2
தாவீது சாலொமோனுக்குக் கொடுத்த பொறுப்பு
1 அரசன் தாவீதுக்கு மரண நாட்கள் நெருங்கியபோது, தன் மகனான சாலொமோனுக்குப் பொறுப்பை ஒப்படைத்தான்.
2 அவன் சாலொமோனிடம், “பூமியில் உள்ள எல்லோரும் போகிற வழியில் நானும் போகப்போகிறேன். நீ தைரியத்துடன் வீரமுள்ளவனாய் இரு.
3 உனது இறைவனாகிய யெகோவா உனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொள்; அவருடைய வழிகளிலேயே நட. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி அவருடைய விதிமுறைகளையும், சட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் கைக்கொள். அப்பொழுது நீ செய்வதெல்லாவற்றிலும் வளம் பெறுவாய். நீ போகுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய்.
4 மேலும் யெகோவா எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்: ‘உன் சந்ததிகள் தாங்கள் வாழும் விதத்தில் கவனமாயிருந்து தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்குமுன் உண்மையாக நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கு ஒரு மனிதன் உனக்கு இல்லாமல் போகமாட்டான் என்று எனக்கு வாக்களித்தாரே.’
5 “இப்பொழுது செருயாவின் மகன் யோவாப் எனக்குச் செய்தது என்ன என்று உனக்குத் தெரியும். அவன் இஸ்ரயேலின் இரு இராணுவத் தளபதிகளான நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்தது உனக்குத் தெரியும். அவன் அவர்களை ஒரு போர்க்களத்தில் செய்வதுபோல் சமாதான காலத்திலேயே இரத்தத்தைச் சிந்தி கொன்றான். அந்த இரத்தத்தினால் தன் இடுப்பைச் சுற்றியிருந்த பட்டியையும், காலில் இருந்த பாதரட்சைகளையும் கறைப்படுத்தினான்.
6 உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே.
7 “கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்கு இரக்கம் காட்டி, உன் மேஜையிலிருந்து சாப்பிடுபவர்களுடன் அவர்களையும் சேர்த்துக்கொள். ஏனென்றால் உன் சகோதரன் அப்சலோமுக்குத் தப்பி நான் ஓடிப்போனபோது என்னை அவர்கள் ஆதரித்தார்கள்.
8 “நான் மக்னாயீமுக்குப் போன அந்த நாளில் என்னைக் கசப்பான சாபங்களால் சபித்த, பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயி உன்னுடன் இருக்கிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள். அவன் யோர்தான் நதி அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, ‘நான் உன்னை வாளினால் அழிப்பதில்லை’ என்று யெகோவாவைக்கொண்டு ஆணையிட்டுக் கூறினேன்.
9 ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான்.
10 இதன்பின் தாவீது தனது முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
11 தாவீது நாற்பது வருடங்கள் இஸ்ரயேலின் அரசனாயிருந்தான். எப்ரோனில் ஏழு வருடமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் அரசனாயிருந்தான்.
12 இதன்பின் சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் அரசாண்டான். அவனுடைய அரசு வளம்பெற்று உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.
அதோனியாவின் மரணம்
13 அப்பொழுது ஒரு நாள் ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை காண்பதற்காகப் போனான். பத்சேபாள் அவனைப் பார்த்து, “சமாதானத்துடன் வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.
அவன், “ஆம்; சமாதானத்துடனேயே வந்திருக்கிறேன்” என்றான்.
14 மேலும் அவன், “நான் உம்மிடத்தில் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றான்.
பத்சேபாள், “அதை நீ கூறலாம்” என்றாள்.
15 அதற்கு அவன், “உமக்குத் தெரிந்தபடி அரசாட்சி என்னுடையதாகவே இருந்தது. இஸ்ரயேலர் எல்லோரும் நான் தங்களுடைய அரசனாக வருவேன் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எல்லாம் மாறி அரசாட்சி என் சகோதரனுக்குப் போய்விட்டது. யெகோவாவிடமிருந்தே அது அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
16 ஆனால் இப்போது உம்மிடம் ஒரு வேண்டுகோளை நான் கேட்கிறேன். அதை எனக்கு மறுக்கவேண்டாம்” என்றான்.
அப்போது பத்சேபாள், “அது என்னவென்று எனக்குக் கூறு” என்றாள்.
17 அவன் தொடர்ந்து, “சாலொமோன் உமக்கு எதையும் மறுக்கமாட்டான். ஆகவே அரசனுடன் எனது சார்பில் பேசி சூனேமியாளான அபிஷாகுவை எனக்கு மனைவியாக தரும்படி கேளும்” என்றான்.
