31
எகிப்தை நம்பியிருப்போருக்கு ஐயோ!
1 உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!
அவர்கள் குதிரைகளை நம்பி,
தங்கள் திரளான தேர்களிலும்,
தங்கள் குதிரைவீரரின் பெரும் பலத்திலும் நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஆனால், இஸ்ரயேலின் பரிசுத்தரை நோக்காமலும்,
யெகோவாவின் உதவியைத் தேடாமலும் இருக்கின்றார்கள்.
2 யெகோவாவோ ஞானமுள்ளவர், அவரால்தான் அழிவைக் கொண்டுவர முடியும்;
அவர் சொன்ன வார்த்தையை மாற்றுவதில்லை,
அவர் கொடுமையானவரின் குடும்பத்திற்கு விரோதமாகவும்,
தீயவர்களுக்கு உதவுவோருக்கு எதிராகவும் எழும்புவார்.
3 ஆனால் எகிப்தியர் மனிதர்களேயன்றி இறைவன் அல்ல;
அவர்களின் குதிரைகள் மாமிசமேயன்றி ஆவியல்ல.
யெகோவா தமது கரத்தை நீட்டும்போது,
உதவிசெய்கிறவன் இடறுவான்.
உதவி பெறுவோனும் விழுவான்;
இருவரும் ஒன்றாய் அழிவார்கள்.
4 யெகோவா எனக்கு சொல்வது இதுவே:
“சிங்கமோ, இளஞ்சிங்கமோ,
தன் இரையைப் பிடித்துக்கொண்டு கர்ஜிக்கும்போது,
அதை எதிர்ப்பதற்கு முழு மேய்ப்பர் கூட்டத்தை அழைத்தாலும்,
அது அவர்களின் கூக்குரலுக்கு அஞ்சவோ,
இரைச்சலைப் பொருட்படுத்தவோ மாட்டாது.
அதுபோலவே, சேனைகளின் யெகோவா,
சீயோன் மலையிலும் அதன் உயரிடங்களிலும்
யுத்தம் செய்வதற்கு இறங்குவார்.
5 பறவைகள் தமது கூடுகளின் மேலே வட்டமிட்டுப் பறப்பதுபோல,
சேனைகளின் யெகோவா எருசலேமைப் பாதுகாப்பார்.
அவர் அதைப் பாதுகாத்து மீட்பார்,
அவர் அதற்கு மேலாகக் கடந்து அதை விடுவிப்பார்.”
6 இஸ்ரயேலரே, அவரை எதிர்த்து அதிகமாய் கலகம் செய்த நீங்கள் அவரிடம் திரும்புங்கள்.
7 ஏனென்றால், அந்த நாளிலே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவக் கைகளினால் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் ஒதுக்கி எறிந்து விடுவீர்கள்.
8 “அசீரியா வீழ்ச்சியடைவது மனிதனின் வாளினால் அல்ல.
மனிதனால் ஆக்கப்படாத ஒரு வாள் அவர்களை விழுங்கும்;
வாளுக்கு முன்னால் அவர்கள் பயந்து ஓடுவார்கள்;
அவர்களின் வாலிபர் கட்டாய வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
9 அவர்களின் அரண் பயங்கரத்தால் வீழ்ச்சியடையும்;
அவர்களின் தளபதிகள் போர்க் கொடிகளைக் கண்டதும் திகிலடைவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
சீயோனில் அவருடைய நெருப்பும்,
எருசலேமில் அவருடைய சூளையும் இருக்கிறது.