27
தீருவுக்கான புலம்பல்
1 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2 “மனுபுத்திரனே, நீ தீருவைக் குறித்து புலம்பு.
3 கடலின் துறைமுகத்தில் அமைந்திருப்பதும், அநேக கடற்கரையில் வாழ்வோருடன் வியாபாரம் செய்வதுமான தீரு பட்டணத்திற்குச் சொல்லவேண்டியதாவது, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே;
“தீருவே, ‘அழகில் நான் பரிபூரணமானவள்,
“எனக் கூறுகிறாய்.”
4 உன் ஆதிக்கம் பெருங்கடல்களில் இருந்தது.
உன்னைக் கட்டியவர்கள் உன் அழகைப் பரிபூரணமாக்கினார்கள்.
5 சேனீரின் தேவதாரு மரங்களால்,
அவர்கள் உன் மர வேலைகளை அமைத்தார்கள்.
உனக்குப் பாய்மரம் செய்வதற்காக
லெபனோனின் கேதுருவை எடுத்தார்கள்.
6 பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால்,
உனக்குத் துடுப்புகளைச் செய்தார்கள்.
சைப்பிரஸின் கடற்கரைகளிலிருந்து பெற்ற சவுக்கு மரங்களினால்
அவர்கள் உன் கப்பல் தளத்தைக் கட்டி,
யானைத் தந்தத்தினால் அதை அலங்கரித்தார்கள்.
7 எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட வேலைப்பாடமைந்த மென்பட்டு,
உனது பாயாகவும் கொடியாகவும் இருந்தது.
எலீஷாவின் கரையோரங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீலத் துணியும்,
கருஞ்சிவப்புத் துணியும் உனக்குக் கூடாரமாயின.
8 சீதோன், அர்வாத் பட்டணத்தினர் உன் படகோட்டிகளானார்கள்.
தீருவே! உன் தொழில் வல்லுனர், உனது கப்பல்களில் மாலுமிகளானார்கள்.
9 கேபாவின் அனுபவமிக்க கைவினைஞர் உன் கப்பல்களைப்
பழுது பார்ப்பவர்களாய் உன் கப்பல்களில் இருந்தார்கள்.
கடலிலுள்ள எல்லா கப்பல்களும் அவைகளின் மாலுமிகளும்
உன்னுடைய பொருட்களை வாங்குவதற்கு உன்னிடம் வந்தார்கள்.
10 “ ‘பெர்சியா, லீதியா, பூத்தியா
ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதர்கள் உன் இராணுவவீரர்களாய் இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் மதில்களில் தொங்கவிட்டு,
உனக்குச் சிறப்பைக் கொண்டுவந்தார்கள்.
11 அர்வாத், ஹேலேக் பட்டணங்களைச் சேர்ந்த மனிதர்
உன் மதில்களின் ஒவ்வொரு புறங்களிலும்
காவலிருந்தார்கள்.
கம்மாத் மனிதர் உன் கோபுரங்களில் இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் கேடயங்களை உன் மதில்களின்மேல் சுற்றிலும் தொங்கவிட்டார்கள்.
அவர்கள் உன் அழகை முழுநிறைவாக்கினார்கள்.
12 “ ‘உன் பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தம் தர்ஷீஸ் வர்த்தகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை மாற்றீடு செய்தார்கள்.
13 “ ‘கிரீஸ், தூபால், மேசேக் வர்த்தகர்களும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக அடிமைகளையும், வெண்கலப் பொருட்களையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
14 “ ‘பெத்தொகர்மா ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதரும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வேலைசெய்யும் குதிரைகளையும், போர்க் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
15 “ ‘தேதான் மனிதர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அநேக கடலோர நாடுகள் உன் வாடிக்கையாளர்களாய் இருந்தன. அவர்கள் யானைத்தந்தங்களையும், கருங்காலி மரங்களையும் உன்னிடம் மாற்றீடாய் தந்தார்கள்.
16 “ ‘சீரியர் உன் அநேக உற்பத்திகளினிமித்தம் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் இளநீல இரத்தினங்களையும் ஊதாநிற துணிகளையும் வேலைப்பாடமைந்த உடைகளையும், மென்பட்டுத் துணிகளையும், பவளத்தையும், சிவப்பு இரத்தினத்தையும் உன்னிடம் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
17 “ ‘யூதாவும், இஸ்ரயேலும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் பொருள்களுக்காக “மின்னீத்திலிருந்து” கிடைக்கும் கோதுமையையும் மற்றும் இனிப்புப் பண்டங்கள், தேன், எண்ணெய், தைல வகைகள் ஆகியவற்றையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
18 “ ‘தமஸ்கு, உனது பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தமும், உன் அநேக உற்பத்திப் பொருள்களினிமித்தமும் கெல்போனின் திராட்சை இரசத்தையும், ஷாகாரின் ஆட்டுமயிரையும் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தது.