18 அதற்கு பத்சேபாள், “நல்லது. நான் உனக்காக அரசனுடன் பேசுவேன்” என்றாள்.
19 அதோனியாவுக்காக சாலொமோன் அரசனுடன் பேசும்படி பத்சேபாள் அவனிடம் போனாள். அப்போது அரசன் அரியணையிலிருந்து எழுந்து அவளுக்கு முன்னாகப்போய் தலைவணங்கினான். பின் தன் அரியணையில் அமர்ந்துகொண்டான். அரசனின் தாய்க்காக ஒரு அரியணையை வைத்தான். அவள் அவனுடைய வலப்பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.
20 “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. அதை எனக்கு மறுக்காதே” என்றாள்.
அப்பொழுது அரசன் அவளைப் பார்த்து, “என் தாயே, அதை என்னிடம் கேளும். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.
21 அதற்கு அவள், “உனது சகோதரன் அதோனியாவுக்கு, சூனேமியாளான அபிஷாகுவை மனைவியாகக் கொடு” என்றாள்.
22 அப்போது சாலொமோன் தன் தாயிடம், “ஏன் அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்கிறீர்? அப்படியானால் எனது அரசாட்சியையும் அவனுக்குக் கேட்கலாமே. ஏனெனில் அவன் எனது மூத்த சகோதரன் அல்லவா. அவனும் ஆசாரியன் அபியத்தாரும், செருயாவின் மகனான யோவாபுமே ஆட்சியைப் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டும்” என்றான்.
23 மேலும் சாலொமோன் யெகோவாவின் பெயரில் சத்தியம்பண்ணி, “இந்த வேண்டுகோளுக்காக அதோனியா தன் உயிரையே கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிக்கட்டும்.
24 என் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் என்னை உறுதியாக நிலைநிறுத்தி, தாம் வாக்குப்பண்ணியபடி எனக்கு ஒரு சந்ததியையும் தந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில், இன்று அதோனியா கொல்லப்படவேண்டும் என்பதும் நிச்சயம்” என்றான்.
25 அரசனாகிய சாலொமோன் தான் சொன்னவாறே அதோனியாவைக் கொல்லும்படி யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான். அதன்படி பெனாயா அதோனியாவை வெட்டிக்கொன்றான்.
26 அதன்பின் அரசன் ஆசாரியனான அபியத்தாரைப் பார்த்து, “ஆனதோத்திலிருக்கும் உன் வயலுக்குத் திரும்பிப்போ. நீ சாகவே தகுதியுள்ளவன். ஆனால் இப்போது நான் உன்னைக் கொல்வதில்லை. ஏனென்றால் என் தகப்பனாகிய தாவீது ஆட்சிசெய்தபோது, ஆண்டவராகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை நீ சுமந்து சென்றாய். அத்துடன் என் தகப்பனின் எல்லாக் கஷ்டங்களிலும் நீயும் உடன்பங்காளியாயிருந்து, கஷ்டங்களை அனுபவித்தாய்” என்று சொன்னான்.
27 ஆனால் சாலொமோன் அபியத்தாரை யெகோவாவின் ஆசாரியனாயிராதபடிக்கு விலக்கிப்போட்டான். இதனால் சீலோவில் ஏலியின் சந்ததிகளைப் பற்றி யெகோவா கூறிய வார்த்தை நிறைவேறியது.
28 யோவாப் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் யெகோவாவின் கூடாரத்துக்குள் ஓடி, பரிசுத்த பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான். இவன் அப்சலோமின் கலகத்தில் ஈடுபடாதபோதும் அதோனியாவின் கலகத்தில் ஈடுபட்டிருந்தான்.
29 யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்குள் ஓடி பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்று அரசனாகிய சாலொமோனுக்குச் சொல்லப்பட்டது. எனவே அவனைக் கொன்றுபோடும்படி சாலொமோன் யோய்தாவின் மகனான பெனாயாவுக்குக் கட்டளையிட்டான்.
30 அப்போது பெனாயா யெகோவாவின் கூடாரத்துக்குப் போய் யோவாபிடம், “அரசன் உன்னை வெளியே வரும்படி கூறுகிறார்” என்றான்.
அதற்கு அவன், “இல்லை. நான் இங்கேயே சாவேன்” என்றான்.
எனவே பெனாயா அரசனிடம் போய், “யோவாப் இவ்வாறே பதிலளித்திருக்கிறான்” என்றான்.
