6
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல்
1 சாலொமோன் தனது ஆட்சியின் நான்காம் வருடம், இரண்டாம் மாதமாகிய சீப் மாதத்தில், யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான். இது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து நானூற்று எண்பதாம் வருடமாயிருந்தது.
2 அரசன் சாலொமோன் யெகோவாவுக்கென்று கட்டிய ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமும் உள்ளதாயிருந்தது.
3 ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் முன்பாக ஒரு முகப்பு மண்டபம் ஆலய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமுடையதாய் ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து பத்து முழம் நீண்டிருந்தது.
4 அதில் அலங்கார வேலைப்பாடுள்ள ஒடுக்கமான ஜன்னல்களை அமைத்திருந்தான்.
5 பிரதான மண்டபத்தின் சுவர்களுக்கும், பரிசுத்த இடத்தின் உட்பகுதிக்கும் எதிரே கட்டிடத்தைச்சுற்றிப் பக்க அறைகள் உள்ள ஒரு கட்டிடத்தை அமைத்தான்.
6 கீழ்த்தளம் ஐந்துமுழ அகலமும், நடுத்தளம் ஆறுமுழ அகலமும், மூன்றாம் தளம் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. ஆலய சுவருக்குள் போகாதபடி ஆலயத்தின் வெளிப்புறத்தைச் சுற்றி ஒட்டுச்சுவர்களை அமைத்தான்.
7 ஆலயம் கட்டுவதற்கு கற்குகையில் செதுக்கப்பட்ட கற்பாளங்களே பயன்படுத்தப்பட்டன. அது கட்டப்படும்போது, ஆலயம் கட்டப்படும் இடத்தில் சுத்தியலோ, உளியோ, வேறு எந்த இரும்பு ஆயுதமோ பயன்படுத்தும் சத்தம் கேட்கப்படவில்லை.
8 கீழ்த்தளத்து வாசல் ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் இருந்தது. நடுத்தளத்துக்கு ஒரு படிக்கட்டு இருந்தது. அங்கிருந்து மூன்றாம் மாடிக்கும் மற்றொரு படிக்கட்டு இருந்தது.
9 சாலொமோன் வளை மரங்களினாலும், கேதுருமரப் பலகைகளினாலும் கூரையை அமைத்து ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
10 அவன் ஆலயம் நெடுகிலும் பக்க அறைகளைக் கட்டினான். அறைகள் ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். அவை கேதுருமர உத்திரங்களினால் ஆலயத்துடன் இணைக்கப்பட்டன.
11 அப்பொழுது யெகோவாவின் வார்த்தை சாலொமோனுக்கு வந்தது.
12 அவர், “நீ கட்டும் ஆலயத்தைக் குறித்தோவெனில், நீ என் விதிமுறைகளைப் பின்பற்றி, சட்டங்களை நடைமுறைப்படுத்தி, எனது கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால், உன் தகப்பனாகிய தாவீதுக்கு நான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவேன்.
13 நான் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் வாழ்ந்து என் மக்களான இஸ்ரயேலரைக் கைவிடமாட்டேன்” என்றார்.
14 அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
15 உட்புறச் சுவர்களைக் கேதுரு மரப்பலகைகளினால் தளத்திலிருந்து உட்கூரைவரை மூடினான். ஆலயத்தின் தளத்தை மூடுவதற்காக தேவதாரு பலகைகளைப் பதித்தான்.
16 ஆலயத்தில் உள்ள பிற்பகுதியிலிருந்து இருபதுமுழ தூரத்தைப் பிரித்தெடுத்து, நிலத்திலிருந்து உட்கூரைவரை கேதுருமரப் பலகைகளை நிறுத்தி ஆலயத்தின் உள்ளே ஒரு அறையை ஏற்படுத்தினான். அது உள் பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடமாகும்.
17 இந்த அறையின் முன் இருந்த பிரதான மண்டபம் நாற்பது முழ நீளமாயிருந்தது.
18 ஆலயத்தின் உட்புறம் முழுவதிலும் கேதுரு மரப்பலகை பதிக்கப்பட்டிருந்தது. அவற்றின் இணைப்பில் விரிந்த பூக்களும், வெள்ளரிக்காய்களும் சித்திர வேலைப்பாடாகச் செதுக்கப்பட்டிருந்தன. எல்லாம் கேதுருமரப் பலகையாகவே இருந்தன. ஒரு கல்லும் வெளியே தெரியவில்லை.