19 வேதண் என்கிற தாண் நாட்டாரும் கிரேக்கரும் ஊசாவிலிருந்து வந்து, உனது வர்த்தகப் பொருட்களை வாங்கினார்கள். அவர்கள் அடித்துச் செய்யப்பட்ட இரும்பையும், கறுவாவையும், வசம்பையும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக மாற்றீடு செய்தார்கள்.
20 “ ‘தேதான் சேணத்திற்குப் பயன்படுத்தும் கம்பளங்களை உனக்கு விற்றது.
21 “ ‘அரேபியாவும், கேதாரின் சகல இளவரசர்களும் உன் வாடிக்கையாளர்களாயிருந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றைக்கொண்டு உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
22 “ ‘சேபா, ராமாவின் வணிகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் வியாபாரப் பொருள்களுக்காக எல்லாவித உயர்தர வாசனைத் திரவியங்களையும், விலை உயர்ந்த கற்களையும், தங்கத்தையும் மாற்றீடு செய்தார்கள்.
23 “ ‘ஆரான், கன்னே, ஏதேன் ஆகியவற்றுடன் சேபா, அசீரியர், கில்மாத் வணிகரும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
24 அவர்கள் உனது சந்தையில் அழகிய உடைகள், நீலப்பட்டுத் துணி, வேலைப்பாடமைந்த தையல் துணி, கயிறுகளால் பின்னப்பட்ட பலவர்ணக் கம்பளிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
25 “ ‘உனது பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு
தர்ஷீஸின் கப்பல்கள் பயன்பட்டன.
அவை கடலின் நடுவில் பாரமான
பொருள்களினால் நிரப்பப்பட்டுள்ளன.
26 உன், படகோட்டிகள் உன்னைப்
பெருங்கடலுக்குக் கொண்டுபோகிறார்கள்.
ஆனால், நடுக்கடலில் கீழ்க்காற்று
உன்னைத் துண்டுகளாக உடைக்கும்.
27 உன் செல்வமும், வர்த்தகப் பொருள்களும் மற்றும் பொருட்களும்
நடுக்கடலில் கப்பல் விபத்துநாளிலே விழுந்துபோகும்.
அதனுடன் கப்பலாட்கள், மாலுமிகள்,
கப்பல் பழுதுபார்ப்போர்,
வர்த்தகர்கள், இராணுவவீரர்,
கப்பலிலுள்ள எல்லோருங்கூட நடுக்கடலிலே விழுவார்கள்.
28 உன் மாலுமிகள் ஓலமிடும் வேளையிலே,
கடலோர நாடுகள் அதிரும்.
29 தண்டு வலிப்போர் அனைவரும்
தங்கள் கப்பல்களைக் கைவிட்டு விடுவார்கள்.
கப்பலாட்கள், மாலுமிகள் அனைவருமே
கரையில் நிற்பார்கள்.
30 அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி
உன்னிமித்தம் மனங்கசந்து அழுவார்கள்.
அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை
வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரளுவார்கள்.
31 அவர்கள் உன்னிமித்தம் துக்கித்து, தங்கள் தலைகளை மொட்டையடித்து,
துக்கவுடைகளை உடுத்துவார்கள்.
அவர்கள் உனக்காக ஆத்தும வேதனையுடன்
அழுது மனக்கசப்புடன் துக்கங்கொண்டாடுவார்கள்.
32 அவர்கள் உனக்காக துக்கங்கொண்டாடுகையில்,
“கடலால் சூழப்பட்ட தீருவைப்போல்
எப்பொழுதாவது அமைதியாக்கப்பட்டது யார்?”
என, உன்னைக்குறித்துப் புலம்புவார்கள்.
33 உன் வர்த்தகப் பொருள்கள் கடல்களுள் வழியாகச் சென்றபோது,
நீ அநேக நாடுகளைத் திருப்திசெய்தாய்;
உன் பெரும் செல்வத்தாலும் உனது பொருட்களாலும்
பூமியின் அரசர்களைச் செல்வந்தராக்கினாய்.
34 இப்பொழுதோ நீ தண்ணீரின் ஆழங்களில்
கடலினால் சிதறடிக்கப் பட்டிருக்கிறாய்.
உன் பொருட்களும், உனது கூட்டமும்
உன்னோடு அமிழ்ந்து போயின!
35 கரையோரங்களில் வாழ்கின்ற எல்லோரும்,
உன்னைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்,
அவர்களுடைய அரசர்களோ திகிலினால் நடுங்குகிறார்கள்!
அவர்களின் முகங்கள் பயத்தினால் வெளிறிப்போகின்றன.
36 நாடுகளின் வர்த்தகர்கள் உன்னைப் பார்த்து கேலி செய்கின்றார்கள்;
உனக்கு ஒரு பயங்கர முடிவு வந்துவிட்டது!
நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”