31 அதைக்கேட்ட அரசன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம்பண்ணு. குற்றமில்லாத இரத்தத்தை யோவாப் சிந்திய குற்றத்திலிருந்து என்னையும், என் தகப்பன் குடும்பத்தையும் விடுதலை பெறச் செய்;
32 அவன் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல், இஸ்ரயேலின் இராணுவத்தளபதி நேரின் மகன் அப்னேரையும், யூதாவின் இராணுவத்தளபதி ஏத்தேரின் மகன் அமாசாவையும் வாளால் வெட்டிக் கொலைசெய்தான். அதற்காக யெகோவாவே அவனைத் தண்டிப்பாராக. அவர்கள் இருவரும் யோவாபைப் பார்க்கிலும் சிறந்தவர்களும், நேர்மையானவர்களுமாய் இருந்தார்கள்.
33 அவர்கள் இருவருடைய இரத்தப்பழியும் யோவாபின் தலைமேலும், அவன் சந்ததிகளின் தலைமேலும் என்றைக்கும் இருக்கட்டும். ஆனால் தாவீதின்மேலும், அவர் சந்ததியினர்மேலும், அவர் வீட்டார்மேலும், அவர் அரியணையின்மேலும் யெகோவாவினுடைய சமாதானம் என்றென்றும் இருப்பதாக” என்றான்.
34 அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா போய் யோவாப்பை வெட்டிக்கொன்றான். யோவாப் பாலைவனத்திலிருந்த தன் சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
35 மேலும் அரசன் யோவாபுக்குப் பதிலாக யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத் தளபதியாகவும், அபியத்தாருக்குப் பதிலாக சாதோக்கை ஆசாரியனாகவும் நியமித்தான்.
36 இதற்குப் பின்பு அரசன் சீமேயியை அழைப்பித்து, “இங்கு எருசலேமில் உனக்கு ஒரு வீட்டைக் கட்டி அங்கே வாழ்ந்திடு. ஆனால் வேறு எங்கேயும் போகாதே.
37 நீ புறப்பட்டு கீதரோன் பள்ளத்தாக்கைக் கடக்கும் நாளில் சாவாய் என்பதை நிச்சயித்துக்கொள். உன் இரத்தப்பழி உன் தலை மேலிருக்கும்” என்றான்.
38 அதற்கு சீமேயி, “நீர் சொல்வது நல்லது. என் தலைவனான அரசன் சொன்னபடியே உமது அடியானாகிய நான் செய்வேன்” என்று கூறி எருசலேமில் நீண்டநாட்களாய் வாழ்ந்து வந்தான்.
39 ஆனால் மூன்று வருடங்களுக்குப் பின்பு சீமேயியின் அடிமைகள் இருவர் மாக்காவின் மகனான காத்தின் அரசன் ஆகீஸிடம் தப்பி ஓடிவிட்டார்கள். “உனது அடிமைகள் காத் பட்டணத்தில் இருக்கிறார்கள்” என்று சீமேயிக்குச் சொல்லப்பட்டது.
40 இதை சீமேயி கேள்விப்பட்டபோது, தன் கழுதையில் சேணம் பூட்டி, அவர்களைத் தேடி காத் ஊரிலுள்ள ஆகீஸிடம் போனான். அங்கே அவர்களைக் கண்டுபிடித்து, காத்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்தான்.
41 சீமேயி எருசலேமைவிட்டு காத் ஊருக்குப் போனதையும், திரும்பி வந்ததையும் சாலொமோன் கேள்விப்பட்டான்.
42 அப்போது அரசன் சீமேயியை அழைத்து அவனிடம், “ ‘இவ்விடத்தை விட்டு வேறு எங்கே போனாலும் அன்றே சாவாய் என்று யெகோவாவின் பெயரில் ஆணையிடும்படி உன்னை நான் எச்சரிக்கவில்லையா’? அதற்கு நீயும், ‘நீர் சொல்வது நல்லது. நான் அதற்குக் கீழ்ப்படிவேன்’ என்று கூறினாயே.
43 இப்போது ஏன் யெகோவாவுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமலும், என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் விட்டாய்?” என்றான்.
44 மேலும் அரசன் சீமேயியிடம், “என் தகப்பன் தாவீதுக்கு நீ செய்த எல்லாப் பிழைகளையும் உன் மனதில் நீ அறிவாய். இப்போது உனது பிழையான செயல்களுக்கு யெகோவா பதில் செய்வார்.
45 ஆனால் சாலொமோன் அரசனோ ஆசீர்வதிக்கப்படுவான். அத்துடன் தாவீதின் அரியணை யெகோவாவுக்குமுன் என்றென்றும் உறுதியாக இருக்கும்” என்றான்.
46 அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயாவுக்கு அரசன் கட்டளையிட்டபடி, அவன் போய் சீமேயியை வெட்டிக் கொலைசெய்தான்.
இதனால் அரசு சாலொமோனின் கைகளில், மேலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.