19 ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடத்தை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென சாலொமோன் ஆயத்தம் பண்ணினான்.
20 உட்புற பரிசுத்த இடம் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமுள்ளதாயும் இருந்தது. அதன் உட்புறம் முழுவதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் கேதுருமரப் பலிபீடத்தையும் தங்கத் தகட்டினால் மூடினான்.
21 பின்பு சாலொமோன் ஆலயத்தின் உட்பகுதியை சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, பரிசுத்த இடத்துக்கு முன்பாக தங்கச் சங்கிலிகளை நீளமாக குறுக்கே தொங்கும்படி அமைத்தான். அதுவும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தது.
22 இவ்விதமாய் உட்புறம் முழுவதையும் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் உட்புற பரிசுத்த இடத்துக்குரிய பலிபீடத்தையும் தங்கத்தகட்டால் மூடினான்.
23 உட்புற பரிசுத்த இடத்திலே இரண்டு கேருபீன்களின் உருவத்தைச் செதுக்கி வைத்தான். அவை ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுடையதாக ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டவை.
24 முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், அதன் மறு சிறகு ஐந்து முழமாயும் இருந்தன. ஒரு சிறகின் கடைசிமுனை தொடங்கி மற்ற சிறகின் கடைசி முனைவரை பத்து முழமாய் இருந்தது.
25 இரண்டாவது கேருபீனும் பத்துமுழ அளவாய் இருந்தது. இரண்டு கேருபீன்களும் அளவிலும், வடிவத்திலும் ஒரேவிதமாய் இருந்தன.
26 ஒவ்வொரு கேருபீனும் பத்துமுழ உயரமுடையனவாயிருந்தன.
27 கேருபீன்களை ஆலயத்தின் உட்புற அறையில் வைத்தான். அவற்றின் செட்டைகள் விரிந்தபடியிருந்தன. ஒரு கேருபீனின் சிறகு ஒரு சுவரையும், மற்ற கேருபீனின் சிறகு மற்றச் சுவரையும் தொட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் மற்ற சிறகுகள் அறையின் நடுவில் ஒன்றையொன்று தொட்டபடி இருந்தன.
28 அவன் கேருபீன்களை தங்கத்தகட்டால் மூடியிருந்தான்.
29 ஆலயத்தின் உட்புறச் சுவர்களெங்கும், உள் அறையிலும், வெளி அறையிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான்.
30 அத்துடன் அவன் ஆலயத்தின் உட்புற அறை, வெளிப்புற அறையின் தளங்களைத் தங்கத் தகட்டினால் மூடினான்.
31 உட்புற பரிசுத்த இடத்தின் வாசலுக்கு ஒலிவ மரத்தினால் செய்யப்பட்ட கதவுகளையும், ஐங்கோண வடிவமுள்ள பக்க நிலைகளையும் அமைத்தான்.
32 அந்த இரண்டு ஒலிவமரக் கதவுகளிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கிய கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும் அடித்த தங்கத்தகட்டால் மூடினான்.
33 இவ்விதமாய் அவன் பிரதான மண்டபத்தின் வாசலிலும் ஒலிவ மரத்தால் நாற்கோண வடிவ பக்கநிலைகளைச் செய்துவைத்தான்.
34 இரண்டு தேவதாருமரக் கதவுகளைச் செய்தான். அவை ஒவ்வொன்றும் மடிக்கக்கூடியதாக கீழ்களினால் பூட்டப்பட்டிருந்தன.
35 இவற்றிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கப்பட்ட வேலையை அடிக்கப்பட்ட தங்கத் தகட்டினால் மூடினான்.
36 கற்பாறைகளால் சுவரை கட்டி ஒரு உள்முற்றத்தை அமைத்தான். அந்தச் சுவரின் முதல் மூன்று அடுக்குகளும் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அதன் நான்காம் அடுக்கு கேதுரு மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
37 சாலொமோனின் ஆட்சியின் நான்காம் வருடம் சீப்மாதம் யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.
38 ஆலயம் அதற்கான அளவுத்திட்ட விபரத்தின்படி பதினோராம் வருடம் எட்டாம் மாதமாகிய பூல் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது. சாலொமோன் இதைக் கட்டிமுடிக்க ஏழு வருடங்கள் சென்றன.