசுவாசமாயிருக்கிறேன்.
26 ஆனால், ஏதாவது ஒரு தீவுக்கரையில் நாம் தள்ளப்பட்டுப் போவோம்” என்று சொன்னான்.
கப்பல் உடைதல்
27 பதினான்காம் நாள் இரவிலே, ஆதிரியா கடலில் அலைந்து கொண்டிருந்தோம். நடு இரவானபோது, கப்பலாட்கள் தாங்கள் ஒரு கரையை நெருங்கிச் சேர்வதாக உணர்ந்தார்கள்.
28 அவர்கள் கடலின் ஆழத்தைப் பார்த்தபோது, அது நூற்றிருபது அடி ஆழமாய் இருந்தது. சிறிது நேரத்திற்குப்பின், அவர்கள் மீண்டும் அளந்து பார்த்தபோது, அது தொண்ணூறடி ஆழமாய் இருந்தது.
29 நாங்கள் பாறைகளில் மோதி விடுவோம் என்று பயந்து, அவர்கள் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை வெளியே போட்டார்கள். பின்பு, பகல் வெளிச்சத்திற்காக மன்றாடினார்கள்.
30 கப்பலாட்கள் கப்பலில் இருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டு, உயிர்காப்புப் படகைக் கடலில் இறக்கினார்கள். அவர்கள் கப்பலின்முன் பகுதியிலிருந்து, நங்கூரங்களை இறக்குவது போல பாசாங்கு செய்துகொண்டே இப்படிச் செய்தார்கள்.
31 அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவனையும், படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்றான்.
32 உடனே படைவீரர்கள் உயிர்காப்புப் படகைக் கட்டியிருந்த கயிற்றைவெட்டி, அதைக் கடலில் போகவிட்டார்கள்.
33 விடியற்காலையாகும்போது, பவுல் அவர்கள் எல்லோரையும் பார்த்து, ஏதாவது உணவைச் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டான். அவன் அவர்களிடம், “பதினான்கு நாட்களாக நீங்கள் உணவு எதையும் சாப்பிடாமல், என்ன நடக்குமோ என்ற பயத்தோடு காத்திருக்கிறீர்கள்.
34 இப்பொழுது ஏதாவது உணவைச் சாப்பிடுங்கள் என்று, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உயிர்த்தப்புவதற்கு அது உதவியாயிருக்கும். உங்களில் ஒருவனுடைய தலை முடிக்கேனும் இழப்பு நேரிடாது” என்றான்.
35 இதைச் சொன்னபின், அவன் அப்பத்தை எடுத்து, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக இறைவனுக்கு நன்றி செலுத்தினான். பின்பு, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான்.
36 அப்பொழுது அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள்.
37 நாங்கள் எல்லோருமாக இருநூற்று எழுபத்தாறுபேர் அந்தக் கப்பலில் இருந்தோம்.
38 அவர்கள் தங்கள் பசியாறச் சாப்பிட்டபின், கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் வீசி, அதன் பாரத்தைக் குறைத்தார்கள்.
39 பொழுது விடிந்ததும், அந்தக் கரையை அவர்கள் எவ்விடமென்று அறியவில்லை. ஆனால் மணல் நிறைந்த கரையுடன், ஒரு வளைகுடா இருப்பதை அவர்கள் கண்டார்கள். முடியுமானால், கப்பலைக் கரை சேர்க்கலாமென்று அவர்கள் தீர்மானித்தார்கள்.
40 அவர்கள் நங்கூரங்களை அவிழ்த்து, அவற்றைக் கடலில் விட்டார்கள். அதேவேளையில், சுக்கான்களைக் கட்டியிருந்த கயிறுகளைத் தளர்த்திவிட்டார்கள். பின்பு கப்பலின்முன் பாயை இழுத்து காற்றின் பக்கமாய் உயர்த்தி, கடற்கரையை நோக்கி கப்பலைச் செலுத்தினார்கள்.
41 கப்பல் ஒரு மணல் திண்டில் கரை தட்டி, தரையில் தங்கியது. ஆனால் கப்பலின் முன்பகுதி, மணலில் புதைந்து அசையாது நின்றது; கப்பலின் பின்பகுதியோ, அலைகளினால் மோதப்பட்டு துண்டுதுண்டாய் உடைந்தது.
42 கைதிகளில் யாரும் நீந்தித் தப்பிப் போகாதபடி, அவர்களைக் கொன்றுவிட படைவீரர்கள் திட்டமிட்டார்கள்.
43 ஆனால் நூற்றுக்குத் தலைவன் பவுலின் உயிரைக் காப்பாற்ற விரும்பி, அவர்கள் அவ்விதம் செய்யாதபடி அவர்களைத் தடை செய்தான். நீந்தக்கூடியவர்கள் முதலில் கப்பலில் இருந்து குதித்து கரைசேரும்படி அவன் உத்தரவிட்டான்.
44 மற்றவரை பலகைகளின் மேலும், உடைந்த கப்பல் துண்டுகளின் மேலும் ஏறிக் கரைசேரச் செய்தான். இவ்விதம், ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் கரைசேர்ந்தார்கள்.