11
இஸ்ரயேல் தலைவர்களுக்கு நியாயத்தீர்ப்பு
1 பின்பு ஆவியானவர் என்னை உயரத்தூக்கி, யெகோவாவின் ஆலயத்தில் கிழக்கு முகமாயிருக்கும் வாசலுக்குக் கொண்டுவந்தார். வாசலிலே இருபத்தைந்து மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியிலே மக்கள் தலைவர்களான ஆசூரின் மகன் யசனியாவையும், பெனாயாவின் மகன் பெலத்தியாவையும் கண்டேன்.
2 யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, இப்பட்டணத்தில் தீயவற்றைத் திட்டமிட்டு தீய ஆலோசனைகளைக் கொடுப்பவர்கள் இவர்களே.
3 அவர்களோ, ‘இது வீடுகளைக் கட்டுவதற்கேற்ற காலமல்லவோ? என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியே என்றும்’ சொல்லுகிறார்கள்.
4 ஆகையால் அவர்களுக்கு விரோதமாக இறைவாக்கு சொல்; மனுபுத்திரனே, இறைவாக்கு சொல்” என்றார்.
5 அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் என்மேல் அமர்ந்தார். அவர் சொல்லச் சொன்னதாவது: “யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் அப்படித்தான் சொல்கிறீர்கள்! ஆனாலும் உங்கள் உள்ளத்தின் எண்ணங்களை நான் அறிவேன்.”
6 இந்நகரத்தில் அநேக மக்களை நீங்கள் கொலைசெய்து, அதன் வீதிகளைப் பிரேதங்களால் நிரப்பியிருக்கிறீர்கள்.
7 “ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் வீதிகளில் வீசியெறிந்த உடல்களே அந்த இறைச்சியும், இந்த நகரமே பானையுமாய் இருக்கின்றன. ஆனாலும் நான் உங்களை அங்கிருந்து துரத்திவிடுவேன். ”
8 நீங்கள் வாளுக்குப் பயப்படுகிறீர்கள். அவ்வாளையே உங்களுக்கு விரோதமாகக் கொண்டுவருவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
9 நான் உங்களைப் பட்டணத்திலிருந்து வெளியே துரத்தி, அந்நியர்களின் கைகளில் ஒப்புவித்து, உங்கள்மீது தண்டனையை வரப்பண்ணுவேன்.
10 நீங்கள் வாளால் மடிவீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
11 இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை. நீங்களும் அதிலுள்ள இறைச்சியாய் இருக்கமாட்டீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள்மீது நான் என் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன்.
12 அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ஏனெனில் நீங்கள் என் கட்டளைகளின்படி நடக்கவோ, என் சட்டங்களைப் பின்பற்றவோ இல்லை. ஆனால் உங்களைச் சுற்றிலும் இருக்கிற மற்ற நாடுகளின் வழக்கத்தின்படியே நடந்தீர்கள், என்று சொல்” என்றார்.
13 அவ்வாறே நான் இறைவாக்கு உரைக்கும்போது, பெனாயாவின் மகன் பெலத்தியா இறந்தான். உடனே நான் முகங்குப்புற விழுந்து, “ஆ, ஆண்டவராகிய யெகோவாவே! இஸ்ரயேலில் மீதியாய் இருப்பவர்களையும் நீர் முற்றிலும் அழித்துப்போடுவீரோ?” என உரத்த குரலில் அழுதேன்.
இஸ்ரயேலர் திரும்புவதற்கு வாக்குத்தத்தம்
14 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
15 “மனுபுத்திரனே, நாடுகடத்தப்பட்டு உன்னோடு இருக்கிறவர்களே உனது இரத்த உறவினரும் இஸ்ரயேல் முழுக் குடும்பமுமான உனது சகோதரர். அவர்களைக் குறித்தே, ‘அவர்கள் யெகோவாவை விட்டுத் தூரமாய் இருக்கிறார்கள்; இந்நாடு எங்களுக்கே உரிமையாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று எருசலேம் மக்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.
16 “ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: என் மக்களை நான் நாடுகளுக்குள் தூரமாய்த் துரத்தி, நாடுகளுக்குள்ளே சிதறடித்தேன். ஆனாலும் அவர்கள் சென்ற நாடுகளில் அந்தக் கொஞ்சக் காலத்துக்கு நானே அவர்களுக்கு பரிசுத்த இடமாயிருந்தேன்.’
17 “ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்களை நான் மக்கள் கூட்டத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து உங்களை திரும்பவும் கொண்டுவந்து, மறுபடியும் இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்.’
18 “அவர்கள் அங்கு திரும்பிவந்து இழிவான எல்லா உருவச்சிலைகளையும், வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அங்கிருந்து அகற்றிவிடுவார்கள்.
19 நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட உள்ளத்தைக் கொடுத்து, புதிய ஆவியையும் கொடுப்பேன். நான் அவர்களுடைய கல்லான இருதயத்தை நீக்கி, சதையான இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.
20 அப்பொழுது அவர்கள் என் நீதிச்சட்டங்களைப் பின்பற்றி என் கட்டளைகளைக் கைக்கொள்ளக் கவனமாயிருப்பார்கள். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.
21 ஆனால் இழிவான உருவச்சிலைகளையும் வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் பற்றியிருக்கிற இருதயம் உடையவர்களையோ, அவர்களுடைய நடத்தையின் பலனை, அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
22 அப்பொழுது கேருபீன்கள் தங்கள் அருகிலிருந்த சக்கரங்களோடு இறகுகளை விரித்தன. இஸ்ரயேலின் இறைவனின் மகிமை அவற்றிற்கு மேலாக இருந்தது.
23 யெகோவாவினுடைய மகிமை பட்டணத்திலிருந்து எழும்பி பட்டணத்தின் கிழக்கே இருந்த மலையில் போய் நின்றது.
24 இறைவனின் ஆவியானவர் எனக்களித்த தரிசனத்திலே, அவர் என்னை உயரத்தூக்கி, பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்களிடம் திருப்பிக் கொண்டுபோய்விட்டார்.
பின்பு நான் கண்ட தரிசனம் என்னைவிட்டு மேலே போய்விட்டது.
25 எனக்கு யெகோவா காட்டிய அனைத்தையும் நான், நாடுகடத்தப்பட்டிருந்தவர்களுக்குக் கூறினேன்.