8
அசீரியா யெகோவாவின் கருவி
பின்பு யெகோவா என்னிடம், “வரைபலகையை எடுத்து அதில், மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ்* என சாதாரண எழுத்தாய் எழுது.” அதற்கு உண்மையுள்ள சாட்சிகளாய் இருக்கும்படி ஆசாரியன் உரியாவையும், எபரேக்கியாவின் மகன் சகரியாவையும் நான் அழைப்பேன் என்றார். பின்பு நான் என் மனைவியாகிய இறைவாக்கு உரைப்பவளுடன் சேர்ந்தேன்; அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா என்னிடம், “அவனுக்கு மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என்று பெயரிடு. அவன் ‘என் அப்பா’ அல்லது ‘என் அம்மா’ என்று சொல்ல அறியுமுன் தமஸ்குவின் செல்வமும், சமாரியாவின் கொள்ளைப்பொருளும், அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார்.
யெகோவா மீண்டும் என்னிடம் பேசினதாவது:
“இந்த மக்கள், அமைதியாக ஓடும் ஷீலோவாமின்
தண்ணீரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
ரேத்சீனுக்கும் ரெமலியாவின் மகனுக்கும்
என்ன நடக்கும் என்பதில் களிகூர்ந்தார்கள்.
ஆதலால் யெகோவா, ஐபிராத்து நதியின்
பெருவெள்ளத்தை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்போகிறார்.
அசீரிய அரசனே கம்பீரத்துடன்
அந்த வெள்ளத்தைப்போல் வருவான்.
அது வாய்க்கால்களை நிரப்பி கரைபுரண்டு பாயும்.
அது யூதா நாட்டிற்குள் பாய்ந்து, அதற்கு மேலாகப் பெருக்கெடுத்து
அதன் கழுத்தளவுக்குப் பாயும்.
இம்மானுயேலே,
உனது நாட்டின் அகன்ற பரப்பை வெள்ளத்தின் அகல விரிந்த சிறகுகள் மூடுமே!”
 
நாடுகளே, போர் முழக்கமிடுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
தூர தேசங்களே, கேளுங்கள்.
போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
10 உங்கள் போர் முறையைத் திட்டமிடுங்கள், ஆனால் அது முறியடிக்கப்படும்;
கூடிப்பேசி முடிவெடுங்கள், ஆனால் அதுவும் நிலைக்காது;
ஏனெனில் இறைவன் நம்மோடு இருக்கிறார்.
11 யெகோவா தமது பலத்த கரத்தை என்மீது வைத்து, என்னோடு பேசி, இந்த மக்களின் வழியைப் பின்பற்றவேண்டாம் என என்னை எச்சரித்துச் சொன்னதாவது:
12 “இந்த மக்கள் சதி என்று சொல்லும்
எல்லாவற்றையும் நீ சதி என்று சொல்லாதே;
அவர்கள் அஞ்சுவதற்கு நீயும் அஞ்சாதே,
அதற்கு நீ நடுங்காதே.
13 சேனைகளின் யெகோவாவை மட்டுமே பரிசுத்தர் என போற்று,
அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும்;
அவர் ஒருவருக்கே நீ நடுங்கவேண்டும்.
14 அவர் உனக்குப் பரிசுத்த இடமாயிருப்பார்;
ஆனால் இஸ்ரயேல், யூதாவாகிய இரு குடும்பங்களுக்கும் அவர்,
இடறச்செய்யும் கல்லாகவும்,
அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருப்பார்.
எருசலேம் மக்களுக்கு
அவர் கண்ணியாகவும், பொறியாகவும் இருப்பார்.
15 அநேகர் அவைகளில் தடுமாறுவார்கள்,
அவர்கள் விழுந்து நொறுங்கிப் போவார்கள்.
அவர்கள் கண்ணியில் அகப்பட்டு பிடிக்கப்படுவார்கள்.”
 
16 சாட்சியின் ஆகமத்தை பத்திரமாய்க் கட்டிவை;
இறைவனுடைய சட்டத்தை என் சீடர்களிடையே முத்திரையிட்டு வை.
17 யாக்கோபின் வீட்டாருக்குத் தன் முகத்தை மறைக்கும்
யெகோவாவுக்கு நான் காத்திருப்பேன்.
அவரிலேயே என் நம்பிக்கையை வைப்பேன்.
18 நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம். நாங்கள் சீயோன் மலையில் வசிக்கும் எல்லாம் வல்ல யெகோவாவினால் இஸ்ரயேலில் அடையாளங்களும் அறிகுறிகளுமாய் இருக்கிறோம்.
இருள் வெளிச்சத்திற்கு மாறுகிறது
19 முணுமுணுத்து ஓதுகிற, ஆவிகளுடன் தொடர்புடையோரிடமும், குறிசொல்வோரிடமும் விசாரிக்கும்படி மனிதர் உங்களிடம் சொல்கிறார்கள். மக்கள் தங்கள் இறைவனிடம் அல்லவோ விசாரிக்கவேண்டும்? உயிருள்ளவர்களுக்காக மரித்தவர்களிடம் ஏன் விசாரிக்கவேண்டும்? 20 சட்டத்தையும், சாட்சி ஆகமத்தையுமே நாடவேண்டும். அவர்கள் இந்த வார்த்தையின்படி பேசாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. 21 மக்கள் துயரும் பசியும் உடையவர்களாய் நாட்டில் அலைந்து திரிவார்கள். பட்டினியால் அவதியுறும்போது கோபங்கொண்டு மேல்நோக்கிப் பார்த்து, தங்கள் இறைவனையும் அரசனையும் சபிப்பார்கள். 22 பின்பு அவர்கள் பூமியை நோக்கிப்பார்த்து துன்பத்தையும், இருளையும், பயங்கர அந்தகாரத்தையும் மட்டுமே காண்பார்கள். அவர்கள் காரிருளுக்குள்ளே தள்ளப்படுவார்கள்.
* 8:1 மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என்றால் எபிரெயத்தில் கொள்ளைப்பொருள் வேகமாக வருகின்றது; இரை விரைகின்றது. 8:14 குடும்பங்களுக்கும் அல்லது கிழக்கு மற்றும் வடக்கு ராஜ்யங்கள்.